சந்தியாகோ: சிலாங்கூர் தண்ணீர் ஒப்பந்த நடவடிக்கை சட்டவிரோதமானதாக இருக்கலாம்

 

charles-santiagoசிலாங்கூருக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான முன்மொழியப்பட்டுள்ள ரிம9.65 பில்லியன் மதிப்பிலான தண்ணீர் ஒப்பந்த நடவடிக்கை சட்டத்திற்கு முரணானதாக இருக்கலாம், ஏனென்றால் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் மாநிலத்தை ஆளுவதற்கான சட்டப்பூர்வமான தகுதி இல்லாதவராக இருக்கிறார் என்று டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ இன்று கூறினார்.

பேராக் நெருக்கடி 2009 இன் அடிப்படையில், சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறும் நிலையில் இல்லாத காலிட் மாநிலத்தை ஆளுவதற்கான சட்டப்பூர்வமான தகுதியை இழந்து விட்டார்.

“ஆகவே, காலிட்டின் இன்றையத் தகுதி ஓர் இடைக்காக மந்திரி புசாரின் தகுதியை விட பலவீனமானது”, என்று சந்தியாகோ இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

பேராக் மாநில ஆட்சிப் பறிப்பு விவகாரத்தில் பெடரல் நீதிமன்றம் 2010 ஆம் ஆண்டில் அளித்திருந்த தீர்ப்பை சுட்டிக் காட்டிய சந்தியாகோ, நாளை கையொப்பமிடவிருக்கும் தண்ணீர் மறுசீரமைப்பு நடவடிக்கை சட்ட விரோதமானதாக இருக்கலாம் என்று மத்திய அரசுக்கு சட்டத்துறை தலைவர் ஆலோசனை கூற வேண்டும் என்றார்.

Santiago, c2தண்ணீர் ஒப்பந்தம் மட்டுமல்ல, சிலாங்கூர் மாநில சொத்துகள் சம்பந்தப்பட்ட எந்த ஒப்பந்தத்திலும் காலிட் இப்ராகிம் கையொப்பமிட முடியாது என்று அவர் மேலும் கூறினார்.

காலிட் இப்ராகிமுடன் ஒப்பந்தத்தில் ஈடுபடும் எந்த ஒரு மூன்றாம் தரப்பினரும் எதிர்கால சிலாங்கூர் அரசாங்கம் அது போன்ற ஒப்பந்தங்கள் அதனை சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தாது என்ற நிலைப்பாடை எடுக்கக்கூடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சந்தியாகோ தெரிவித்தார்.

ஆனால், அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட தமக்கு அதிகாரம் இருக்கிறது என்றும், சந்தியாகோவுக்கு அந்த அளவுக்கு எதுவும் தெரியாது என்றும் காலிட் நேற்று கூறியுள்ளார்.