“ஓர் இனம் மட்டும்தான் இந்நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்ற கோட்பாடு இங்குத் தேவை இல்லை!”

ROL_057c2_thumbநூருல் இசா அன்வார் தனது அரசியல் வாழ்க்கையை 1998-ல் தொடங்கினார். மலேசிய அரசியல் அமைப்பைச் சீரமைக்க ‘Reformasi’ எனும் இயக்கத்தின் வழி இவரது போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார். ஆதலால், மக்கள் இவரை ‘Princess Of Reformation’ என அழைக்கத் தொடங்கினர். அரசியல் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளில் உள்ள அதிகார துஷ்பிரயோகத்தையும் அதிலுள்ள ஊழல் செயல்பாடுகளையும் முற்றாக எதிர்க்கும் இவர்  ஐக்கிய நாட்டு மனித உரிமை சபை நடத்திய மாநாட்டிலும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. SUARAM (Suara Rakyat Malaysia) மற்றும் ALTSEAN-Burma (Alternative ASEAN Network on Burma) போன்ற அரசு சார்பற்ற இயக்கங்களோடு கைக்கோர்த்து உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஜனநாயகம் தொடர்பான பிரச்சினைகளை முன்னிலை படுத்தியுள்ளார். முன்னாள் மலேசியத் துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் மூத்த மகளான இவர் மின்சாரம் & மின்னியல் மற்றும் ஆசியப் பொது உறவுத் துறைகளில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். தற்பொழுது, மக்கள் நீதி கட்சி (People’s Justice Party – PKR) உதவித் தலைவராகவும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.

கேள்வி: ‘Reformasi’ எனும் இயக்கத்தின் வழி மலேசிய அரசியலில் பல நிலைகளில் சீர்த்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில் உங்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறீர்கள். ஆயிரக்கணக்கான மக்கள், முக்கியமாக இளைஞர்கள் நீங்கள் நடத்திய கூட்டங்களில் கலந்து கொண்டு பேரளவில் ஆதரவு வழங்கினர். ஆனால், தற்பொழுது இதன் வீச்சு குறைந்து வருவதோடு அல்லாமல் எதிர்க்கட்சிக் கூட்டணியின் மேல் மக்களின் நம்பிக்கையும் குறைந்து வருகின்ற சூழலைப் பற்றி விளக்கவும்.

நூருல் இசா: நான் இந்தக் கூற்றை முழுமையாக ஒப்புக்கொள்கின்றேன். 13வது  பொதுத் தேர்தலுக்கு முன்பு மலேசிய அரசியலில் பல நிலைகளில் சீர்த்திருத்தம் செய்யப்பட வேண்டிய தேவையின் குரலை நாங்கள் அழுத்தமாக ‘Reformasi’ எனும் இயக்கத்தின் வழி முன் வைத்தோம். மக்களின் எண்ணமும் அதுவாக இருந்ததால், எங்களை முழுமையாக நம்பியிருந்தனர். மக்களின் உரிமைகளைப் பற்றி மக்களிடம் பேசினோம். அப்பொழுதுதான் நடப்பு அரசியல் மீது, மக்களின் தார்மீகக் கோபங்கள் எங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தன. அதற்கு முன்பே ‘பெர்சே’ இயக்கம் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வை நாடு முழுவதும் சென்று மக்கள் மனதில் ஏற்படுத்தியிருந்தது. இந்த விழிப்புணர்வின் காரணமாக, பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு அதிகமான வாக்குகள் கிடைத்தன. இது ஒரு வரலாற்றுப் பதிவாகும். அதாவது ஆளுங்கட்சியைவிட,  52 சதவிகித மக்கள் தேர்வு ஓட்டுகள் எதிர்க்கட்சிக்குக் கிடைத்திருந்தபோதிலும் பாரிசான் நாடாளுமன்ற நாற்காலிகளின் கணக்கெடுப்பின்படி முன்நிலையில் நின்று ஆட்சியை கைப்பற்றினர். இருப்பினும், இந்தச் சூழல் மக்களுக்கு அதிர்ச்சியையும் அதிருப்தியையும் மட்டுமே தந்தது.

தேர்தல் முடிவுகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன், இச்சூழலை இரண்டு விதமாக கையாண்டிருந்திருக்கலாம். முதலாவதாக, தேர்தல் முடிவுகளை  முற்றிலுமாய் புறக்கணித்து டத்தோஸ்ரீ நஜீப் அவர்களைப் பிரதமராக ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது. அதாவது அண்மையில் தாய்லாந்து நாட்டின் மக்கள் அவர்களின் பிரதமரை நிராகரித்தது போல. இரண்டாவது விதம், கட்டாயத்தின் அடிப்படையில் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொண்டு, பிரதமர் நஜீப் அவர்கள் reconciliation of politic முறையின் கீழ் அரசியலைத் தொடர்வது. ஆக, இவ்விரண்டு தேர்வுகளையும் கட்சித் தலைவர்களின் முன் பரிந்துரைக்கும் பொழுது அவர்களின் தேர்வாக இரண்டாவது விதம் அமைந்தது, அதாவது தேர்தல் முடிவுகளை அப்படியே ஏற்றுக்கொள்வது. இதில் மனநிறைவை அளிக்காத விஷயம் என்னவென்றால் 30 நாடாளுமன்ற நாற்காலிகளை பாரிசான்  வெல்ல அவர்கள் கையாண்ட உக்திகள். அதில் ஒன்று, இவர்கள் பெரும்பான்மை நாடாளுமன்ற நாற்காலிகளை வெல்ல, தபால் வழி வந்த ஓட்டுகள், காவல் படை மற்றும் இராணுவப் படை வீரர்களின் ஓட்டுக்களைத் தங்களுக்குச் சாதகமாக்கி, ஆட்சி அமைத்ததுதான்.

அதோடு நின்றுவிடாமல், தேர்தலுக்குப் பிறகு பாரிசான் கட்சி மக்களின் எண்ணத்தைத் திசை திருப்ப, எதிர்க்கட்சிக் கூட்டணிக் கட்சிகளிடையே பிளவுகளை ஏற்படுத்த முயன்றது. மத, இன வாதப் பிரச்சினைகளை மக்கள் முன் கொண்டு வந்தது. அம்னோ இதை ஊதிப் பெரியதாக்கியது. மக்கள் மனதில் எதிர்க்கட்சியின் மீது வெறுப்புணர்ச்சியைத் தூண்டியது. அம்னோ இந்த விஷயத்தை மேலும் வெற்றிகரமாக முன்னெடுக்க ‘இஸ்மா’ மற்றும் ‘பெர்காசா’ இயக்கங்களின் உதவியையும் நாடியது.

கூடுதலாக ‘ஹுடுட்’ சட்டம் பற்றிய பிரச்சினை வேறு மேலும் எதிர்க்கட்சியின் அரசியல் சூழலைச் சிக்கலாக்கியது. ஆக, வெளிப்படையாகவே கூறுகிறேன், இதுபோன்ற சிக்கல்கள் எங்களுக்குப் பெரிய சவால்களாக அமைந்தன. இருந்தபோதும், நடப்பு பிரச்சனைகளான பொருள்களின் விலையேற்றம், ஜி.எஸ்.தி (GST) போன்ற விடயங்களில் எங்கள் போராட்டம் தொடர்வது மக்களுக்கு எங்கள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும்.

கேள்வி: மலேசியாவில் ஹுடுட் சட்டத்தை அமலாக்கம் செய்ய சாத்தியமுண்டா?

நூருல் இசா : ஒரு காலமும் இது சாத்தியமாகாது. பாரிசான், மக்களின் அரசியல் பார்வையைத் திசை திருப்பவே பாஸ் கட்சியின் இந்த ஹூடுட் சட்டம் தொடர்பான கூற்றைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர். அவ்வளவுதான். புருணையைப் பாருங்கள். ஹுடுட் சட்டம் அங்கு அமலாக்கம் செய்தபின், உலகம் முழுவதுமுள்ள பெரிய வர்த்தக நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் தங்களின் வியாபாரங்களிலிருந்தும் முதலீடு செய்வதிலிருந்தும் பின் வாங்கிக்கொண்டனர். மக்களில் முக்கியமாக சீனர்கள் மற்றும் இந்தியர்களின் எண்ணத்தில் பிளவை மட்டுமே ஏற்படுத்த ஹூடுட் சட்ட விவகாரத்தை அவர்கள் சாதகமாக்கிக்கொண்டனர். இவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு நாம் அடிப்பணிந்தால் நாம்தான் முட்டாள்கள்.

கேள்வி: ஒரு வேளை எதிர்க்கட்சிக் கூட்டணி 13வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால், தற்போது அமலில் இருக்கும் அரசியல் சிக்கல்களுக்குத் தீர்வு கிடைத்திருந்திருக்குமா?

நூருல் இசா: முதலில் நாங்கள்தான் நாட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என கூறிக்கொள்ள விரும்பவில்லை. கண்டிப்பாக தற்பொழுது நிலவி வரும் அரசியல் சிக்கல்களை உடனடியாக முற்றிலும் தீர்த்து விட முடியாது. இதற்கு காலம் தேவை. பிரச்சினைகள் முளைத்துக்கொண்டேதான் இருக்கும். என்னைப் பொறுத்தவரை முதிர்ச்சியான, அனுபவமுள்ள, தலைமைத்துவப் பயிற்சிப் பெற்ற அரசியல்வாதிகள் அல்லது தலைவர்கள் நமக்கு தேவை. நேர்மையான தலைமைத்துவத்தின் கீழ் நாட்டு மக்கள் வாழ வேண்டும். இது பல்லின மக்கள் சார்ந்த ஒரு நாடு. உணர்ச்சிகளைத் தூண்டும் சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும்.

ஓர் இனம் மட்டும்தான் இந்நாட்டை ஆட்சிசெய்ய வேண்டும் என்ற கோட்பாடு இங்கு தேவை இல்லை. இனப் பாகுபாடும் தேவையில்லை. இந்தியர்களை மலாய்க்காரர்கள் பிரதிநிதிக்க வேண்டும்; அதேபோல் சீனர்கள் இந்தியர்களை பிரதிநிதிக்க வேண்டும். எல்லோரும் ‘நம் மக்கள்’ என்ற அடிப்படைக் குணம் இங்கு இருப்பின் இனப் பாகுபாட்டு அவசியமே இல்லாமல் போய்விடும். மக்கள் சேவை மட்டுமே தலைவர்களின் தத்துவமாக இருப்பின் நம் நாட்டில் இன அரசியல் ஒழிந்துவிடும் எனும் நம்பிக்கை எனக்குள்ளது. இதுதான் புதிய மலேசிய அரசியல். எங்கள் போராட்டம் இந்த மாற்றங்களை நோக்கியே நகர்கிறது. நாம் முதிர்ச்சியடைந்தவர்கள். எதிர்க்கட்சிகள் இதையெல்லாம் கடைப்பிடித்து வருவதால்தான் பல பிரச்சினைகளை இலகுவாகக் களைய முடிகின்றது. பாரிசான் நீண்ட காலம் ஆட்சி புரிந்த அனுபவமுள்ள கட்சி.  இனப்பாகுபாடு பார்ப்பதால்தான் அவர்களால் மக்கள் பிரச்சினைகளைக் களைய இயலவில்லை. இதனால்தான் மக்கள் அதிருப்தி அடைகிறார்கள். நல்ல தலைமைத்துவம், சிறந்த கொள்கைகள் எங்களிடம் இருந்தாலும்கூட, மக்கள் பாரிசானைத்தான் தொடர்ந்து தேர்ந்தெடுத்து வருகின்றார்கள். இது மக்கள் தேர்வாக இருப்பதால் அவர்களால் மட்டுமே இதற்குத் தீர்வுக் காண முடியும்.

கேள்வி: 13வது பொதுத் தேர்தலிலும் சிலாங்கூரை எதிர்க்கட்சிக் கூட்டணி வென்றது. இந்த வெற்றி 14வது பொது தேர்தலிலும் nurulizzahநிலைக்குமா?

நூருல் இசா: இது சுலபமான விஷயம் இல்லை. நான் முன்பே சொன்னதுபோல  எதிர்க்கட்சிகள் மேலும் வலுவாகவும் தீவிரமாகவும் செயல்பட வேண்டும். இந்த முறை நாங்கள் வெற்றி பெற்றிருந்தாலும்கூட அல்லது சிறந்த சேவையை வழங்கிருந்திருந்தாலும் கூட மக்கள் இன்னும் சிறந்த ஆளுநர், சிறந்த விவேகமான அரசாங்கத்தை எதிர்பார்க்கின்றனர். மேலும், உலக அரசியல்களில் நிகழும் போட்டிக் களம் இங்குமுள்ளது. இது இயற்கையான விஷயம். நாங்கள் வெல்லவேண்டியது மக்கள் மனதைதான். மக்களின் ஆதரவினால் மட்டுமே எங்களால் தொடர்ந்து செயல்பட முடியும்.  கடந்த பொதுத் தேர்தலின்போது, மக்கள் எங்களுக்காக உண்மையாக உழைத்தனர். எங்கள் கட்டளைகளை மதித்தனர்; எங்கள் வேண்டுகோள்களுக்கு இணைங்கினர். அடுத்தத் தேர்தலின்போது இதே போன்று எங்களோடு இணைவார்கள் என்ற நம்பிக்கையுண்டு.

நம் நாட்டுப் பொருளாதாரம் அழிவை நோக்கிப்போய் கொண்டிருக்கின்றது. அதோடு நமது நாட்டின் கல்வி  தரத்தையும் சற்று  கவனியுங்கள். அண்மையில் வெளிவந்த பிசா (Programme For International Student Assessment – PISA) 2012ஆம் ஆண்டின் அறிக்கையின்படி ஏழ்மையான வியட்னாம் நாட்டைவிட நமது கல்வி தரம் கீழ்நிலையில் உள்ளது. இது வெட்கப்பட வேண்டிய விஷயம். அதுமட்டுமல்லாமல், நமது நாடு எல்லா வளங்களும் நிறைந்த நாடு. அதிகரித்துக்கொண்டே வரும் நாட்டின் கடனை அடைக்க, ஜி.எஸ்.தி  (Malaysia Goods And Services Tax – GST) என்ற பெயரில் மக்களின் பணத்தைச் சுரண்ட திட்டமிடுகிறார்கள். ஆகவே, இந்த விஷயங்களை எல்லாம் கருத்தில்கொண்டு எதிர்க்கட்சிக் கூட்டணி தெளிவாகச் செயல்படவேண்டிள்ளது. 14வது பொதுத் தேர்தல் முடிவுகளைக் குறித்து எனக்கும் கவலையுண்டு. நிறைய இளைஞர்களின் ஆதரவும்  அவர்களின் ஓட்டுகளும் எங்களுக்குக் கிடைத்தாலும், எதிர்க்கட்சிக் கூட்டணி சரியான பாதையை வகுக்கவில்லையென்றால், நாங்கள் மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடலாம். இருப்பினும், இன்னும் எங்களைச் சீரமைத்துக் கொள்ள கால அவகாசம் உள்ளது. நிச்சயம் சிலாங்கூர் மக்களுக்குச் சிறந்ததை வழங்க முற்படுவோம்.

கேள்வி: எதிர்க்கட்சி கூட்டணியில் மலாய்காரர்களைப் பிரதிநிக்க பாஸ் (PAS) உள்ளது. சீனர்களுக்கு டிஏபி (DAP) கட்சி உள்ளது. இந்தியர்களுக்கு யார்?

நூருல் இசா: கெஅடிலான் கட்சியில் பார்த்தீர்களானால் 50 சதவிகித உறுப்பினர்கள் இந்தியர்கள்தான். கெஅடிலான் கட்சி, இந்தியர்களுக்காக அதிகமான நாற்காலிகளை வகுத்துள்ளது. நாங்கள் இன அடிப்படையைக்  குறிக்கும் விஷயங்களை முற்றிலும் வேரருக்கவே பார்க்கின்றோம். எல்லா இனத் தலைவர்களும் எல்லா இன மக்களுக்கும் சமமான சேவை செய்ய வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மக்களின் துன்பத்தில் இனபாகுப்பாடின்றிப் பங்கெடுக்க வேண்டும்.

சரி. ம.இ.காவை இந்தியர்களின் பிரதிநிதிக் கட்சியாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அவர்கள் இந்திய மக்களின் முக்கியமான அடிப்படை பிரச்சினைகளைச் சீர்த்தூக்கிப் பார்ப்பதில்லையே. பார்க்கப்போனால் எதிர்க்கட்சியின் திட்டங்களைத்தான் அவர்கள் நிறைவேற்றிக்கொண்டிருகின்றனர். உதாரணத்திற்கு, நம் நாட்டில் பல இந்தியர்களுக்கு 90 வயதைக் கடந்தும் குடியுரிமை அட்டை அதாவது நீல அடையாள அட்டை இல்லை. இன்னமும் சிவப்பு அடையாள அட்டைதான் வைத்திருக்கின்றார்கள். இது ஒரு மிக முக்கியமான பிரச்சனை. இதை எப்பொழுதோ இவர்கள் களைந்திருக்க வேண்டும். ஏன் இப்பொழுதுதான் இவர்களுக்குப் பொறுப்பு வந்ததா?

முதலில் அரசாங்கம் மக்கள் மீது அன்பை வைக்க வேண்டும். மனிதத்தன்மை முதலில் மலேசியாவில் மலர வேண்டும். அதன்பிறகு இனம், மொழி பற்றி பேசலாம். அது எங்கும் போய்விடாது. ஓர் இனம் மற்ற இனத்தின் மீது வெறுப்புணர்ச்சியைக் காட்டுவதை நிறுத்த வேண்டும். பிகேஆர் கட்சியைப் பொருத்தவரை யார் வேண்டுமானாலும் கட்சித் தேர்தலில்  போட்டியிடலாம்.

கேள்வி: ஏன் 13வது பொது தேர்தலின் போது எதிர்க்கட்சியினர் ஹிண்ராஃபை நிராகரித்தனர்?

நூருல் இசா: நாங்கள் அவர்களை நிராகரிக்கவில்லை. ஹிண்ராஃப் இயக்கத்தில் பல குழப்பங்கள் உள்ளன என நான் நினைக்கின்றேன். தொடக்கத்தில் நாங்கள் உதயகுமாரோடு கலந்துபேசினோம். பிறகு இன்னொரு குழு அதாவது வேதமூர்த்தி எங்களிடம் வந்து நாங்கள்தான் உண்மையான ஹிண்ராஃப் இயக்கத்தினர் என்றார். அவர்கள் முன்வைத்த சில கோரிக்கைகளை மட்டுமே நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதோடு அவர்கள் முன் வைத்த சில கோரிக்கைகள் மிக சுயநலமானவையாக எங்கள் மனதிற்கு பட்டது. அக்கோரிக்கைகளைப் பற்றி மீண்டும் அவர்களோடு கலந்துரையாட நேரம் போதவில்லை. அதுமட்டுமின்றி அச்சமயத்தில் அவர்கள் அம்னோவோடும் கலந்து பேசிக்கொண்டிருந்தனர். கூடுதல் அனுகூலம் கிடைக்கும் இடத்தில் கூட்டு வைத்துக் கொள்ள அவர்கள் தயாராக இருந்தனர். மனம் திறந்த சேவைதான் இங்கு தேவை. சுய லாப நோக்கு அல்ல. வருத்தம்தான் மிஞ்சுகிறது.

கேள்வி: நடப்பு அரசாங்கத்தின் மையப் பிரச்சனைகளாக இனப் பிரச்சனை அமைகிறது. பொருளாதாரம், கல்வி, அரசியல் எல்லா இடங்களிலும் இனப் பிரச்சனை தலை தூக்குகிறது? நீங்கள் எப்படி இதைக் களைவீர்கள்?

நூருல் இசா: எங்களுடைய வழிமுறை ஒன்றுதான். சம உரிமை. எங்களால் எல்லா இனத்தினர் பிரச்சினைகளையும் தீர்த்துவிட முடியாது. ஆனால், பிரச்சினையின் சதவிகிதத்தைக் குறைக்க முடியும்.

மக்களும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் பல கருத்துகள் உண்டு. உதாரணமாக,  மலாய்க்காரத் தலைவர்கள் மலாய்க்காரர்களுக்கு மட்டுமே உதவி செய்கிறார்கள். அதேபோல் இந்தியத் தலைவர்களும் சீனத் தலைவர்களும். இது மிகவும் தவறான பார்வை.

காரணம், நாங்கள் பொறுப்பேற்றுள்ள தொகுதியை முதலில் பாருங்கள். என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். நான் பந்தாய் டாலம் தொகுதி தலைவர். அவ்விடத்தில் வசிக்கும் மக்கள் எண்ணிக்கையில் மலாய்காரர்கள் இந்தியர்களைவிட அதிகம். ஆகையால் தீர்க்கப்படும் பிரச்சினைகளின் மொத்த எண்ணிக்கையின் சதவிகிதத்தில் அதிக பேதம் இருக்கும். இதே நிலைமைதான் கிள்ளானிலும் பினாங்கு மாநிலத்திலும் நிலவுகின்றது. இந்தக் கணக்கை எடுத்துக்கொண்டு “அவர்கள் இனத்திற்குத்தான் அதிகமாய் உதவி செய்கிறார்கள்” என்ற கூவல் சரியானது அல்ல.

கேள்வி: நமது நாட்டுக் கல்வி அமைப்பைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? நமக்கு ஏற்ற கல்வி அமைப்பு எது?

பதில்: முதலில் நம் நாட்டு கல்வி, அரசியல் ஆக்கப்படுகின்றது. ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாற்றம் காணும்போது, கல்வி அமைப்பும் மாறுகின்றது. அவரவர், தங்களின் பெயர், கல்வி வரலாற்றில் இடம் பெற வேண்டுமென நினைக்கின்றார்கள். இறுதியில் மாணவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். அமைச்சர்கள் கல்வி தொடர்பாக நூற்றுக்கு மேற்பட்ட அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கின்றனர். இதனால் என்ன பயன்? ஆகையால், அமைச்சர்கள் மாறினாலும், எக்காலக் கட்டத்திலும் கல்வி அமைப்பு மாணவர்களின் நிலைக்கேற்பவும் தரத்திற்கேற்பவும் கலைத்திட்டம் அமைய வேண்டும்.

நான் முன்பு கூறியதுபோல உலக வங்கியின் அறிக்கையின்படி, வியட்னாம் மக்கள், மலேசிய மக்களை விட ஏழைகள். ஆனால், கல்வித் தரத்தில் நாம் அவர்களைவிட பின் தங்கி இருக்கின்றோம். இதற்குக் காரணம், மத்திய அரசு கல்வியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதனால்தான். நம் நாட்டு ஆசிரியர்களின் சம்பளத்திற்கும் மற்ற ஆசிய நாட்டு ஆசிரியர்களின் சம்பளத்திற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஆனால்,  இங்குள்ள ஆசிரியர்கள் கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள். அரசாங்க கட்டளைகளுக்கு விருப்பமின்றிக் கட்டுப்படுகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், அரசாங்கம் கல்வி அமைப்பில் நடைப்பெறும் மாற்றங்களைத் தெரிவிக்கும் வண்ணம் ஆசிரியர்களைப் பல கல்வித் திட்ட அறிமுக பயிற்சிகளுக்கு அனுப்பி வைப்பதால் பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிகளில் இருப்பதில்லை. தொடர்ந்து, நேரம் போதான்மை காரணத்தால் அவர்கள் வரையறுக்கப்பட்டப் பாடத்திட்டத்தை, முழுமையாக படித்து கொடுக்க இயலாமல் போகின்றன.  இந்நிலையில், மாணவர்களின் அடைவுநிலைகளை அவப்போது சோதனை செய்து அதன் அடைவைப் பள்ளித் தேர்வு  இணயத்தளத்தில் ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பதிவு செய்துவிட வேண்டும்.   இது எப்படிச் சாத்தியமாகும்?

உலக வங்கி வெளியிட்ட அறிக்கை தொடர்பான கூட்டம் ஒன்று பல்கலைக்கழத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நானும் அதில் கலந்துகொண்டேன். அதாவது, கானா (Ghana) நாட்டில் பெரும்பாலான பெற்றோர்களுக்கு வாசிக்க தெரியாது. கல்வி அறிவு மிகக்குறைவு. எதிர்மாறாக, அவர்களின் குழந்தைகள் கல்வியில் நல்ல தேர்ச்சிகளைப் பெறுகின்றனர். அங்குள்ள ஆசிரியர்கள் அவர்களை ஒருபோதும் ஒதுக்கியதில்லை. அவர்களுக்கு எல்லா கருத்து சுதந்திரமும் வழங்கப்பட்டது. ஆனால், இங்கு என்ன நிலவி வருகின்றது? பி.பி.எஸ் (School-based Assessment – PBS) தேர்வு முறை அமலாக்கம் செய்தபோது, அது தொடர்பாக 20,000 புகார்கள் ஆசிரியர்களால் செய்யப்பட்டன. அதனுடைய விளைவு, புகார் செய்த ஆசிரியர்களை அரசாங்கம் வேறு பள்ளிகளுக்கு மாற்றியது. பி.பி.எஸ் தொடர்பான விழிப்புணர்வும் முழுமையான விளக்கமும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இல்லை. இதனால், குழப்பநிலை மட்டும்தான் ஏற்பட்டது. நமது மாணவர்கள் ரோபட் இல்லை. அவர்களைச் சிந்தித்துச் செயல்பட வைக்கவேண்டும். அப்போதுதான் தரமான மாணவர்களை உருவாக்க முடியும்.

நமது நாட்டு கல்விச் சூழலின் பாரம்பரியம் என்ன? பரிட்சையை முன்வைத்துதான் இவ்வளவு காலமாக மதிப்பீடு செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்பொழுது இந்த மதிப்பீட்டு முறையில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய மதிப்பீட்டு முறையை விமர்சிப்பதால் நான் பழமை சிந்தனை கொண்டவள் அல்லது மாற்றத்தை ஏற்றுகொள்ளக்கூடிய மனப்பக்குவமற்றவள் என பொருள்படாது. மாற்றம் செய்யும்முன் அதற்கேற்ப அடிப்படை தேவைகளை முதலில் தயார் செய்ய வேண்டும்.

அடுத்து, நமது நாட்டில் 20 சதவிதம் மட்டுமே பல்கலைக்கழகப் பட்டதாரிகள். இது ஒரு பிரச்சனையா? இல்லை. வெளிநாடுகளில் அதாவது ஜெர்மன், துருக்கி போன்ற நாடுகளில் தொழிற்கல்வி சார்ந்த பல்கலைக்கழகப் பட்டதாரிகள்தான் அதிகம். பட்டதாரிகள் என்றால் ஏன் மருத்துவம், சட்டம், கல்வி, பொறியியல் போன்ற நிபுணத்துவங்களை மட்டும் சார்ந்து இருக்க வேண்டும்? நாம் நினைத்தால் நல்ல டாக்சி ஓட்டுனர்களைக்கூட போக்குவரத்துத்துறையின் கீழ் பட்டதாரிகளாக உருவாக்கலாம். இல்லையென்றால், குளிர்சாதனம் அல்லது கார் பழுதுப் பார்ப்பவர்களை அத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற பட்டதாரிகளாகக்கூட உருவாக்கலாம். உலகப் பொருளாதாரத்தில் முதல் இடம் வகிக்கும் நாடுகளின் வழிமுறை இதுதான். இப்படிப்பட்டவர்களால்தான் நமது நாட்டுப் பொருளாதாரத்தை நகர்த்தவும் உயர்த்தவும் உதவ முடியும்.

சரி. நீங்களே சொல்லுங்கள் அமைச்சர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி உபகாரச்சம்பளம் (Scholarship) தேவைதானா? அமைச்சர்களால் அவர்களின் பிள்ளைகளின் கல்விச் செலவைப் பார்த்துக்கொள்ள முடியாதா? ஏன் அவர்கள் தங்களின் பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க வைக்கின்றார்கள்? சிந்தித்துப் பாருங்கள். முதலில் அமைச்சர்களின் பிள்ளைகளுக்கும் அரசாங்க உயர் அதிகாரிகளின் பிள்ளைகளுக்கும் உபகாரச்சம்பளம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். நம் நாட்டில் நிறைய திறமை வாய்ந்த ஏழை மக்கள் இருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க வழி இல்லாமல் நிறைய பேர் கனவுகளோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்பொழுது மாற வேண்டியது சமுக நிலைப்பாடுதான்.

முதலில் பணிப் பிரிவுகளை (Task Force) வட்டார அளவில் அமைக்கவேண்டும். பள்ளிகளில் ஏற்படும் குறைபாடுகளை உதாரணத்திற்கு, மின்சாரம், நீர் வசதி, போக்குவரத்து அம்சங்கள், பாதுகாப்பு அம்சங்கள் போன்ற விஷயங்கள் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டும். கால தாமதமின்றி குறைபாடுகளைத் தீர்க்கவேண்டும். காரணம், நம் நாட்டில் நிறைய பணம் உள்ளது. இதை முறைப்படுத்த நடப்பு அரசாங்கம் பணம் இல்லை என்று சொன்னால் வேடிக்கைதான்.

கேள்வி: கல்வி அமைச்சு, மத்திய அரசின்  கீழ் செயல்படாமல், அது   ஓர் ஆணையத்தின் (Commission)    கீழ் செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என கருத்து உள்ளது. இதைப் பற்றி உங்கள் பார்வை?

நூருல் இசா: முடியும். இது மிகச் சரி. இது ஒரு நல்ல கூர்மையான பார்வையும்கூட. ஓர் ஆணையத்தின் கீழ் கல்வி அமைந்தால் மிக சிறப்பு. காரணம், அமைச்சர்களின் கையில் கல்வி தொடர்ந்து இருந்தால் மோசமான நிலைக்கு நிச்சயம் தள்ளப்படுவோம்.

கேள்வி: முன்பு தேசிய ஒருமைப்பாடு (National Integrity) பற்றி யாரும் பேசவில்லை. இருப்பினும் அந்த உணர்வு நம்மிடையே நிறைந்திருந்தது. ஆனால், இன்று அது பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், அந்த உணர்வு நம்மிடையே இல்லை. இதைப் பற்றி…

நூருல் இசா: எனக்கும் தெரியும். சில அமைச்சர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெறவும் அவர்களின் ஓட்டுக்களைப் பெறவும் தேசிய ஒருமைப்பாட்டை பற்றி மேடையில் பேசினார்கள். ஆனால் அவர்கள்  மக்களுக்குக் கொடுத்த வாக்குகளைக் காப்பாற்றினார்களா என்பது இங்குக் கேள்விகுறிதான். நான் அசுந்தா இடைநிலைப்பள்ளியில் படித்தேன். அங்கு நிறைய கத்தோலிக்க மாணவர்கள் படித்தனர். அவர்களோடுதான் பழகினேன். அந்தத் தருணம் எந்த விதத்திலும் எனக்கு இனப் பாகுபாட்டை புகுத்தவில்லை. அவர்களோடு பழகினால் நான் மதம் மாறிவிடுவேன் என்ற பயமும் அச்சமும் எனக்கு வந்ததில்லை. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கூறிக் கூறி நாட்டு மக்களைப் பிளவுக்குள்ளாக்கி விட்டனர் நம் தலைவர்கள்.

கேள்வி: அண்மைக் காலமாக, பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி, தமிழ்ச் சீனப் பள்ளிகளை மூட கங்கணம் கட்டித் திரிகின்றார். இதைப் பற்றி  உங்கள் கருத்து?

நூருல் இசா: தமிழ்ப்பள்ளிக்குப் படிக்க அனுப்பாத சில பெற்றோர்கள் என்னிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில் ஒன்று  நம் நாட்டில் ஒரே பள்ளி அமைப்பைக்கொண்டு வந்தால் என்ன என்பதுதான். அதற்கு நான், முதலில் நம் நாட்டின் வரலாற்றைச் சற்றுத் திரும்பி பாருங்கள் என்றேன். நீங்கள் நினைப்பதுபோல அல்ல நினைத்த உடனே எல்லா சீன, தமிழ்ப் பள்ளிகளை மூடுவது. அந்தப் பள்ளிகளை அமைக்க நமது பாட்டன்கள் பட்ட துன்பத்தை  உணர்ந்து பாருங்கள். பேசுவது மிக இலகு. சீன, தமிழ்ப் பள்ளிகளை மூடிவிட்டால் எல்லோரிடமும் ஒற்றுமை வளர்ந்து விடுமா? அதற்கு வேறொரு தீர்வு உண்டு. முதலில் எல்லா இனப் பள்ளிகளையும் மேம்படுத்த வேண்டும். பிறகு, அதை மூடுவதைப்  பற்றி பேசலாம். பெரும்பாலான, தலைவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்காகப் பணம் கொடுக்கிறேன் என மேடையில் வாக்குறுதி கொடுத்தபின், அந்தப் பணத்திற்காக பல காலங்களுக்கு அவர்களை அலைக்கழித்து, மூன்றாம்தர மனிதன்போல அவர்களை நடத்தி, காக்க வைத்த சம்பவங்கள் அதிகம். ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதில் பாகுபாடு இருக்கிறது. ஒற்றுமை உணர்வு தேய்ந்து விட்டது. முதிர்ச்சியற்ற தலைவரால் மட்டுமே இப்படி சிந்திக்க முடியும்.

கேள்வி: நீங்கள் தாய்மொழிக் கல்வியை ஆதரிக்கின்றீர்களா?

நூருல் இசா: தாய்மொழி வழி கற்றல் மிகவும் முக்கியமான ஒன்று. மலாய், சீனர், இந்தியர் எவராக இருந்தாலும் முதலில் நமது அடையாளத்தை உணர வேண்டும்.  தமிழ்மொழி பழமையான வரலாறு கொண்டது. சீன மொழியும் அப்படிதான். இவை நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி, ஒரு புதிய பாடத்தை முதன் முதலில் ஒரு குழந்தைக்குத் தாய்மொழியின் வழி கற்பிப்பதே மிகச் சிறப்பு என பல ஆய்வுகள் கூறுகின்றன. தாய்மொழியின் வழி கற்றல் நடந்தால் அக்குழந்தை அப்பாடத்தை எளிதில் உணர்ந்துகொள்ள முடியும்.

கேள்வி: தாய்மொழி கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்பது பற்றி உங்கள் கருத்து?

நூருல் இசா: நான் இதை முழுமையாக ஆதரிக்கின்றேன். முதன் முதலில் மலாய்மொழிப் பாடத்தைக் கட்டாயப் பாடமாக்கும்போது பலர் அதில் தேர்ச்சிப் பெற வில்லை. அதனால் பல மாணவர்கள் மலாய்மொழிப் பாடத்தைக் கண்டு பயந்தனர். ஆனால் இன்று மலாய்மொழிப் பாடம் மிக சதாரணமாகி விட்டது. பழகப் பழக எல்லாம் இயல்புநிலைக்கு வந்துவிடும். அதுமட்டுமல்லாமல், கட்டாயப் பாடமாக்குவதன் வழி மக்களுக்கு என்ன நன்மை என்பதையும் யோசிக்க வேண்டும்.

கேள்வி: மலேசியாவிற்கு உகந்த வர்த்தக மாதிரி (Economic Model) எது என்று நினைக்கின்றீர்கள்?

நூருல் இசா: நமக்கு மலேசியப் புதிய பொருளாதார அதாவது Malaysian New Economic Model (NEM) புளுப்பிரிண்ட் உள்ளது. அது மிக நல்ல மாதிரித் திட்டமும்கூட.  தேசிய பொருளாதார அமைப்பின் கீழ் லட்சக்கணக்கில் செலவு செய்து இந்த மாதிரி திட்டத்தை அரசாங்கம் உருவாக்கியது. ஆனால் அரசாங்கம் இதன் திட்டங்களைப் பின்பற்றவில்லை. உதாரணத்திற்கு திறந்த முறையில் டெண்டர் (Open Tender) விடுவதாக நஜிப் சொன்னார். ஆனால் செய்யவில்லை.

முதலில் நமது பலவீனங்களை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். பிறகு, நம் நாட்டுப் பொருளாதார பலவீனங்களை ஓர் அறிவார்ந்த நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளைக்கொண்டு குழு அமைத்து கலந்துரையாட வேண்டும். இது நாம் முன்னேறி செல்வதற்கான வழியைத் திறக்கும். அதை விட்டுவிட்டு, மலேசியா, சிங்கப்பூரைவிட இந்தோனிசியாவைவிட முன்னேறிய நாடு என்ற மேடைப் பேச்சு எதற்கு.

கேள்வி: மிக விரைவில் மலேசியா TPPA (Trans Pacific Partnership Agreement)ல் கையொப்பம் இட உள்ளது. அதைப் பற்றிய உங்கள் பார்வை?

நூருல் இசா: இந்த உடன்படிக்கை நம் நட்டிற்கு பாதகமான விளைவைக் கொடுக்கும் என நான் நினைக்கின்றேன்.  நம் நாட்டில் பலவகையான வரி விகிதம் நமது ஏற்றுமதி பொருள்களுக்குப் பாதுகாப்பு அம்சத்தின் கீழ் வழங்கப்படுகிறது. முதலில் அமெரிக்காவிற்கும் மலேசியாவிற்கு உள்ள வியூக மதிப்பு (Strategic Value) என்ன? அமெரிக்கா தனது சக்தியை இழந்து கொண்டுவரும் ஒரு வல்லரசு நாடு. அதாவது ‘Dying Super Power’ எனலாம். அமெரிக்காவை எடுத்துகொண்டால் அங்கு பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் பொருளாதாரரீதியில் பெரிய இடைவெளி உண்டு. அதுமட்டுமல்லாமல் அதிகமானவர்களுக்கு அங்கு வேலை இல்லை. இதை நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், நாம்தான் ஜப்பான் மற்றும் சீனாவின் முதன்மை வர்த்தக ஏற்றுமதி இறக்குமதி பங்குதாரர். நம்முடைய மிக முக்கிய வர்த்தக நண்பர்கள் ஜப்பான் மற்றும் சீன நாடாக இருக்கும்போது நமக்கு ஏன் அமெரிக்காவின் வர்த்தகத் தொடர்பு தேவை? இந்த உடன்படிக்கையால் நிறைய அமெரிக்கா பன்னாட்டு நிறுவனங்கள் மலேசியாவில் நிறுவப்படும். அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால் நமக்கென்று வரையறுத்து வைக்கப்பட்டுள்ள பொருளாதாரத் திட்டங்களில் குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர வியாபாரத்திற்கு (SME) மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.

போட்டித்தன்மை வேண்டாம் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் எதற்கு நாம் அமெரிக்காவுடன் போட்டிபோட வேண்டும்? நமது நோக்கம்தான் என்ன? இந்த வகையில் நான் மலேசிய இஸ்லாம் வர்த்தக சங்கத்தின் சில கொள்கைகளை ஆதரிக்கிறேன். அமெரிக்கா பல வெற்றிகரமான நிறுவனங்கள் வைத்துள்ளது. அவர்கள் முதிர்ச்சியான வர்த்தகத்தை இங்கு செய்ய உதவ போவதாகச் சொல்கிறார்கள். நம் நாட்டின் நிலைமையைக் கொஞ்சம் யோசித்து பாருங்கள். அவர்களின் ஆதிக்கத்தில் நாம் வாழ வேண்டுமா?  நான் கூறுவதெல்லாம் முதலில் ஆசிய நாடுகளோடு வர்த்தக ரீதியில் மலேசிய போட்டி போடட்டும். ஆசிய வர்த்தக பொருளாதார பட்டியலில் நமது இடம் என்ன? ஆசியாவில் நமது சாதனை என்ன? இது மிகவும் முட்டாள்தனமான செயல் மற்றும் முடிவு.

நான் முழுமையாக TPPAயைப் புறக்கணிக்கிறேன். எதற்கு நாம் ஒரு பன்னாட்டு நிறுவனம் நம்மை சம்மன் (summon) செய்ய வழி விடவேண்டும்? நீங்கள் WTO-வை எடுத்துகொண்டால் அவர்கள் ஒரு நேர்மறையான பட்டியல் தருவார்கள. அதாவது இந்தந்தத் துறையில் நாங்கள் வர்த்தகம் செய்ய விரும்புகின்றோம் என. ஆனால் அமெரிக்க இதற்கு எதிர்மறையான பட்டியலைக் கொடுக்கின்றது. அதாவது இந்தந்த துறையில் நான் முதலீடுசெய்ய விரும்பவில்லை என. இது நம் நாட்டின் பொருளாதார துறையின் பலவீனத்தை மிக இலகுவாக வெளிநாடுகளுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டிவிடும்.

உலக பொருளாதாரம் கால மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டது. உலக பொருளாதாரத்தோடு நம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் எந்த இடத்தில் உள்ளோம்? நாம் நடுத்தர பொருளாதாரம் நிலைகொண்ட நாடு என்பதை மறந்துவிடக் கூடாது. எதற்கு, நம்மை நாமே ஓர் உடன்படிக்கையின்கீழ் கட்டிப் போட்டுக்கொள்ள வேண்டும். தீடீரென உலகப் பொருளாதாரம் விவசாயத்தை நோக்கிப் போகின்றது. நம் நாடு அதை மேம்படுத்தவும் அதில் முதலீடு செய்யவும் நினைக்கலாம். அதனால் நமது நாட்டுப் பொருளாதாரம் உயரலாம். யாருக்குத் தெரியும்? ஆனால் இந்த உடன்படிக்கை அதைத் தடுத்துவிடும்.

அமெரிக்கா நம்மோடு சிரித்து பேசுவதால் எல்லா விஷயங்களையும் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அமெரிக்க அரசாங்கம் பொருளாதார  ஆலோசனை சொல்ல மட்டும் 800 பொருளாதர நிபுணர்களை வைத்துள்ளது. நம்மிடம் எத்தனை பேர் உள்ளனர்? நமக்குப் பொருளாதர ரீதியில் உண்மையான நிலவரத்தைச் சொல்லும் நல்ல நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். முதலில் அவர்களை நஜிப் தேடட்டும். அமெரிக்கா, ஜப்பான் இவை இரண்டும் மிகப் பெரிய சக்தி வாய்ந்த நாடுகள். அதனால், அமெரிக்கா என்றவுடன் ‘வாவ்’ என்று சொல்லாமல், இவர்களால் என்ன பாதகமான விளைவுகள் வரும் என்பதை யோசிப்பது சிறந்தது.  பெட்ரோலியம் தொடர்பான பல உபாயங்களை (Project) உள்நாட்டு நிறுவனங்களிடமே ஒப்படைக்கலாம். ஆனால் எதற்கு Esso, Mobil போன்ற வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கிறார்கள். இரு நிறுவனமும் திறமை வாய்ந்த நிறுவனங்கள்தான். இருப்பினும், பெட்ரோலியம் நம் நாட்டுச் சொத்து. உள்நாட்டு நிபுணர்களுக்கு முதன்மை கொடுக்க வேண்டும்.

கேள்வி: வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உரிமைகள் குறித்த மெத்தனங்களைப் பற்றிப் பேசுவோமா?

நூருல் இசா:  நிச்சயம். அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான். அவர்கள் நம்மை நம் நாட்டை நம்பிப் பிழைப்புத் தேடி வந்தவர்கள். இருந்தபோதிலும், வெளிநாட்டிலிருந்து வேலையாட்களை வேலைக்கு எடுப்பதில் நமது நாட்டின் கொள்கை என்ன? லட்சக்கணக்கான வெளிநாட்டவர்களை நாம் வேலைக்காக எடுத்திருக்கின்றோம். இது பல தனியார் நிறுவனங்களின் லாபத்திற்காகச் செய்யப்படும் செயல். இவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கத் தேவையில்லை. அதோடு காப்புறுதி வசதி செய்ய வேண்டிய தேவையும் இல்லை வெளிநாட்டு தொழிலாளர்களில் பலர் குத்தகை காலம் முடிந்த பின்னும் அவர்கள் சொந்த நாட்டிற்குத் திரும்புவதில்லை. சிலர் இங்குள்ள பெண்களைத் திருமணம் செய்துகொள்கிறார்கள். மேலும், குழந்தைகளின் கல்வி, வாழ்க்கை வசதியால் இங்கேயே தங்கி விடுபவர்களும் உண்டு. முஸ்லிம் மதம் சார்ந்த வேலையாட்களுக்கு மலேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. ஆக, நம் நாட்டின் நிலைப்பாடுதான் என்ன?

கேள்வி. நடப்பு அரங்கத்தின் மீதுள்ள உங்களின் அதிருப்தி என்ன?

நூருல் இசா:  முதலாவதாக பொறுப்புள்ள தலைவர்கள் நமக்குத் தேவை. 13வது பொதுத் தேர்தலில், 52 சதவித எதிர்ப்பு குரல்கள் உள்ளதை நாம் நேரடியாக உணரலாம். இது ஏன்? ஊழல், அதிகாரம், இனப்பாகுபாடு போன்ற விஷயங்களால் எழுந்த மக்களின் எதிர்ப்புக் குரல்கள் அது.

அடுத்து, பொருளாதாரக் கட்டமைப்பு மலேசியா வாழ்வுக்கும் வளங்களுக்கும்  ஏற்றால் போல அமைவது அவசியம். நம் நாடு அமெரிக்கா போல அல்ல. முதல் முதலாக, New Economy Policy (NEP)யை அறிமுகம் செய்யும்போது இனங்களிடையே உள்ள பொருளாதார இடைவெளியைக் குறைப்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டமாக அமைந்தது. ஆனால் தற்பொழுது உள்ள பொருளாதார சூழல் இந்நிலையை மாற்றி அமைக்கின்றது என நான் நினைக்கின்றேன். ஜி.எஸ்.தி-யை அறிமுகம் செய்து மக்களின் பணத்தை வரி என்ற வடிவில் எடுத்துக்கொள்வதில் என்ன நியாயம் உள்ளது.  மலாயாப் பல்கலைக்கழக, வறுமைப் பிரிவு பேராசிரியர் டத்தோ பதிமா கரிம், நாட்டில் மின்சாரம் கட்டணம், பொருள் விலைவாசி தொடர்ந்து உயர்ந்து கொண்டேபோனால் 1970களில் உள்ள ஏழ்மை நிலை மீண்டும் திரும்பி விடும் எனக் கூறுகின்றார். இதுபோன்று இன்னும் பல விஷயங்கள் மனத் திருப்தி அளிக்கவில்லை எனலாம்.

கேள்வி: மலேசியப் பெண்களின் குரல்  எந்த அளவில் கவனிக்கப்படுகின்றது?

நூருல் இசா:  தற்பொழுதுள்ள மலேசியச் சூழலில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளன. நமது மத்திய வங்கியின் கவர்நர் ஒரு பெண்தான். பெண்கள் நமது நாட்டில் உயர்வாக கொண்டாடப்பட்டாலும் அவர்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. இவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் சட்டப் பார்வைக்குக் கொண்டு வரப் படுவதில்லை. அதோடு பெண்களின் பாதுகாப்புப் பிரச்சினைகளைக் கவனிக்கச் சிறப்புக் குழுவும் இல்லை. வருத்தம்தான். பாதுகாப்பைத் தவிர்த்து வேலை இடங்களில் குறிப்பாக சிறப்புத் துறைகளில்  பெண்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை. குறிப்பாக உயர் பதிவிகளை அவர்களுக்கு வழங்குவதில் பாகுபாடு உண்டு.

கேள்வி: நம் நாட்டில் பெண்களுக்கு அமைச்சரவையில் முக்கிய/முதன்மை அமைச்சர் பதவிகள் வழங்கப்படுவதில்லை. ஏன்?

நூருல் இசா: இத்தாலி நாட்டின் உள்துறை அமைச்சர் ஒரு பெண். பதவி கொடுப்பதில் பால் வேறுபாடு இருக்கக்கூடாது. திறமையின் அடிப்படையில்தான் பதவி வழங்கப்பட வேண்டும். நீ பெண். அதனால் உனக்கு இந்தப் பதவி உண்டு; இல்லை என்ற அடிப்படையில் இருக்கக்கூடாது.

கேள்வி: இறுதியாக…

நூருல் இசா: மக்கள் அறியாமையிலிருந்து முதலில் வெளி வர வேண்டும். முக்கியமாக மின் உலகம் அல்லது இணைய உலகம் அறியாதவர்களாக நாம் இன்னமும் இருக்கக் கூடாது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை கிடைக்கும் அரிசி பருப்பையும் வருடத்திற்கு ஒருமுறை கிடைக்கும் BRIM அதாவது ஒரே மலேசிய உதவித் தொகை பணம் ரி.ம 500 வெள்ளியையும் நம்பி ஏமாற்றம் அடைந்து விடாதீர்கள். நான் முடிவுகளைச் சொல்ல விரும்புவதில்லை. நான் எழுப்பும் கேள்விகள்தான் உங்களைச் சுயமாக சிந்திக்க வைப்பதற்கான வழி. ஒவ்வொரு கேள்விகளுக்கும் நீங்களாகவே பதில் தேடுங்கள். அப்பொழுதுதான் உண்மை நிலவரங்கள் உங்களுக்குத் தெரிய வரும். நானே அந்தக் கேள்விகளுக்கான பதிலைச் சொல்லி விட்டால், அதன் உண்மை தன்மை குறைந்து விடும். சுய சிந்தனை கொண்ட மக்களே மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.

நேர்காணல் : வீ.அ.மணிமொழி / பூங்குழலி வீரன்

நன்றி :- www.vallinam.com.my