புதிய தடையுத்தரவின் வழி ஐஜிபி நீதிமன்ற அவமதிப்பிலிருந்து தப்பித்தார்

 

IGP to goபாலர்பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் சமயங்களுக்கிடையிலான பராமரிப்பு வழக்கில் போலீஸ் படையின் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு பாக்கார் ஈப்போ உயர்நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றம் சாட்டப்படும் சாத்தியத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழியை சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) உருவாக்கியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து ஏழு நாள்களுக்குள் கே. பத்மநாதன் என்ற முகமட் ரித்துவான் அப்பதுல்லாவை கைது செய்யுமாறு ஐஜிபியை கட்டாயப்படுத்தும் மெண்டாமஸ் என்ற ஆணைக்கு ஒருதலையான தடையுத்தரவை சட்டத்துறை தலைவர் (ஏஜி) மேல்முறையீட்டு நீதிமன்றத்திலிருந்து பெற்றதன் வழி ஐஜிபி நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக் கொண்டுள்ளார்.

ஒருதலையான தடையுத்தரவு என்பது ஒரு கட்சிக்காரர் சார்பாக பெற்ற உத்தரவாகும். இதனைத் தொடர்ந்து, இப்போது இரு கட்சிக்காரர்களும் நீதிமன்றத்திற்கு செப்டெம்பர் 25 இல் வர வேண்டும். அப்போது இந்த தடையுத்தரவு நிரந்தரமானதா என்பது முடிவு செய்யப்படும்.

கடந்த புதன்கிழமை மேல்முறையீட்டு நீதிமன்றம் எடுத்த இந்த தடையுத்தரவு முடிவு இன்று இந்திராவின் வழக்குரைஞரும் ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.குலசேகரனிடம் சேர்க்கப்பட்டது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவை நீதிபதி அஸியா அலி என்பவர் மட்டுமே எடுத்தார். வழக்கமாக மூன்று நீதிபதிகளின் அமர்வு முடிவெடுக்கும். இதற்கு முன்பு முகமட் நிஷார் ஜமாலுடினுக்கும் ஸாம்ரி அப்துல் காடிருக்கும் இடையிலான வழக்கிலும் அவ்வழக்கை செவிமடுத்த ஒரே ஒரு மேல்முறையீட்டு நீதிபதி தடையுத்தரவை வழங்கியுள்ளார்.

kulaஏஜி செய்திருந்த மனு தேவையற்றது என்பதோடு நியாயமற்றதுமாகும் என்று குலசேகரன் கூறினார். ஒரு கட்சிக்காரர் சார்பாக மனு செய்வதைவிட தமக்கும் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அனுப்பியிருந்தால் மூன்று மேல்முறையீட்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விவாதத்தை நடத்தியிருக்கலாம் என்றாரவர்.

குலா, அரசாங்கத்தின் உள்நோக்கம்தான் என்ன?

தங்களுடைய வாதத்தையும் கேட்பதைத் தவிர்த்து அரசாங்கம் எடுத்த ஒருதலையான உத்தரவு பெறுவதற்கான நடவடிக்கையை குலா சாடினார். அரசாங்கம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் உள்நோக்கம்தான் என்ன என்று அவர் வினவினார்.

இந்த ஒருதலையான தடையுத்தரவு பற்றி அறிந்த இந்திரா மிகவும் கலக்கமடைந்துள்ளார் என்று கூறிய குலா, இதை நாங்கள் எதிர்ப்போம் என்றார்.

பத்மநாதனை கைது செய்ய ஐஜிபி மறுப்பது அவர் தொடர்ந்து நீதிமன்றத்தை அவமதிப்பதற்கு உதவுவதாகும் என்றார் குலா.

“நீதி நிருவாகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஒருதலையான தடையுத்தரவை தள்ளிவைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வோம் என்று இந்திராவுக்கு நானும் எனது வழக்குரைஞர்கள் குழாமும் உறுதியளித்துள்ளோம்”, என்று குலா தமது கடப்பாடை வெளிப்படுத்தினார்.