இலங்கை அரசுடன் பேசலாம், இந்தியா மத்தியஸ்தம் வகிக்குமா?

tna_govtஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியமை முக்கியமான நிகழ்வு என்பது மறுக்க முடியாத உண்மை.

மோடியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியமை முக்கியமானது என்பதற்காக, மோடி பலமான உறுதி மொழிகளை எங்களுக்குத் தந்து விட்டார் என்று யாரும் கருதிவிடக்கூடாது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடந்து, பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சி அமைத்து, சில மாதங்களில் பிரதமர் மோடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்தமை இலங்கைத் தமிழர்களுக்கு அவர் கொடுத்த முதல் மரியாதை எனலாம்.

தவிர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திப்பது தொடர்பில் இலங்கை அரசின் நிலைப்பாடு பற்றி இம்மியும் கரிசனை கொள்ளாது கூட்டமைப்புடன் மோடி சந்திப்பை ஏற்படுத்தியமை எங்களுக்கான அரசியல் இராஜதந்திர வெற்றி என்ற அடிப்படையிலும் மோடியுடனான சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

அதே சமயம் தன்னைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இலங்கை அரசுடன் பேசிப் பிரச்சினையைத் தீருங்கள். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம் என்ற கருத்தை பிரதமர் மோடி நிச்சயமாகக் கூறியிருப்பார், கூறியிருக்க வேண்டும்.

ஒரு நாட்டின் பிரதமர் என்ற அடிப்படையில் அவ்வாறு கூறுவது நியாயமானதும் ஏற்புடையதுமாகும்.

இச் சந்தர்ப்பத்திலேயே, இலங்கை அரசுடன் தமிழ்த் தரப்பு நடத்திய பேச்சுவார்த்தைகள், இலங்கை -இந்திய ஒப்பந்தம், அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசு காட்டி வரும் அசமந்தப் போக்குகள் என்பன குறித்து தெளிவாக எடுத்துரைக்கும் பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருந்திருக்கும்.

இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பது எமக்குத் தெரியாத விடயமல்ல.

ஆனால் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் இன்னுமொரு தடவை தமிழர்கள் ஏமாற்றப்படாமல் இருக்க வேண்டும்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் தமிழர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

அது மட்டுமன்றி மூன்றாந்தரப்பின் மத்தியஸ்தம் இல்லாததன் காரணமாக பேச்சுவார்த்தையின் விபரங்கள் மறைக்கப்படும் அளவிலேயே உள்ளன.

விட்ட இடத்தில் இருந்து பேசுவது என்ற நிலைமைக்கு இலங்கை அரசு ஒரு போதும் சம்மதிக்கப் போவதில்லை.

எனவே, இனப்பிரச்சினைத் தீர்வில் இலங்கை அரசுடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தயார். ஆனால் பேச்சுவார்த்தைக்கு பிரதமர் மோடியின் அரசு மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் எனக் கேட்பது கூட்டமைப்பின் கடமையும் இராஜதந்திரமுமாகும்.

இவ்வாறானதொரு கேள்வி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் விடுக்கப்பட்டதா? என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அவ்வாறானதொரு கேள்வி விடுக்கப்பட்டு அதனை பிரதமர் மோடி நிராகரித்திருப்பாராயின், ஐயா! இலங்கை அரசை நம்பி நாங்கள் ஒரு போதும் பேச்சுவார்த்தைக்குப் போகமாட்டோம்.

அவ்வாறு போவதை தமிழ் மக்கள் விரும்பவும் மாட்டார்கள். நீங்கள் மத்தியஸ்தம் வகித்தால், நாங்கள் பேசுவதற்குத் தயார் என்று ஆணித்தரமாகக் கூறுவதும் கட்டாயம்.

எனினும் இவை எல்லாம் நடந்திருக்குமா? என்பது பற்றி கற்பனை செய்ய முடியவில்லை.

ஆனால் பிரதமர் மோடியின் அரசை மத்தியஸ்தம் வகிக்குமாறு கேட்பது, ஐ.நா சபையின் விசாரணை எப்படி அமையும் என்பதை அவதானிப்பதற்கான ஒரு கால அவகாசமாக எடுத்துக் கொள்ளலாம்.

இது தமிழ்த் தரப்பின் மகாபுத்திசாலித்தனமாக இருக்கும்

TAGS: