என்ஜிஒ: நஜிப்பின் உண்மையான குணம் வெளிச்சத்திற்கு வந்து விட்டது

Najib-Authoritarian coloursஅரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புக் குரல்களை நசுக்குவதற்காக அரசாங்கம் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் கட்டவிழ்த்து விட்டுள்ள கடும் நடவடிக்கைகள் பிரதமர் நஜிப்பின் உண்மையான சர்வாதிகார மனப்பாங்கை வெட்ட வெளிச்சமாக்கி விட்டது என்று மனித உரிமைகள் உன்னிப்பு ஆசியப் பகுதி துணை இயக்குனர் பில் ரோபர்ட்சன் இன்று விடுத்துள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

“சுயேட்சையான கருத்து தெரிவித்தலுக்கு எதிராக பிரதமர் நஜிப் மேற்கொண்டிருக்கும் கடும் நடவடிக்கைகள் அவரது உரிமைகளைப் பறிக்கும் உண்மையான பண்பைக் காட்டி விட்டது”, அவர் மேலும் கூறுகிறார்.

“தெளிவற்ற குற்றங்களை” தடை செய்யும் அந்த தேச நிந்தனைச் சட்டம் இப்போது நஜிப் அரசாங்கத்தை குறைகூறுபவர்களை நொருக்குவதற்கான ஒரு வசதியான ஆயுதமாகியுள்ளது என்றாரவர்.

“தங்களுவைய கருத்துகளைத் தெரிவித்ததற்காக ஆர்வலர்களையும் எதிரணித் தலைவர்களையும் சிறையில் அடைப்பது ஆதிக்க ஆட்சிக்கு இட்டுச் செல்லும் நிலையற்ற வழியாகும் என்பதை நஜிப் உணர வேண்டும்”, என்று ரோபர்ட்ஸன் சுட்டிக் காட்டினார்.

மலேசியாகினியின் செய்தியாளர் சூசன் லூன் மீது இச்சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் அவர் குறிப்பிட்டார். பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போ கூறியதை அவர் வெளியிட்டார்.

13 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பு பிரதமர் நஜிப் இந்த தேச நிந்தனைச் சட்டத்தை அகற்றப் போவதாக அளித்திருந்த வாக்குறுதியை ரோபர்ட்ஸன் அவருக்கு நினைவுறுத்தினார்.

பின்னடைவுகள் இருந்தும் தேர்தலில் பாரிசான் வெற்றி பெற்றது. ஆனால், பிரதமர் நஜிப் அவர் கொடுத்திருந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கியுள்ளார் என்பதை சுட்டிக் காட்டிய ரோபர்ட்ஸன், அரசியல் நோக்கங்களுக்காக பேச்சுரிமைக்கு முரணாக மக்களுக்கு எதிராக வழக்குத் தொடர  தொடர்ந்து பயன்படுத்தப்படும் இச்சட்டத்தை நஜிப் அகற்ற வேண்டும்”, என்று அவர் கேட்டுக் கொண்டார்.