ஆண்டவன் மீது ஆணையாக, தேச நிந்தனை விசாரணை தொடரும், ஸாகிட்

Zahid-PhDபோலீசில் புகார் செய்த 24 மணி நேரத்திற்குள் போலீஸ் விசாரனை தொடங்கும் என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிட் ஆண்டவன் மீது ஆணையாக உறுதியளித்தார்.

தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் வேளையில் இந்த நடவடிக்கைகள் தொடரும் என்று ஆண்டவனிடம் சத்தியம் செய்கிறார் அமைச்சர்.

மேலும், இச்சட்டம் மறுஆய்வு செய்யப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. சட்டத்துறை தலைவரும் இச்சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு வழக்குகள் மறு பரிசீலனை செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

ஆனால், உள்துறை அமைச்சர் ஸாகிட், “ரோயல் மலேசியன் போலீஸ் படைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற முறையில் உணர்ச்சிகரமான பிரச்சனையை தூண்டிய எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கு எதிராக செய்யப்படும் போலீஸ் புகார்கள் மீது போலீஸ் உடனடியாக விசாரணையைத் தொடங்கும், முடிந்தால் 24 மணி நேரத்திற்குள்”, என்று கூறினார்.

செப்டெம்பர் 20 இல், லுமுட் அம்னோ நிகழ்ச்சியில் அமைச்சர் ஸாகிட் கூறிய இதனை நேற்று பேராக் பிஎன் யுடியுபில் பதிவிறக்கம் செய்துள்ளது.