அதிகாரங்கள் பகிரப்பட்டால் பிரிவினையை தடுக்கலாம் என்ற பாடம்’ – சம்பந்தர்

sambanthanதமது அரசியல் தலைவிதி என்ன என்பது குறித்த முடிவை ஸ்காட்லாந்து மக்களே எடுக்கும் வகையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை ஒரு சிறந்த ஜனநாயக நடவடிக்கை என்று இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் வரவேற்றிருக்கிறார்.

அதேவேளை, ஸ்காட்லாந்து மக்கள் எடுத்த முடிவு எதுவாக இருந்த போதிலும் ஐக்கிய ராச்சியத்தின் முக்கிய கட்சிகள் அனைத்தினதும் தலைவர்களும், ஸ்காட்லாந்துக்கு இன்னமும் மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருப்பதையும் அவர் வரவேற்றிருக்கிறார்.

ஆகவே ஒரு தனியான வாழ்விடத்தில் உள்ள, தனியான இன மக்களுக்கு உரிய அதிகாரங்களை உரிய வகையில் வழங்குவதன் மூலம் பிரிவினையை தடுத்துக்கொள்ள முடியும் என்பது இலங்கைக்கு உட்பட பல நாடுகளின் தலைவர்களுக்கு ஒரு பாடம் என்றும் அவர் கூறினார்.

ஸ்காட்லாந்து ஏற்பாடு இலங்கைக்கு பொருந்துமா? – அமைச்சர் தேவானந்தா கருத்து

 நாட்டுக்கு நாடு பிரச்சினைகள் வேறுபட்டிருக்கின்ற போதிலும், தற்போதைய நிலையில் பிரிவினைக்கான கோஷம் ஒன்று தொடர்பில் இலங்கையில் கருத்துக் கோரப்பட்டால் மக்கள் அதனை நிராகரித்து விடுவார்கள் என்றே தான் நம்புவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார்.

douglas devanandhaஸ்காட்லாந்தில் ஒரு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடந்து முடிந்திருக்கும் நிலையில், அது போன்ற ஒரு ஏற்பாடு இலங்கை தமிழர் பிரச்சினைக்கும் பொருந்துமா என்று கேட்டதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ்வாறு கூறினார்.

ஸ்காட்லாந்தில் காலம்காலமாக அங்குள்ள மக்களுக்கு படிப்படியாக அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டு, அதன் இறுதியிலேயே இப்படியான ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டிய அமைச்சர், ஆனால் இலங்கையில் இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக் கூடிய இலங்கை – இந்திய ஒப்பந்தம் போன்ற வாய்ப்புக்களை இலங்கை தமிழ் தலைவர்கள் தவறவிட்டுவிட்டதாகவும் கூறினார். -BBC

TAGS: