தாய்-மொழி போதிக்க ஆசிரியர் வேண்டுமா? ஏற்பாடு செய்ய தயார், முகைதின் யாசின்

 

Kubur campaign-muhyddinகிளந்தானிலுள்ள சயாமிய சமூகத்தினர் அமைத்திருக்கும் 16 பள்ளிகளுக்கு உதவ மலேசிய அரசாங்கம் ரிம200,000 வழங்கும்.

இந்த நிதி உதவியை இன்று கம்போங் ஜுபாகாரில் துணைப் பிரதமர் முகைதின் யாசின் அறிவித்தார். அச்சமூகத்திற்கு நிதி உதவி 2012 இல் நிறுத்தப்பட்டது. அதற்குப் பின்னர் இப்போது நிதி உதவி கொடுக்கப்படுகிறது என்றாரவர்.

ஆனால், மாநில மேம்பாடு குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது முகைதின் வெடுக்கென்று பதில் அளித்தார்: “மேம்பாடு? மாநில அரசை கேளுங்கள்”.

இருப்பினும், முக்கிம் சிம்பாங்கான் ஹிலிர் மசூதியை மேம்படுத்த ரிம500,000 கொடுக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

 

தாய்-மொழி ஆசிரியர்களை கொண்டு வர உதவுவோம்

 

பெங்காலான் குபோரில் பேசிய முகைதின் யாசின் சாயாமிய சமூகத்தினருக்கு அளிக்கப்பட்ட நிதி உதவி கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கும் தாய்மொழியை புரிந்து கொள்வதற்கும் ஆகும் என்றார்.

“அவர்களுக்கு தாய்-மொழி (சயாமிய மொழி) போதிக்கும் ஆசிரியர்கள் தேவை போன்ற உதவிதள் வேண்டுமென்றால், நாங்கள் அதற்கான ஏற்பாடு செய்ய உதவ முடியும். அது எங்களுக்கு ஒரு பிரச்சனை அல்ல ஏனென்றால் அது எனது பொறுப்பாகும்.

“நமது குழந்தைகள் கல்வி அறிவற்றவர்களாக இருப்பதை நான் விரும்பவில்லை, ஏனென்றால் கல்வி அறிவில்லாமல் அவர்களால் வாழக்கையில் முன்னேற முடியாது. அது நாட்டிற்கு பிரச்சனையாகி விடும்”, என்று முகைதின் கூறினார்.

 

இன்று வரலாற்றுப்பூர்வமான நாள்

 

தாய்-மொழி பள்ளி வாரியத் தலைவர் போன் ஏ கீ அரசாங்கம் அளித்துள்ள உதவிக்கு நன்றியுடையவராக இருப்பதாகக் கூறினார்.

“இன்று வரலாற்றுப்பூர்வமான நாள். துணைப் பிரதமர் நமது கோயிலுக்கு (வாட்)  வருகையளித்து நமக்கு ரிம200,000 மதிப்புள்ள நிதி உதவி அளித்துள்ளார்.

“அந்நிதி 16 சயாமியப் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வி போதிப்பதற்கு பயன்படுத்தப்படும். அதில் 70 தன்னார்வலர்களும் 800 சயாமிய மாணவர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்”, என்று போன் கூறினார்.

பெங்காலான் குபோர் தொகுதியின்  மொத்த 24,039 வாக்காளர்களில் 6.81 விழுக்காட்டினர் சயாமிய சமூகத்தினராவர்.

பெங்காலான் குபோர் மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகியவற்றுக்கிடையிலான ஓர் எல்லைப்புற நகராகும்.