எப்படியாவது வாழலாம் என்பது எமது குறிக்கோள் அல்ல -சி.வி.விக்னேஸ்வரன்

எப்படியாவது வாழலாம் என்பது எமது குறிக்கோள் அல்ல. இப்படித்தான் வாழ்வோம் என்று அறவழி வரம்புகளை ஆழமாகப் பதித்து முன் செல்பவர்கள் எம் மக்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கோப்பாய் கோமகன் வன்னியசிங்கத்தின் 55வது நினைவு தினமும் இலங்கை தமிழரசு கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கான வரவேற்பு விழாவும் நேற்று மாலை நீர்வேலி மகளிர் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

அந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஓரிரு தினங்களுக்கு முன்னர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ என்னைத் தாக்கி ஒரு செய்தி விட்டிருக்கின்றார்.

எம்முடன் வடமாகாண முதலமைச்சர் முரண்படுகின்றமையினால் வடக்கிற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அரசாங்கத்தின் செயற்திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்றால் நகர சபைகள், மாகாணசபைகள் அனைத்தும் நகர அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார்.

இதனையே ஓரிரு வாரங்களுக்கு முன்னர் அவரின் சகோதரர் இங்கு வந்து கூறிவிட்டுச் சென்றார். அதாவது வடக்கில் அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்றால் நாங்கள் தனது அமைச்சுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று கூறிச் சென்றார்.

அவர்களிடையே போட்டி பொறாமை இருக்கின்றதோ அதை நான் அறியேன். ஆனால் நான் இருவரிடமும் கேட்கும் கேள்வி இது தான். செயற்திட்டங்களுக்குப் பணம் ஹம்பாந்தோட்டையில் இருந்து வரவில்லை அல்லது அமெரிக்காவில் இருந்து சகோதரர் இருவரும் இங்கு வந்த போது எடுத்து வரவில்லை.

அவை வெளிநாட்டுப் பணம். ஐக்கிய நாடுகள், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கிகளிடம் இருந்து கடன்களைப் பெற்றுள்ளோம். பல்வேறு நாடுகளிடம் இருந்து கொடைகளையும் பெறுகின்றோம். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் போரினால் பாதிக்கப்பட்டதை உணர்ந்து, கருத்தில் எடுத்து அவர்கள் எமக்குப் பணம் தந்துள்ளார்கள் அல்லது கடன் தந்துள்ளார்கள்.

அதைச் செலவு செய்வதும் செயற்திட்டங்களை நிறைவேற்றுவதும் எம் நாட்டு நிறுவனங்களும் எமது மாகாணசபை அலுவலர்களும்.

இதனை இரு சகோதரர்களும் எமக்குப் பெற்றுக் கொடுக்காதிருந்தால் நாம் நேரிடையாகக் கோரியும் வெளிநாட்டார் எமக்குப் பணம் தந்திருப்பார்கள், கடன் வழங்கியிருப்பார்கள். இதில் உங்களுடன் நாங்கள் இணைந்து செயற்பட வேண்டும் என்று ஏன் கருதுகின்றீர்கள்? உங்களைத்தான் எங்கள் மக்கள் வேண்டாம் என்று விரட்டி விட்டார்களே.

ஆகவே செயற்திட்டங்களை எங்களிடம் கையளித்துவிட்டு நீங்கள் எங்களுடன் இணைந்து செயலாற்றலாமே! நாங்கள் ஏன் உங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்? போரில் நீங்கள் வென்றபடியாலா அல்லது முழு இலங்கைத் தேர்தலில் உங்கள் கட்சி வென்றபடியாலா?

ஆனால் உங்கள் கட்சி வடமாகாணத்தில் எத்தருணத்திலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லையே.

ஆகவே அன்பார்ந்த சகோதரர் கோத்தபாயவிடம் நான் கேட்பது செயற்திட்டங்களை எங்களைச் செய்ய விடுங்கள். நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்புத் தாருங்கள் என்று. சகோதரர் பசில் அவர்களுக்கு நான் கூறுவது உங்களை விட எங்களால் செயற்திட்டங்களை ஊழல் இன்றி, ஊறு இன்றி, உண்மையாக நடைமுறைப்படுத்த முடியும். ஆதலால் அவற்றை எங்களுக்கு வழங்குங்கள் என்று.

அதே கூட்டத்தில் தன்னைப் போல் என்னையும் அரசாங்கத்துடன் சேர்ந்து அவர்களிடம் இருந்து பல நன்மைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மற்றுமொருவர் அதாவது கொழும்பு நகர பிதா சகோதரர் முஸாமில் என்னைக் கேட்டிருக்கின்றார்.

கொழும்பு புதுக்கடையில் அதாவது ஹல்ஸ்டோபில் நான் பிறந்தபடியால் எனக்கு பண்டமாற்று, வணிக, வாணிப அரசியல் பற்றி நன்றாகத் தெரியும்.

வட, கிழக்கு மாகாண மக்கள் வாணிப அடிப்படையில் அரசியல் செய்ய முன் வந்தவர்கள் அல்ல. அப்படியிருந்திருந்தால் எங்கள் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் அண்மைக் காலத்தில் சென்ற வழியில் எமது கட்சியும் சென்றிருக்கும்.

நாங்கள் அபிவிருத்தி என்ற மாயையை விட எங்கள் பிறப்போடு ஒட்டிய பிறப்புரிமையை வென்றெடுக்க விழைபவர்கள் என்பதை என் முஸ்லிம் சகோதரர் தம் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

எப்படியாவது வாழலாம் என்பது எமது குறிக்கோள் அல்ல. இப்படித்தான் வாழ்வோம் என்று அறவழி வரம்புகளை ஆழமாகப் பதித்து முன் செல்பவர்கள் எம் மக்கள் என்பதை சகோதரருக்குக் கூறி வைக்கின்றேன்.

எங்களுடைய ஒத்த கருத்துடைய ஒரு முஸ்லிம் கட்சி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எங்களுடன் தோளோடு தோள் நின்று இன்று முன்னேறுவது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது.

அவர்களும் வணிக, வாணிப அரசியலை ஒதுக்கிவிட்டு நல்லாட்சிக்கான நடைபாதையில் எம்மோடு நடந்துவர நலமான நடவடிக்கைகளில் இறங்கியவர்கள். என மேலும் தெரிவித்தார்.

TAGS: