ஆனந்த கிருஷ்ணன் மீது இந்திய போலீஸ் குற்றச்சாட்டு

 

Ananda1மலேசியாவின் இரண்டாவது பெரிய செல்வந்தரான டி. ஆனந்த கிருஷ்ணன் மற்றும் அவரது உதவியாளர் ஆகஸ்டஸ் ரால்ப் மார்ஷல் ஆகியோருக்கு எதிராக இந்திய மத்திய போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

இவர்களுடன் 2004-2007 ஆம் ஆண்டுகளுக்கிடையில் தொலைபேசி துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் மற்றும் அவரது கோடீஸ்வர சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோரும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மேக்சிஸ் குழுமம் இந்திய அலைபேசி துறையை அதன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர உதவிய ஊழல் குற்றத்திற்காக புதுடில்லி நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டப்பட்டவர்களில் அடங்குவர் என்று போலீஸ் பேச்சாளர் கூறினார்.

இந்த வழக்கு 2008 ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கு அமெரிக்க டாலர் 29 பில்லியன் இழப்பை ஏற்படுத்திய டெலிகம்ஸ் பெர்மிட் விற்பனை சம்பந்தப்பட்ட வழக்கிலிருந்து வேறுபட்டதாகும். பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் அந்த வழக்கில் இன்னொரு முன்னாள் டெலிகம்ஸ் அமைச்சரும் பல நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

ஆனந்த கிருஷ்ணன் மற்றும் மாறன் சகோதரர்களுக்கு எதிரான புலன்விசாரணையை மத்திய புலன்விசாரணை அமைப்பான சிபிஐ 2011 ஆம் ஆண்டில் தொடங்கிற்று.