அடுத்த எம்பி அஸ்மின்?

 

Azmin-next mbஅடுத்த வாரம், பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி சிலாங்கூர் மாநிலத்தின் புதிய மந்திரி புசாராக நியமிக்கப்படலாம் என்ற ஆருடம் வலுவடைந்து வருகிறது.

அரண்மனைக்கு நெருக்கமான ஒரு மூத்த அரசியல் பார்வையாளர் அஸ்மின் அந்த வேலைக்கு மிகத் தகுதியானவர் என்று ஒப்புக் கொண்டார்.

“ஒன்று மட்டும் நிச்சயம், வான் அஸிசா மந்திரி புசாராக மாட்டார்”, என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

அஸ்மின் பெயர் குறிப்பிடப்பட்டால், அன்வார் நிச்சயமாக விட்டுக் கொடுப்பார் என்று பிகேஆருக்கு நெருக்கமானவர்கள் மலேசியாகினியிடம் கூறினர்.

“அன்வார் ஆட்சியாளர் முடிவுக்கு பணிந்தால், கட்சியில் அஸ்மின் அலிக்கு எதிரான கூட்டத்தினர் அன்வாரிடம் பணிய வேண்டியிருக்கும்”, என்று பெயரை வெளியிட விரும்பாத நெருக்கமான ஒருவர் கூறினார்.
மேலும், பிகேஆர் சிலாங்கூர் தலைவரான அஸ்மின் அலி நியமிக்கப்பட்டால் பக்கத்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொணர மாட்டார்கள். மாறாக, பாஸ் வேட்பாளர் நியமிக்கப்பட்டால் அது சாத்தியமே.

இதனிடையே, அதன் உறுப்பினர் ஒருவரை சுல்தான் மந்திரி புசாராக நியமிக்க தேர்வு செய்தால் அதை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதில் பாஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

sabuஇருப்பினும், மந்திரி புசார் பதவி பாஸ் வேட்பாளருக்கு வழங்கப்பட்டால் கட்சி அதனை நிராகரிக்கும் என்று பாஸ் துனைத் தலைவர் முகம்மட் சாபு மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

“அப்பதவி பாஸ்சுக்கு வழங்கப்பட்டால் நாங்கள் பாஸ் மத்திய குழு செப்டெம்பர் 7 இல் எடுத்திருந்த முடிவுப்படி அதனை நிராகரிப்போம்”, என்று அவர் மீண்டும் இன்று பத்து பகாட்டில் செய்தியாளர்களிடம் வலியுறுத்திக் கூறினார்.

பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலியும் மந்திரி புசார் இருக்கை பிகேஆருக்கு சொந்தமானது என்றார்.

“நாங்கள் முடிவெடுத்து விட்டோம். அது பிகேஆருக்குச் சொந்தமானது. அது பாஸ் மத்திய குழுவின் முடிவு”, என்றாரவர்.