‘கோச்சடையான்’ சாதனையை ஐந்தே நாளில் முறியடித்த ‘ஐ’…

Ai-Vikram-and-Amyதமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகில் ஒரு படம் பற்றிய வீடியோ டீஸர், யு டியூப் மூலமாக மக்களிடையே கொண்டு போய்ச் சேர்ப்பது கடந்த சில வருடங்களாக ஒரு முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது. ‘கொலை வெறி’ பாடல் உலகம் முழுவதும் புகழ் பெற்றப் பிறகுதான் யூ டியூப் மூலமாகவும் இணைய தளங்களின் மூலமாகவும் ஒரு படத்தை எளிதில் கொண்டு போய்ச் சேர்க்க முடியும் என்பது நிரூபணமானது.

தற்போது ஒரு படத்தின் டீஸருக்கும் டிரைலருக்கும் கிடைக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்தும் திரையுலகினர் அவர்களது படத்தை விளம்பரப்படுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது.அந்த அளவிற்கு இணையதளங்கள் மக்களிடையே முக்கிய ஊடகமாகத் திகழ்ந்து வருகிறது.

இதை மீண்டும் ‘ஐ’ படத்தின் டீஸர் நிரூபித்துள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன் யு டியூப் இணையதளத்தில் ‘ஐ’ டீஸர் வெளியிடப்பட்டது. அதற்குள்ளாக 49 லட்சம் பேர் அந்த டீஸரைப் பார்த்து ரசித்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் ‘கோச்சடையான்’ டீஸருக்குக் கிடைத்த பார்வையாளர்களின் எண்ணிக்கையை ‘ஐ’ பட டீஸர் ஐந்தே நாட்களில் முறியடித்து புதிய சாதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி வெளியிடப்பட்ட ‘கோச்சடையான்’ பட டீஸரை மொத்தமாக இதுவரை 48 லட்சம் பேர் கண்டு களித்துள்ளனர். ஆனால், அந்த எண்ணிக்கை வெறும் ஐந்தே நாட்களில் ‘ஐ’ படம் கடந்து விட்டது. இது இந்திய அளவிலும் ஒரு மிகப் பெரிய சாதனையாகும்.

ஒரு தமிழ்ப் படத்திற்கு இப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்திருப்பதை தெலுங்குத் திரையுலகமும், ஹிந்தித் திரையுலகமும் மிகவும் ஆச்சரியடத்துடன் பார்க்கின்றனர். இதன் மூலம் உலக அளவிலும் ‘ஐ’ படம் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஷங்கர், நடிகர் விக்ரம் ஆகியோரின் உழைப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று இதை உறுதியிட்டுச் சொல்லலாம்.