ரித்துவானை கைது செய்து குழுந்தையை மீட்டுக் கொடுக்க ஐஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவு

 

IGP ordered1பாலர்பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் கே.பத்மநாதன் என்ற முகமட் ரித்துவான் அப்துல்லாவை கைது செய்து குழந்தை பிரசன்னா டிக்சாவை மீட்டு தாயாரிடம் ஒப்படைக்க ஈப்போ உயர்நீதிமன்றம் இன்று போலீஸ் படை தலைவர் காலிட் அபு பாக்காருக்கு உத்தர விட்டுள்ளது.

ஐஜிபி நடவடிக்கை எடுக்க அவரை கட்டாயப்படுத்தும் மெண்டாமஸ் என்ற உத்தரவை உயர்நீதிமன்ற நீதிபதி லீ ஸ்வி செங் வழங்கினார்.

“இந்த மெண்டாமஸ் உத்தரவுடன் அரசின் வளங்களை ஐஜிபி பயன்படுத்த முடியும் என்பதால், இந்திரா தமது குழந்தையை மலேசியா தினமான செவ்வாய்க்கிழமைக்கும் முன்னதாக காண இயலும் என நம்பப்படுகிறது”, என்று நீதிபதி லீ கூறினார்.

சட்டத்தை அமல்படுத்தும் தலைமை அதிகாரி என்ற முறையில் ஐஜிபி அவரது கடமையை நியாயமாகவும், உறுதியாகவும், நடுநிலை தவறாமலும் ஆற்றுவார், நாம் மலேசிய தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் நமது நாட்டில் சட்ட ஆளுமை மேலோங்கி இருக்கிறது என்பதையும் நாம் உறுதிப்படுத்தலாம், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் எவரும் இல்லை, மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் நீதிமன்றம் வீணாக செயல்படாது, என்ற எதிர்பார்ப்புகளை மக்கள் கொண்டிருக்கின்றனர்”, என்று நீதிபதி கூறினார்.

மூத்த அரசாங்க வழக்குரைஞர் ஹிசாம் இஸ்மாயில் இந்தத் தீர்ப்பை நிறுத்தி வைப்பதற்கான தடை உத்தரவுக்கு தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி நிராகரித்தார்.