மீனவர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண உண்மையான ஈடுபாட்டைக் காட்டுங்கள்: இலங்கை அதிபரிடம் பாஜக வலியுறுத்தல்

  • இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவை சனிக்கிழமை சந்தித்த பாஜக தேசிய பொதுச் செயலரும், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளருமான முரளிதர ராவ்.
  • இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவை சனிக்கிழமை சந்தித்த பாஜக தேசிய பொதுச் செயலரும், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளருமான முரளிதர ராவ்.

தமிழக மீனவர் வாழ்வாதார பிரச்னைக்கு தீர்வு காண்பது, இலங்கைத் தமிழர்கள் நலன்களைப் பாதுகாப்பது உள்ளிட்டவற்றில் உண்மையான ஈடுபாட்டைக் காட்ட வேண்டும் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவிடம் கொழும்பு சென்றுள்ள பாஜக தலைவர்கள் வலியுறுத்தினர்.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஆசிய நாடுகளின் அரசியல் கட்சிகள் மாநாடு செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பாஜக தேசிய பொதுச் செயலரும், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளருமான முரளிதர ராவ், பாஜக வெளியுறவுப் பிரிவு அமைப்பாளர் விஜய் ஜாலி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்கள் கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 19) இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீûஸயும், இலங்கை அரசியல் கட்சிகளின் சில தலைவர்களையும் சந்தித்தனர். இதன் தொடர்ச்சியாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவை இருவரும் வெள்ளிக்கிழமை சந்தித்தனர்.

இந்தச் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் முரளிதர ராவ் கூறியதாவது: இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவை அவரது மாளிகையில் வெள்ளிக்கிழமை நானும், விஜய் ஜாலியும் சந்தித்தோம். சுமார் 45 நிமிஷங்கள் இச்சந்திப்பு நடைபெற்றது. இலங்கைத் தமிழர்கள் நிலைமை, தமிழக மீனவர்கள் பிரச்னை, இரு நாட்டு நல்லுறவுகள் ஆகியவை குறித்து அவருடன் விவாதித்தோம்.

இலங்கையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுடன் நிறுத்தப்பட்டுள்ள பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என இலங்கை அதிபரைக் கேட்டுக் கொண்டோம். இலங்கை அரசியலமைப்புக்கு உள்பட்டு தமிழர்களுக்கான தீர்வைப் பெற இலங்கை அரசு முழு ஈடுபாடு காட்ட வேண்டும்.

“அனைவரின் கையில் அனைவரின் வளர்ச்சி’ என்ற நமது பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனையைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நட்புணர்வுடன் இலங்கை அதிபருக்கு அறிவுறுத்தினோம்.

இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்படும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு அண்மைக் காலமாக காட்டி வரும் நடவடிக்கைக்கு நாங்கள் பாராட்டுத் தெரிவித்தோம். அதேசமயம், மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் “டிராலர்கள்’, படகுகள், வலைகள் போன்றவை இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. அவற்றைத் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டோம்.

இலங்கை – தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வுகாண புதிய கடல் சார் இந்திய – இலங்கை கொள்கையை உருவாக்க வேண்டும். இது இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதார பிரச்னை என்பதால் அதற்கு சுமுகமான முறையில் தீர்வு காண்பதற்கு உண்மையான ஈடுபாட்டைக் காட்ட வேண்டும் என்று இலங்கை அதிபரைக் கேட்டுக் கொண்டோம்.

இந்தியா, இலங்கையில் பரஸ்பரம் சுற்றுலா, கலாசார உறவுகளை மேம்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், இரு நாட்டு குடிமக்களிடையிலான நட்புறவை மேம்படுத்தும் என்று அவரிடம் தெரிவித்தோம்.

நாங்கள் முன்வைத்த அனைத்துக் கோரிக்கைகளையும் கேட்டறிந்த இலங்கை அதிபர், இரு நாடுகளிடையே நல்லுறவு மேலும் வலுப்பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் தெளிவுபடுத்தியதாக அவர் கூறினார் என்றார் முரளிதர ராவ்.

TAGS: