மலாய்க்காரர்கள் சோம்பேறிகள்தான், தமது கருத்தை தற்காக்கிறார் மகாதீர்

 

DrM-lazy defendsகடுமையான குறைகூறல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதிலும், மலாய்க்காரர்கள் சோம்பேறிகள் என்ற தமது சர்சைக்குள்ளாகியிருக்கும் கருத்தை மகாதீர் இன்று தற்காத்து பேசியுள்ளார்.

“என்னை நானே ஏமாற்றிக்கொள்ள விரும்பவில்லை. சோம்பேறி என்றால், சோம்பேறி என்று கூறுவேன்.

“மக்கள் விரும்பவில்லை என்றால், நல்லது, அது பற்றிக் கவலையில்லை. நான் அம்னோ தலைவராக இருந்த போது கூட நான் எப்போதும் திட்டிக் கொண்டுதான் இருந்தேன்”, என்று இன்று மிங்குவான் மலேசியாவில் வெளியிடப்பட்டுள்ள நேர்காணலில் அவர் கூறியிருக்கிறார்.

அந்த நேர்காணைலில், வாசிக்க வேண்டியது மற்றும் கடுமையாக உழைக்க வேண்டியது ஆகியவற்றின் தேவையை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மலாய்க்காரர்கள் கடுமையாக உழைக்கவில்லை என்று அவர் கருதுகிறா என்ற கேள்விக்கு, அந்த முன்னாள் பிரதமர் உள்ளூர் பல்கலைக்கழகங்களை எடுத்துக்காட்டாக முன்வைத்தார்.

“நாம் பல்கலைக்கழகத்திற்கு சென்றால், 70 விழுக்காட்டினர் பெண்கள். ஆண்கள் எங்கே? அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் மாட் ரெம்பிட் ஆகிவிடுகிறார்கள்.

“அதனால்தான் (அவர்கள்) கடுமையாக உழைப்பதில்லை என்கிறேன். அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு சென்றாலும், முறையாக கற்பதில்லை”, என்றாரவர்.

மற்ற இனத்தினரின் தரத்தை அடைய மலாய் சமூகம் கடுமையாக உழைக்க வேண்டியது அவசியம் என்று அவர் மேலும் கூறினார்.

அவர் தமது “ரொட்டி பாய்” கதையை மீண்டும் கூறினார்.

“நான் இப்போது ரொட்டி கடைகளை வைத்திருக்கிறேன். நான் தெளிவாகக் கூறுகிறேன். நான் வெட்கப்படுகிறேன், ஏனென்றால் மலாய், சீன, மியன்மார் மற்றும் இதர தொழிலாளர்களுக்கிடையில்…மலாய்க்கார தொழிலாளர்கள் பணத்தைக் கண்டால், அவர்கள் (எல்லாவற்றையும்) மறந்து விட்டு நாணயமில்லாதவர்களாகி விடுகின்றனர்”, என்று மகாதீர் அப்பட்டமாகக் கூறினார்.

ஒரு சம்பவத்தில், அவரது மேனேஜர் இதர தொழிலாளர்களுடன் சேர்ந்து பணத்தை உறிஞ்ச திட்டமிட்டார். ஆனால் அது இன்னொரு தொழிலாளரால் தடுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

“இம்மாதிரியான மனப்பாங்கை கொண்டிருப்பதின் காரணத்தால் நான் பல மலாய்க்காரர்களை நீக்க வேண்டியதாயிற்று”, என்றாரவர்.

கடந்த செவ்வாய்க்கிழமை மகாதீர் மலாய்க்காரர்கள் பற்றி கூறிய கருத்துக்களைத் தொடர்ந்து அவர் சமீப காலமாக இது போன்றவற்றையே கூறிக்கொண்டிருக்கிறார் என்று பலர் கூறுகின்றனர்.