காணி அபகரிப்பை எதிர்த்து புதுக்குடியிருப்பில் ஆர்ப்பாட்டம்

இராணுவத்தினரின் காணி அபகரிப்பை எதிர்த்தும், பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களுக்குச் சொந்தமான காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனக் கோரியும் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் திங்களன்று ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்று நடத்தப்பட்டிருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்ட காணி உரிமை மீட்புக்கான அமைப்பு இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.

வடமாகாண சபை உறுப்பினர் டாக்டர் சிவமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலம், புதுக்குடியிருப்பு சந்தையில் ஆரம்பமாகி புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் முடிவடைந்தது.
வடமாகாண சபை உறுப்பினர் டாக்டர் சிவமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலம், புதுக்குடியிருப்பு சந்தையில் ஆரம்பமாகி புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் முடிவடைந்தது. 

பொதுமக்களின் காணிகளிலும், பிரதேச சபைகள், பொது அமைப்புக்கள் என்பவற்றின் காணிகளிலும் நிலைகொண்டுள்ள இராணுவத்தையும், சட்டவிரோத மீன்பிடிகாரர்களையும் வெளியேற்ற இந்த ஊர்வலத்தில் கோரப்பட்டது.

சட்டவிரோத இரகசிய காணி சுவீகரிப்பையும், சிங்களக் குடியேற்றத்தையும் இராணுவம் நிறுத்த வேண்டும் என கோரப்பட்டதோடு, இராணுவத்தினர் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது.

அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்களை விடுதலை செய்யும்படியும் இதில் கலந்துகொண்டவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி, ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட மகஜர் ஒன்று பேரணியின் முடிவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக நிர்வாக அதிகாரி நல்லையா சிவதாஸிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது.

பிரதேச செயலகத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம் பகுதியில் பொதுமக்களின் காணிகள் பலவற்றை இராணுவத்தினர் உள்ளடக்கியிருப்பதோடு, அவற்றைத் தங்களுக்குத் திருப்பித் தருமாறு கோரியிருந்த போதிலும் சில தினங்களுக்கு முன்னர், அவற்றை உரிமையாளர்களின் சம்மதமின்றி இராணுவ தேவைக்காக நில அளவை செய்திருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இறுதி மோதல்கள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில், முல்லைத்தீவு வட்டுவாகல் எல்லையில் பொதுமக்களுக்குச் சொந்தமான 600 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவுள்ள காணிகளை கடற்படையின் தேவைக்காக நில அளவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். -BBC

TAGS: