ரஷ்யாவில் முருகனுக்கு உதவினோம்

 

Murugan1ரஷ்யாவிலுள்ள மலேசிய தூதரகம் மலேசிய மாணவர் எம். முருகன் பிள்ளைக்கு உதவ தவறி விட்டது என்ற குறைகூறலை மலேசிய வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது.

முருகன் பிள்ளை ரஷ்யாவுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு அவர் அங்குள்ள விமானநிலையத்தில் ஐந்து நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

“தூதரகத்திற்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டவில்லை என்றாலும், அது அந்த மருத்தவ மாணவருடன் தொடர்புகொள்ள முயற்சி செய்தது”, என்று அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

அம்மாணவர் கோலாலம்பூருக்கு செப்டெம்பர் 7 இல் திருப்பி அனுப்பப்படும் வரையில் அவரைச் சந்திக்க தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.

“அந்த மாணவரின் உரிமைகளை கவனித்துக் கொள்ளவும் பாதுகாக்கவும் தூதரக அதிகாரிகள் ரஷ்ய அதிகாரிகளுடன் நெருக்கமாக செயல்பட்டனர். அவரை திருப்பி அனுப்புவதற்கான அடுத்த விமானப் பயணம் வரையில் அவருக்கு நாளொன்றுக்கு மூன்று முறை உணவு வழங்கப்பட்டது”, என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.

முருகன் மலேசிய தூதரகத்திடமிருந்து எவ்வித உதவியையும் பெறவில்லை என்றும் அவர் இமிகிரேசனில் தடுத்து வைக்கப்பட்டிருக்கையில் அவருக்கு நாளொன்றுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே வழங்கப்பட்டது என்று அஸ்ட்ரோ அவானி முன்னதாக அறிவித்தது.

தமது கல்வியைத் தொடர்வதற்காக ரஷ்யாவுக்கு திரும்பிச் சென்ற முருகனுக்கு ஏன் மறு நுழைவு விசா மறுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.