மலாய்க்காரர்கள் மட்டுமே உண்மையாக சுதந்திரத்திற்கு போராடினர், முன்னாள் தலைமை நீதிபதி

 

CJexஇந்நாட்டின் சுதந்திரத்திற்காக மலாய்க்காரர்கள் மட்டுமே உண்மையாகப் போராடினர் என்று இந்த நாட்டின் முன்னாள் நீதிபதியான அப்துல் ஹமிட் முகம்மட் நேற்று யூனிவர்சிட்டி சிலாங்கூர் (யுனிசெல்) நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கூறினார்.

அவசரக் காலத்தில் அச்சமூக உறுப்பினர்கள் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராகப் போராடி உயிர் தியாகம் செய்துள்ளனர் என்று கூறிய அவர், அதனால்தான் சுதந்திரம் கோரியவர்கள் மலாய்க்காரகள் என்று விளக்கம் அளித்தார்.

பிரிட்டீசார் மலாயாவை ஆண்ட போது மலாயன் யூனியனை எதிர்த்தவர்களும் மலாய்க்காரர்கள்தான் என்று மேலும் விளக்கம் அளித்தார்.

சுதந்திரம் வரப் போகிறது என்பதைத் தெரிந்து கொண்ட பின்னர்தான் அவர்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மலாய்க்காரர்-அல்லாதவர்கள் சுதந்திரத்திற்கான இயக்கத்தில் சேர்ந்து கொண்டனர் என்று அந்த முன்னாள் நீதிபதி கூறிக் கொண்டார்.

“பாருங்களேன், நோக்கங்கள் கூட வேறுப்பட்டவை. நாட்டை விடுவிக்க மலாய்க்காரர்கள் சுதந்திரத்திற்காக போராடிய வேளையில், மலாய்க்காரர்கள்-அல்லாதவர்கள் தங்களுடைய நலன்களை சுதந்திரத்திற்குப் பின்னர் பாதுகாப்பதற்காக அதைச் செய்தனர்.

“மலேசிய இந்திய காங்கிரஸ் (எம்ஐசி) முதலில் தோற்றுவிக்கப்பட்டதே தன்னார்வலர்களை இந்தியாவுக்கு அனுப்பி பிரிட்டீசாரிடமிருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் கோருவதற்காகும்”, என்று விகடத்தனமாக பேசி தமது அறிவின் ஆழத்தை அவர் வெளிப்படுத்தினார்.

உரிமைப்படி மலாயா பெடரேசனை மலாய்க்காரர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறிக் கொண்டார்.

“ஆனால், இல்லை. மலாய்க்காரர்கள் தங்களுடைய அதிகாரங்களைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்கப்படுகின்றனர். மேலும், ஒற்றுமை என்று கூறப்படும் ஒன்றுக்காக மலாய்க்காரர்கள் தங்களுடைய உரிமைகளை தியாகம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்”, என்றாரவர்.

இந்த முன்னாள் தலைமை நீதிபதி பெர்காசா போன்ற மலாய் அரசு சார்பற்ற அமைப்புகளால் உருவாக்கப்பட்ட தேசிய ஒற்றுமை கூட்டணிக்கு தலைமை ஏற்றிருக்கிறார்.