ரித்துவானை கைது செய்ய ஐஜிபிக்கு இடப்பட்ட உத்தரவுக்கு எதிராக ஏஜி மேல்முறையீடு

 

IGP ordered1முஸ்லிமாக மதம் மாறி அவரது ஆறு மாத பெண் குழந்தையைக் கடத்திச் சென்று அக்குழந்தையும் மதம் மாற்றம் செய்து, நீதிமன அவமதிப்புக்காளான கே.பத்மநாதன் என்ற முகமட் ரித்துவானை கைது செய்து இப்போது ஆறு வயதாகி விட்ட குழந்தை பிரசன்னா டிக்சாவை மீட்குமாறு ஈப்போ உயர்நீதிமன்றம் போலீஸ் படை தலைவர் காலிட் அபு பாக்காருக்கு உத்தர விட்டிருந்தது. அந்த உத்தரவை நிறைவேற்ற ஐஜிப்பிக்கு நீதிமன்றம் ஏழு நாள் அவகாசம் அளித்திருந்தது.

ஈப்போ உயர்நீதிமன்றம் ஐஜிபிக்கு விடுத்திருந்த உத்தரவுக்கு எதிராக சட்டத்துறை தலைவர் அலுவலகம் மேல்முறையீடு செய்து அதற்கான அறிவிப்பு கடிதத்தை இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பாலர்பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் வழக்குரைஞர் மு. குலசேகரனின் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளது.

இந்த மேல்முறையீடு குறித்து வழக்குரைஞரும் டிஎபி நாடாளுமன்ற உறுப்பினருமான மு. குல்சேகரன் இந்த சமயங்கிடையிலான பராமரிப்பு தகராற்றில் நியாயம் மற்றும் நீதி ஆகியவற்றை கவனத்தில் கொண்டு சட்டத்துறை தலைவர் (ஏஜி) இந்த மேல்முறையீட்டை தொடரக்கூடாது என்றார்.

ஈப்போ உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக செய்யப்படும் இந்த மேல்முறையீட்டின் வழி ஏஜி போலீஸ் படைத் தலைவருக்கும் இதர அரசு ஊழியர்களுக்கும் தவறான செய்தியை அனுப்புகிறார் என்று குலசேகரன் தெரிவித்தார். நீதிமன்ற தீர்ப்புகள் இறுதியானவை அல்ல என்பது இந்த மேல்முறையீட்டின் வழி அறிவுறுத்தப்படுகிறது என்றாரவர்.

அனைத்து நீதிமன்ற உத்தரவுகளும் கைது ஆணைகளும் எதிர்க்கேள்வி இன்றி அமல்படுத்தப்பட வேண்டும். அது இவ்வழக்கில் குழந்தை பிரசன்னா டிக்சா அதன் தாயார் மற்றும் உடன்பிறப்புகளுடன் மீண்டும் ஒன்றுசேர்வதற்கு உதவும் என்று குலா கூறினார்.

மேல்முறையீடு செய்வதின் வழி இந்த வழக்கில் ஐஜிபின் செயல்பாடுகள் சரியானது என்று ஏஜி ஒப்புக்கொள்வதாகத் தெரிகிறது. இது உண்மையான நிலையா என்று அவர் மேலும் வினவினார்.

“பிரதமர் நஜிப், உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி மற்றும் இதர அமைச்சர்கள் இம்மேல்முறையீடு முடிவை ஆதரிக்கிறார்களா?”, என்று அவர் கேட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை, ஈப்போ உயர்நீதிமன்றம் ரித்துவானை கைதி செய்து பிரசன்னா டிக்சாவை ஏழு நாள்களுக்குள் மீட்குமாறு 1 kulaகாலிட்டுக்கும் போலீஸ்சுக்கும் உத்தர விட்டது.

ஏஜி மேல்முறையீட்டு நடவடிக்கையை கைவிட்டால் அது இந்திராவுக்கு நியாயம் கிடைக்க வகை செய்யும்.

ரித்துவான் அவருக்கு உரிய அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு விட்டார். இனிமேல் எவ்வழியும் இல்லை. மேலும், அவர் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டிலிருந்து விடுபடவில்லை என்பதைச் சுட்டிக் காட்டிய குலா, “அவரை கைது செய்ய மறுப்பது நீதிமன்ற உத்தரவுகளை எவ்விதத் தண்டனைக்கும் உட்படுத்தப்படாமல் உதாசீனப்படுத்தலாம் என்ற போலீயான கூற்றுக்கு வலிமை அளிக்கிறது”, என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

கடந்த புதன்கிழமை மேல்முறையீட்டு நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்புக்கு எதிராக ரித்துவான் மேல்முறையீடு செய்ய கூடுதல் அவகாசம் கோரி செய்திருந்த மனுவை நிராகரித்துள்ளது.

இவ்வழக்கு 2009 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையில் தீர்வு காணப்படாமல் இருந்து வருவதை குலா சுட்டிக் காட்டினார்.

குலாவுடன் ஈப்போ செய்தியாளர் கூட்டத்தில் இருந்த இந்திரா காந்தி எனது முழந்தையை திரும்பப் பெறுவதற்கு ஏன் இவ்வளவு காலம் பிடிக்கிறது என்று கேட்டார்.