டிஸ்லெக்சியாவின் விளைவுகளும், களையும் வழியும் – முனைவர் முல்லை இராமையா

d1இந்நாட்டில், நம்முடைய தமிழ்ப் பள்ளிகளில், சிறப்பாகத் தேறும் பிள்ளைகளுக்கே அதிக ஆதரவும் மதிப்பும் தரப்படுகிறது. சிறப்பாகத் தேறும் பிள்ளைகள் போற்றப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இருப்பினும், முழுக் கவனத்தையும் அவர்கள் மேல் செலுத்தி, UPSR ரில் சிறப்பாகத் தேறவேண்டுமென்று பள்ளிகளுக்கிடையில் நடக்கும் போட்டியில், எதையுமே வாசிக்க, எழுத முடியாமல் பின்தங்கியிருக்கும் மாணவர்களின் குறையை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்யாமை சரியன்று.

மலேசியாவில், பள்ளி செல்லும் மாணவர்களுள், ஆயிரத்தில் 50 பேர் டிஸ்லெக்சியா என்னும் வாசிப்பு மற்றும் எழுதும் திறன் குன்றியிருக்கும் நரம்பியல் பிரச்சனையால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். மொத்தத்தில் சுமார் 314,000 பள்ளி செல்லும் மாணவர்கள் இந்தக் கற்றல் குறைபாட்டால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று மலேசிய டிஸ்லெக்சியா மன்றம் கூறுகிறது. அதில், சுமார் 160,000 ஆரம்பப்பள்ளி மாணவர்கள், பின்தங்கிய மாணவர்கள் என்று அரசாங்கக் கணக்கெடுப்பு காட்டுகிறது.

பிள்ளைகள் தகவல், கல்வி மேம்பாட்டு மையம் (CHILD), அவர்கள் ஆய்வுக்கு உட்படுத்திய 10 ஆரம்பத் தமிழ்ப் பள்ளிகளில், 10 முதல் 20 சதவிகித மாணவர்கள் பின்தங்கிய நிலையில் உள்ளதாகக் கூறுகிறது. அவ்வமைப்பு மேலும் கூறுவதாவது: “நாட்டின் 525 பள்ளிகளின் நிலைமையும் இதுதானா அல்லது இதைவிட மோசமானதா என்பதை நிர்ணயிக்க இயலவில்லை. இந்தப் பிரச்சனையை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், இவர்கள் எதிர்காலத்தில் குறைந்த வருமானம் தரக்கூடிய கூலி வேலைகளைச் செய்து கொண்டு, முதலாளிமார்களால் பல வழிகளில் துன்புறுத்தப்படும் தொழிலாளர்களாகவும், நாளடைவில் சட்டத்தின் கையில் சமூக விரோதிகளாகவும் மாறி விடுவர். இப்பிரச்சனையைத் தவிர்க்க, இவர்களுக்குத் தேவைப்படும் கல்வியை எப்பாடு பட்டாவது இப்போதே வழங்கிவிடுவதன் வழி, இவர்களால் நாடும் நாமும் எதிர் நோக்க இருக்கும் பிரச்சினைகளைத் தவிர்க்க இயலும்.”

ஸ்வீடன், அமெரிக்கா போன்ற நாடுகளில் குற்றவியல் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் சில அதிர்ச்சிதரும் உண்மைகளை வெளியிட்டுள்ளன.

கொலை, கொள்ளை போன்ற கொடும் குற்றங்களுக்குத் தண்டனை பெற்றுச் சிறையில் வாடும் பலரிடம் குறிப்பாக 30 வயதுக்கு உட்பட்டவர்களிடம் இத்தகைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றினின்று நாம் அறிபவை:

1. பல குற்றவாளிகள் தமது குற்றக்காரியங்களின் விளைவைச் சற்றும் உணராமல் திடீரென்று உணர்ச்சி வேகத்தில் அக்குற்றங்களைப் புரிந்துள்ளனர். இத்தகைய விளைவுணராமைக்கும், உணர்ச்சி வேகத்திற்கும் (Impulsivity) காரணம் அவர்களது டிஸ்லெக்சியா என்ற குறையே!

2. இத்தகைய குற்றவாளிகளில் 40 முதல் 70 விழுக்காட்டினர் டிஸ்லெக்சியா குறையுடையவர்களாக உள்ளனர்.

3. இவ்வாறு சிறையில் வாடும் குற்றவாளிகள் தவிர டிஸ்லெக்சியா குறையுடைய வேறு சிலர் மனவியல் பள்ளிகளுக்கும் அனுப்பப் படுகின்றனர்.

4. ஆரம்ப நிலையிலேயே இளமைப் பருவத்திலேயே டிஸ்லெக்சியா குறையைக் கண்டுபிடித்து நிவர்த்தி செய்தால் இவர்கள் குற்றவாளிகளாவதைத் தவிர்க்கலாம்.

5. டிஸ்லெக்சியா என்ற குறைபாடு இந்த இளைஞர்களிடையே வாழ்க்கையில் நம்பிக்கையின்மையை அதிகரித்து இவர்கள் சிறையில் வாடும் அளவிற்கு வளர்த்து விடுகிறது.

6. இவர்கள் இளமையிலேயே பள்ளியிலிருந்து விலகி அல்லது      வெளியேற்றப் பட்டுத் தீய வழிகளுக்கு இரையாகின்றனர்.

மேல் உள்ள ஆராய்ச்சி ஓர் எடுத்துக்காட்டே! இன்னும் பல மேல் நாட்டு ஆராய்ச்சிகள், குற்றவியலுக்கும் டிஸ்லெக்சியாவுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பைக் காட்டுகின்றன. இவற்றைக் கொண்டு பார்க்கும்போது நம்நாட்டிலும் குற்றச்செயல்களுக்கும் குற்றவாளிகளின் பள்ளித்தோல்விக்கும் நிறையத் தொடர்பிருக்கிறது என்று நம்பினால் அது மிகையாகாது.

டிஸ்லெக்சியா உடைய மாணவர்களின் மற்றோர் இயல்பு, இவர்களில் பலரால் கணிதமும் செய்ய இயலாது (Dyscalculia). இப்படியாகக் கல்வியின் அடிப்படைத் திறன்களான வாசித்தல், எழுதுதல், கணிதம் என்ற 3 திறன்களிலும் எவ்விதத்திலும் வெற்றியடைய முடியாத மாணவர்களின் நிலைமை என்ன?

d5டிஸ்லெக்சியா உடைய மாணவர்கள் தாங்களாகவே தங்களுடைய இயலாமையைப் போக்கிக் கொள்வது பெரும்பாலும் முடியாத ஒன்று. யாராலும் கவனிக்கப்படாத நிலையில் வெளியில் உள்ள தீய சக்திகள் அவர்களைக் கவர்ந்து இழுக்கின்றன. அறியாமை, தன்னம்பிக்கை இன்மை, சமுதாயத்தால் (பள்ளியால்) ஒதுக்கப்பட்ட உணர்வு, எதிர்காலத்தைப் பற்றிய அச்சம், இவையே வன்முறையாளர்கள் ஊடுருவுவதற்கு விளைநிலம்.

பள்ளியைவிட்டு ஏன் பிள்ளைகள் விலகுகிறார்கள் அல்லது தூக்கி எறியப்படுகிறார்கள்? பள்ளிச் சூழலில் அவர்கள் பொருந்தாத ஓர் அங்கமாகி விடுவதால்தான்! பள்ளிக் கூடமும் அதன் சூழலும் வெற்றியாளர்களுக்கும் அல்லது வெற்றியை நோக்கிப் போய்க் கொண்டிருப்பவர்களுக்கும் மட்டும் என்று ஆகிவிடும்போது தங்களுக்கு அங்கு இடமில்லை என்பதை மாணவர்கள் உணர்ந்து பதின்ம வயதின் உணர்ச்சிப் பெருக்கைக் கையாளத் தெரியாமல் செய்வதறியாது அவ்விடத்தைவிட்டு வெளியேறுகின்றனர். ஒன்று எடுபிடிகளாக சிறு பணிகள் செய்கின்றனர்; அல்லது அரவணைப்புத் தரும் வன்முறையாளர்களிடம் சரணடைகின்றனர்.

மற்ற வகை மாணவர்கள் பள்ளியால் வெளியேற்றப்படும் மாணவர்கள். தன்னைக் கண்டுகொள்ளாத பள்ளியில் தன் இருப்பை நிரூபிக்க சின்னச் சின்ன வன்முறையில் இறங்கி அதனால் பள்ளியிலிருந்து நீக்கப்படுபவர்கள். பெரும்பாலும் இந்த இரண்டு வகை மாணவர்களின் பிற்புலங்கள் மிகுந்த பிரச்சனையுடையவையாக உள்ளன. ஏழ்மை, உடைந்த குடும்பச் சூழல், ஆரோக்கியமற்ற வாழ்சூழல் ஆகியவையே இந்தப் பிரச்சனைகள். இதனால் வீட்டிலும் அவர்களுக்கு ஆதரவற்ற நிலை உருவாவதால் அவர்கள் வன்முறையாளர்களின் வசமாகின்றனர்.

பார்க்கும் திறனும் கேட்கும் திறனும் குறையற இருந்தும் 6 ஆண்டு கால ஆரம்பப் பள்ளியை விட்டுச் சான்றிதழ் பெற்றோ பெறாமலோ வெளியேறும் மாணவனால் வாசிக்க எழுத இயலாவிட்டால் அது யார் குற்றம்?

UPSR தேர்வில் ‘A” பெறும் பிள்ளைகளைச் சற்று மிகையாகவே கொண்டாடும் நாம், ஏன் அதே இனத்தைச் சேர்ந்த ஒரு சாராரை கண்டுகொள்வதில்லை?

என்னிடம் உதவிக்கு வரும் டிஸ்லெக்சியா உடைய தமிழ்ப் பள்ளி மாணவர்களைக் கொண்டு என்னுடைய அனுபவத்தில் நான் அறிந்தவை:

1. குறை என்னவென்று அறியாமலேயே குறை நீக்கல் வகுப்புகள் நடத்தப்படுகின்றன;

2. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்புவரை, எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஒரே அடைவு நிலையில் உள்ளார்கள்;

3. மலாய் மொழிக்கு உள்ளது போல் ஒற்றைக்கு ஒற்றை பிரத்தியேக குறைநீக்கல் ஆசிரியர், தமிழ் மொழிக்கு இல்லை;

4. தமிழ், மலாய், ஆங்கிலம் என்று மூன்று மொழிகளைக் கற்கவேண்டிய பிள்ளைகள் எந்த மொழியையும் கற்றுக் கொள்ளவில்லை.

5. கணிதத்திலும் மிகப் பின்தங்கி உள்ளனர்.

என்னிடம் வரும் இப்பிளைகளைப்போல் எத்தனை எத்தனை பிள்ளைகள் நம் தமிழ்ப் பள்ளிகளில் (CHILD ஆய்வின் படி  பார்த்தாலும்) இருக்கவேண்டும்! இந்த நிலை மாறவேண்டும்!

முதலில் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் பின்தங்கிய மாணவர்களின் குறை என்னவென்று அறிய வேண்டும். ஏன் இவ்வளவு சூடிக்கையாகப் பேசும் பிள்ளைகளால் பாடங்களில்  தேறமுடியவில்லை என்று சிந்திக்கவேண்டும். ஏன் இந்தப் பிள்ளை ஓர் இடத்தில் அமரமுடியாமல் நிலைகொள்ளாமல் தவிக்கிறது என்று ஆராய வேண்டும். அறிவுபூர்வமாகப் பேசும் இந்தப் பிள்ளை ஏன் வெண்பலகையைக் கண் கொண்டு பார்க்க மாட்டேன் என்கிறது என்று யோசிக்கவேண்டும். ஏன் இந்தப் பிள்ளை இவ்வளவு பிழையாக எழுதுகிறாள் என்று அவள் எழுத்தை ஆராயவேண்டும். பள்ளியின் சிறந்த ஓட்டக்காரனான இவனால் ஏன் ஒரு வாக்கியத்தைக் கூட ஆறாம் வகுப்பில் வாசிக்க முடியவில்லை என்று மிகத் தீர்க்கமாகச் சிந்திக்கவேண்டும்.

சராசரி மாணவர்களுக்குப் பயன் படுத்தப்படும் அதே கற்பித்தல் முறையைக் குறையுடைய மாணவர்களுக்குப் பயன்படுத்திக் கற்பித்தலால் சிறிதேனும் பயன் பெறமுடியாது.

d3டிஸ்லெக்சியாவினால் பாதிக்கப் பட்டிருக்கும் பிள்ளைகளால் எழுத்துருவில் அல்லது வரைபொழிவில் இருக்கும் வடிவங்களைக் கிரகிக்கமுடியாது. இந்தப் பிரச்சனை நிச்சயமாக ஒரு நோயல்ல. பெரும்பாலும் இப்பிள்ளைகள் அறிவுக் கூர்மையுடன் இருப்பார்கள். வெளியில் பார்த்தால் சராசரிப் பிள்ளைகளைப் போலவே இருப்பார்கள். நன்கு பேசுவார்கள், விளையாடுவார்கள். டிஸ்லெக்சியாவுக்கும் பகுத்தறியும் திறனுக்கும் சம்பந்தம் இல்லை. கண்ணும் காதும் சரியாக இயங்கியும், சராசரி அறிவு இருந்தும் வாசிக்கவும் எழுதவும் முடியாமல் போகும் சோகத்திற்குப் பெயர்தான் டிஸ்லெக்சியா!

நம் பிள்ளைக்கு எக்குறையும் இல்லை, காலப்போக்கில் படித்துக்கொள்வான்/வாள் என்று இக்குறை இருப்பதை ஏற்றுக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தும் பெற்றோர்கள் பலர் உண்டு. இது, அவர்களே தங்கள் பிள்ளையின் குறையைப் அதிகமாக்குவதற்குச் சமம்! எவ்வளவு விரைவில் இப் பிள்ளைகள் உதவி பெறுகிறார்களோ அந்த அளவிற்கு அவர்கள் முன்னேற்றம் இருக்கும். வயதாகஆகப் பிள்ளையின் கிரகிக்கும் திறன் குறைந்துகொண்டு போவதோடு ஏற்கனவே மூளையில் பதிந்த தவறான புரிதல்களை எதிர்கொண்டு அவற்றை மாற்றி கொள்வதுங்கூடச் சிரமமாகிவிடும். இந்தப் போராட்டத்தில், கொஞ்சநஞ்சம் இருக்கும் தன்னம்பிக்கையும் அற்றுப் போய்விடும்.

டிஸ்லெக்சியாவுக்கான அறிகுறிகள்:

எழுத்துகளை வாசிப்பதற்குச் சிரமப்படுதல்

எழுத்துக் கூட்டி வாசிப்பதற்குச் சிரமப்படுதல்

எழுத்துகளை நிலைநிறுத்த முடியாமை (அவர்கள் கண்களுக்கு அவை மிதப்பது போலவோ, கலங்கி இடம் மாறுவது போலவோ தோன்றும்)

வாசிக்கும்போது, சில வார்த்தைகளை விட்டுவிடுதல் அல்லது இல்லாத வார்த்தைகளைச் சேர்த்து வாசித்தல்

தெரிந்த சொற்களை மறந்துவிடுவது

எழுதுவதற்கு மிகவும் சிரமப்படுதல்

எழுத்து கோணல்மாணலாக இருப்பது

ஒரே மாதிரி இருக்கும் எழுத்துகளை மாற்றி எழுதுவது ( எ.கா.: க், ச், போன்ற எழுத்துகள்)

நிறைய எழுத்துப் பிழைகள் செய்வது

உச்சரிப்பில் பிழை செய்வது

வாசிக்கப்படுவதைக் கேட்டுப் புரிந்து கொள்ளமுடியாமை, அல்லது மறந்துவிடுவது

கணிதத்திலும் சிரமங்கள் இருக்கலாம்

மணி பார்த்தறிவதில் சிரமம்

சொந்த வேலைகளை நேரத்திற்குச் செய்யமுடியாமை

சொந்த வேலைகளைத் தானே செய்துகொள்ள முடியாமை (சட்டையில் ஒழுங்காகப் பட்டன் போடமுடியாமை, மற்றும் காலணியைச் சரியான காலில் போட்டு அதன் கயிற்றைக் கட்ட முடியாமை)

நினைவாற்றல் குறைவு ( நாள், கிழமை, நேற்று, இன்று போன்ற காலக் கணிப்பை நினைவில் நிறுத்த முடியாமை)

கை கால் மற்றும் உடல் அசைவுகளை ஒன்றிணைக்க முடியாமை

மேல் தரப்பட்டிருக்கும் பட்டியல், டிஸ்லெக்சியாவினால் பாதிக்கப்பட்டிருக்கும் பிள்ளைகளின் பெரும்பாலான d4தன்மைகளைத் தருகிறதே தவிர, முழுமையான பட்டியல் அல்ல. வேறு சில சிக்கல்களினாலும் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். உதாரணத்திற்கு, ADD (Attention Deficit Disorder) எனும் கவனத்தை நிலை நிறுத்த முடியாமை அல்லது ADHD (Attention Deficit Hyperactivity Disorder) எனும் கவனக் குறைவு மற்றும் நிலை கொள்ளாமை என்ற பாதிப்புகள். இக்குழந்தைகளை ஒர் இடத்தில் உட்காரவைப்பதே பிரம்மப் பிரயத்தனமாக இருக்கும்!

நிலை கொள்ளாமையை சில பெற்றோர்கள் செல்லமாகவும், தன் பிள்ளை மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதாகவும், இவ்வாறு செய்வதனால் பிற்காலத்தில் பெரிய அறிவாளியாக வருவான் என்றும் நினைக்கிறார்கள். இது மிகத் தவறு. இப்பிள்ளைகளுக்கு வேண்டுவதெல்லாம் அவர்களுக்கு ஏற்ற பிரத்தியேகப் பயிற்சி மற்றும் பெற்றோர் ஆசிரியரின் அரவணைப்பு.

முக்கியமாக நாம் தெரிந்து கொள்ளவேண்டியது, மேல் குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஒருசேர ஒரு பிள்ளையிடம் இருக்க வேண்டியதில்லை என்பதைத்தான். அதே நேரத்தில் இந்தக் குறைகள் அதிக அளவிலும் இருக்கலாம் மிகக் குறைவாகவும் இருக்கலாம். ஒரு பிள்ளை, வளர்ச்சிக் கோட்டில் (continuum) எங்கு இருக்கிறான்/றாள் என்று, அதற்கென்று பயிற்சிபெற்ற கல்வியாளர்கள் பிரத்தியேகச் சோதனையின் மூலம் மதிப்பிடமுடியும். அதற்கு ஏற்றாற்போல் அவர்கள் கற்பிக்கும் தளத்தை நிர்ணயித்துக் கொள்வார்கள். மனோதத்துவ நிபுணர்கள் இந்த மதிப்பீட்டைச் செய்யமுடியும். அவர்கள் கணித்துச் சொன்னபிறகு, டிஸ்லெக்சியாவுக்கான மாற்று போதனை முறை கையாளப்பட வேண்டும்.

அயல் நாடுகளைப் போல, சராசரிப் பள்ளிகள் டிஸ்லெக்சியா உடைய மாணவர்களுக்குப் போதிப்பதற்குப் பிரத்தியேக ஆசிரியர்களைப் பெற்றிருக்கவேண்டும். இதுவே சிறந்த ஏற்பாடு. காரணம் பள்ளிக்கூடம் என்ற பெரிய நீரோட்டத்தில் இந்தப் பிள்ளைகள் கலந்திருப்பது அவர்களுடைய சமூக ஆற்றல்கள் வளர்வதற்கு நன்மைபயக்கும். அது மட்டுமல்லாது  ‘தான் மட்டும் வேறு மாதிரி’ என்ற தாழ்வு மனப்பான்மை எழாமல் இருக்கும்.

எவ்வாறு மலாய் மொழியில் பின்தங்கிய மாணவர்களுக்காக பெரும்பாலான பள்ளிகளில் ஒரு பிரத்தியேக ஆசிரியர் இருக்கின்றாரோ அதேபோல் தமிழ் மொழிக்கும் ஒவ்வொரு பள்ளிக்கும் டிஸ்லெக்சியா உடைய மாணவர்களுக்கு இத்துறையில் கற்பித்தல் பயிற்சி பெற்ற ஒரு ஆசிரியர் இருத்தல் அவசியம்.

டிஸ்லெக்சியா உடைய பிள்ளைகளுக்கு ஒற்றைக்கு ஒற்றை என்ற முறையில் போதிப்பது சாலச் சிறந்தது. இது நடைமுறைக்கு ஒவ்வாதபோது ஒத்த ஆற்றல் கொண்ட பிள்ளைகளை இரண்டு அல்லது மூன்று பிள்ளைகள் கொண்ட சிறிய  குழுக்களாகப் பிரித்துப் போதிப்பது நல்லது. எவ்வாறாயினும் ஆசிரியரின் பிளவுபடாத கவனிப்பு இவர்களுக்குத் தேவை.

டிஸ்லெக்சியா பெண்பிள்ளைகளைவிட ஆண்பிள்ளைகளையே அதிகம் பாதிக்கிறது. எல்லா இனத்திலும் இந்தப் பாதிப்பு இருக்கிறது. இந்தப் பாதிப்பு மரபணு சார்ந்தது என்று அறியப்படுகிறது. சில வேளைகளில், குழந்தை தாயின் கர்ப்பப்பையிலிருந்து வெளிவரும்போது ஏற்படும் அதீதச் சிரமங்களினால் கூட மூளையில் இந்தப் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அடிப்படையில் நாம் புரிந்து கொள்ளவேண்டியது, இப்பிள்ளைகளுக்கு மூளை வேறுவிதமாக இயங்குகின்றது என்பதையே. அந்த மாற்று இயக்கத்திற்கு ஏற்றாற்போல் நாம் கற்பித்தல் முறையை மாற்றி கொண்டால் வெற்றி அடைய முடியும்.

d2ஒரு குழந்தைக்கு டிஸ்லெக்சியா உள்ளது என்று எவ்வளவு விரைவாக அறிந்து, வழக்கமான கற்பித்தல் முறையில் குறுக்கீடு (intervention) செய்து பொருத்தமான முறையில் கற்பிக்கின்றோமோ அந்த அளவிற்கு நல்லது.

ஒவ்வொரு குழந்தையும் போற்றத்தக்க குழந்தை! இதை, அண்மையில் வெளியான இந்தி திரைப்படம் “Taare Zameen Par” மிகவும் அருமையாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. அனைத்துப் பெற்றோரும் ஆசிரியரும் பார்க்கவேண்டிய படம் இது. குழந்தைக்குள் குன்றியிருக்கும் ஆற்றல்களை ஒரு ஆசிரியர் எவ்வாறு மலரச்செய்கிறார் என்பதே கதையின் கரு.

இத்தகைய டிஸ்லெக்சியா குறையுடைய பிள்ளகளும் நமது பிள்ளைகளே என்ற உணர்வும் நமது சமுதாயத்தின் ஓர் அங்கமான அவர்களது கல்வி மேம்பாட்டில் கரிசனமும் கொள்ளவேண்டியது இந்த நாட்டுத் தமிழினத்தின் தலையாய கடமைகளுள் ஒன்று.

படிக்க அறியாப் பிள்ளைகளைப் பரிவுடன் காண்போம் வாரீரே!

செய்வதறியாப் பிள்ளைகளைச் சேர்ந்தே காப்போம் வாரீரே!

பெற்றோருக்கோ ஆசிரியர்களுக்கோ டிஸ்லெக்சியா பற்றிய கேள்விகள் இருப்பின் இம்முகவரியில் தொடர்பு கொள்ளலாம். [email protected]