பிபிஎஸ் தலைவர் பி பூன் போ கைது செய்யப்பட்டார்

 

PPS Exco arrested1பினாங்கு தன்னார்வ காவல்படை (பிபிஎஸ்) உறுப்பினர்களுக்கு எதிராக போலீஸ் மேற்கொண்டுள்ள கடும் நடவடிக்கை தொடர்கிறது. பிபிஎஸ் தலைவர் பி பூன் போ இன்று (ஆகஸ்ட் 31) கைது செய்யப்பட்டார்.

62 வயதான பி பூன் போ பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான அவர் வாக்குமூலம் அளிப்பதற்கு பினாங்கு மாநில போலீஸ் தலைமையத்திற்கு சென்ற போது அங்கு பிற்பகல் மணி 4.30 அளவில் கைது செய்யப்பட்டார்.

பியுடன் மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் ஆகியோரும் சென்றிருந்தனர்.

பிபிஎஸ் அமைப்பு சங்கங்கள் பதிவகத்தில் (ரோஸ்) பதிவு செய்யப்படாததால் அந்த அமைப்பை சட்ட விரோத அமைப்பாக எடுத்துக் கொண்ட போலீஸ் பிபிஎஸ் உறுப்பினர்களை கைது செய்தது.

இதனைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தாங்களாகவே சரணடைய வேண்டும், இல்லையேல் அவர்களது வீடுகளில் அதிரடித் தாக்குதல் நடத்தப்படும் என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் எச்சரிக்கை விடுத்தார்.

இதனிடையே, நோர்த்-வெஸ்ட் மாவட்ட போலீஸ் தலைவர் மைஓர் பாரிடாலாட்ராஸ் வாஹிட் இதுவரையில் மொத்தம் 156 பிபிஎஸ் உறுப்பினர்கள் சங்கங்கள் சட்டம், செக்சன் 43 இன் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.

பினாங்கு முஅதலமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதையும் அவர் மறுத்தார்.