தேர்வுத் தாள்கள் மீண்டும் கசிந்தால் துணைப் பிரதமர் பதவி துறக்க வேண்டு,ம்

muhiaddin

யுபிஎஸ்ஆர் தேர்வுக்கான அறியல் மற்றும் ஆங்கில மொழி தாள்கள் கசிந்துள்ளதைத் தொடர்ந்து எதிர்காலத்தில் எந்த ஒரு முக்கியமான தேர்விலும் கசிவுகள் ஏற்பட்டால் பதவி துறக்க துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முகைதின் யாசின் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பள்ளி தேர்வுகளின் சீரிய நிலையைப் பாதுகாப்பதற்கான தமது ஈடுபாட்டை வெளிப்படுத்தும் வகையில் முகைதின் யாசின் பதவி துறக்கும் வாக்குறுதியை அளிக்க வேண்டும் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங் இன்று கூறினார்.

“ஆனால், இந்த வாக்குறுதியை அளிக்கும் துணிவு அவருக்கு இருக்கிறதா?”, என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கேட்டுள்ளார்.

தேர்வுத் தாள்கள் கசிந்துள்ளதற்காக முகைதின் யாசின் மன்னிப்பு கோருவது போதுமானதல்ல என்று செர்டாங் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் தெரிவித்தார்.

Dap - ong“செப்டெம்பர் 30 இல் நடைபெற விருக்கும் யுபிஎஸ்ஆர் அறிவியல் தேர்வு தாளில் அம்மாதிரியான கசிவுகள் ஏற்படாது என்று அவர் உறுதியளிக்க வேண்டும்”, என்று ஓங் இன்று வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

இன்னொரு கசிவு

ஆங்கில மொழி தேர்வுத் தாள்கள் 014/1 மற்றும் 014/2 (தாள்கள் 1 மற்றும் 2) கசிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று இரண்டாவது கல்வி அமைச்சர் இட்ரீஸ் ஜூசோ இன்று கூறியிருக்கிறார்.

இக்கசிவுகளுக்கு கல்வி அமைச்சும் தேர்வு சிண்டிகேட்டும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நுருல் இசா கூறினார்.

“மன்னிப்பு மட்டும் போதாது. இக்கசிவுக்கு யார் பொறுப்பு என்பதைக் கண்டறிய ஒரு குழு அமைக்கைப்பட வேண்டும்”, என்று அவர் கேட்டுக் கொண்டார்.