சிவராசா: அஸிசா எம்பி இல்லை என்றால், விளக்கம் அளிக்கப்பட வேண்டும்

 

MP Sivarasa on MBபிகேஆரின் தலைவர் டாக்டர் வான் அஸிசா சிலாங்கூர் மாநில எம்பி பதவிக்கான வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் 56 உறுப்பினர்களில் 30 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பெரும்பான்மையான ஆதரவைப் பெற்றுள்ள வான் அஸிசா மந்திரி புசாராக நியமிக்கப்படவில்லை என்றால், “அதற்கான விளக்கம்” அளிக்கப்பட்டாக வேண்டும் என்று பிகேஆரின் சுபாங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினரான ஆர். சிவராசா இன்று கூறினார்.

சிலாங்கூர் மாநில அரசமைப்புச் சட்டத்தின் எந்த பிரிவின் கீழ் வான் அஸிசா மந்திரி புசார் பதவிக்கு நியமிக்கப்படுவதிலிருந்து தடுக்கப்படுகிறார் என்பதையும், அதற்குரிய காரணங்களையும் “ஆகக்குறைந்தபட்ச” விளக்கமாகவாவது அளிக்கப்பட வேண்டும் என்று சிவராசா வலியுறுத்தினார்.

வழக்குரைஞரான சிவராசா பேராக் மாநில அரசமைப்புச் சட்டம் குறித்த மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பில் யார் புதிய மந்திரி புசாராக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ள “தெளிவான வியாக்கியானம்” கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரீஸ் ஷாவை கேட்டுக் கொண்டுள்ளார்

பேராக் மந்திரி புசார் பதவி சம்பந்தப்பட்ட நிஜார் ஜமாலுடின் மற்றும் ஸாம்ரி அப்துல் காடிர் ஆகியோருக்கு இடையிலான வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி ராவுஸ் ஷாரிப் தமது தீர்ப்பில் புதிய மந்திரி புசாரை நியமிக்கும் “உரிமை” சுல்தானுக்கு இருந்த போதிலும், அவர் மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மையினரின் “ஆதரவையும் நம்பிக்கையையும்” பெற்றவரை “மட்டுமே” நியமிக்கலாம் என்ற தீர்ப்பு வழங்கியிருப்பதை சிவராசா சுட்டிக் காட்டினார்.

“இச்சட்டத் தீர்ப்பில் நியமனம் செய்யப்படும் போது பெரும்பான்மை ஆதரவு கண்டிப்பாக நிரூபிக்கப்பட வேண்டும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது”, என்றாரவர்.

“ஆட்சியாளருக்கு ‘முறையான அரசமைப்புச் சட்ட நிலை’ குறித்து ‘முறையாக ஆலோசனை கூறப்பட்டுள்ளதா’ என்ற ‘கடுமையான கேள்விகள்’ இருக்கின்றன என்று சிவராசா மேலும் கூறினார்.

மந்திரி புசார் பதவி நியமனத்திற்காக அரண்மனையில் பேட்டி காணப்பட்டதாக கூறப்படும் மூன்று வேட்பாளர்களுக்கும் (பாஸ்சின் டாக்டர் அஹமட் யுனுஸ் ஹைரி மற்றும் இஸ்கந்தர் சாமாட் மற்றும் பிகேஆரின் அஸ்மின் அலி) அடிப்படை நிபந்தனையான பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும் என்று அவர் மேலும் கூறினார்.

வான் அஸிசாவுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருந்தும், அவர் தமது பெரும்பான்மையை விளக்குவதற்கான சந்திப்பு இன்னும் வழங்கப்படாமல் இருக்கிறது என்பதை சிவராசா சுட்டிக் காட்டினார்.