டாக்டர் சேவியர் ஜெயக்குமார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும்

xavier3ஜா. சுஜாதா, செம்டெம்பர் 25, 2014.

இந்தியச் சமுதாயத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு  ஸ்ரீ அண்டாலாஸ்  சட்டமன்ற  உறுப்பினர்  டாக்டர் சேவியரை மேலும் ஒரு தவணைக்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கும்படி 13 வது பொதுத் தேர்தலுக்குப் பின் இந்தியர்கள் அன்றைய மந்திரி புசார் காலிட்டுக்கும் பக்காத்தான்  தலைவர்   அன்வாருக்கும்  வேண்டுகோள் விடுத்தனர்.

 

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் அவர்  இருந்த ஜந்து ஆண்டுகளில் இம்மாநில  இந்தியர்களின் வளர்ச்சிக்காக நல்ல பல திட்டங்களைத் தீட்டிச் செயல் படுத்தியதில் நாட்டில் ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கே முன் உதாரணமாகச் செயல் பட்டவர் டாக்டர் சேவியர். அவரின் சேவையால் இம்மாநில இந்தியர்களுக்குக் கிடைத்ததையும், இழந்ததையும் சமுதாயம் கவனிக்க வேண்டிய தருணம் இது.

 

ஆலய நிலம், தமிழ்ப்பள்ளிகளின் நிலம், விவசாயிகளின் நிலம், தோட்டப் பாட்டாளிகளின் நிலம், பள்ளிகளின் கட்டுமானம், இந்தியர்களின் நகராட்சிமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, இந்திய கம்பத்துத்  தலைவர்கள்  உருவாக்கம், மகளிர்  சிறுதொழில்  ஊக்குவிப்பு, கல்வி வளர்ச்சி என்று பற்பலதுறைகளில்  அவரின் சேவையை வழங்கினார்.

 

.இந்திய சமுதாயம் சீரிய வளர்ச்சியை  அடைய அனுபவமும் ஆற்றலுமுள்ள அவரின் சேவை இந்தியர்களுக்குத் தேவை, அவர் தொடக்கிய மாணவர் தங்கும் விடுதி மற்றும்  இந்தியக் கலாச்சார மையத்தைக் கட்டுமானத்தைப் பூர்த்தியாக்கிக் கொடுக்க அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற இந்தியர்களின் வற்புறுத்தல் செவிடன் காதில் ஊதியச் சங்காக அன்று அமைந்தது.

 

அத்துடன் பற்பல விவகாரங்களில் இந்தியர்களுக்கு  குரல் கொடுப்பதிலும்  அவர் முன்னோடியாகவே  இருந்து வந்தார்.

 

டாக்டர் சேவியரின் போராட்டத்தால்  இச்சமுதாயத்திற்குக் கிடைத்து வந்ததைத் தடுப்பதில் சில இந்திய நலன் விரும்பிகளுக்கு  இருந்த ஆர்வத்தில் அவர்கள் சாதித்ததைச் சமுதாயத்திற்கு விளக்க வேண்டியதும் நமது கடமையாகும்

அவர் செய்துள்ள நல்ல காரியங்களில் சில:

  1. மாநிலத்தில் குறுகிய காலத்தில் 85 இந்து, சீக்கிய ஆலயங்களுக்கும், 15 தேவாலயங்களுக்கும் நிலம் வழங்க ஏற்பாடு செய்தவர்.
  2. ஆண்டுக்கு 20 இலட்சம்  வெள்ளி வீதம், நான்கே ஆண்டுகளில் 467 ஆலயங்களுக்கு 93 லட்சம் வெள்ளியும், 141 தேவாலயங்களுக்கு 22 லட்சம் வெள்ளி. வழங்க ஏற்பாடு செய்தார்.
  3. ஊராட்சி மன்ற உறுப்பினர்களாக  2008 ம் ஆண்டுக்கு முன் பாரிசான் ஆட்சியில் 37 பேர்களாக இருந்த இந்தியர்களின்  எண்ணிக்கையை 57ஆக உயர்த்தியவர்.
  4. மாநில அரசில் இந்தியர்கள் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் வண்ணம்  இந்தியர்களுக்கு கிராமத்தலைவர்கள் பொறுப்பை  வழங்க  ஏற்பாடு செய்தவர்.
  5. இந்தியர்களில் அதிகப்படியான பரம ஏழைகளுக்கு இலவச வீடுகளை வழங்கியவர்.
  6. இந்திய ஏழைகளுக்குக் கண், மற்றும் உடல் சிறு அறுவைச் சிகிச்சை மற்றும் இனிப்பு நீர் கூழ்மப்பிரிப்பு உதவி நிதியை ஏற்பாடு செய்தவர்

 

  1. நீண்ட நாட்களாகப் பாரிசான் அரசிடமிருந்து தமிழ்ப்பள்ளிக்கு வராத அங்கீகாரத்தை வாங்கித் தந்தார். தனது ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியில் 2009ம் ஆண்டு புதிய தமிழ்ப்பள்ளி நிறுவ 2.7 ஏக்கர் நிலத்தை வழங்கி, மாநில அரசுடன் பல சமுதாய இயக்கம் மற்றும் ஆலயங்களை ஒன்று சேர்த்துப் பள்ளியை நிறுவ மத்திய அரசை நிர்ப்பந்தித்ததுடன், கடந்த 27-06-2011ல் நாடாளுமன்றத்தில் இந்திய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட வட்ட மேஜை மாநாட்டிலும் அப்பள்ளிக்கான அனுமதி மீதான விவாதத்தை  முக்கிய அம்சமாக்கினார்.. தேர்தல் காலத்தில் இப்பிரச்சனை விசுவரூபம் எடுப்பதைத் தடுக்கவும், அதனால் பக்காத்தான் அரசியல் லாபம் அடைவதைத் தடுக்கப் பிரதமர் கையாண்ட யுக்தியே பூச்சோங் கின்ரார தமிழ்ப்பள்ளியில் புதிய ஆறு தமிழ்ப்பள்ளிக்கான அறிவிப்பும், அனுமதியும் வழங்கியது.
  2. அவர் ஆட்சிக்குழு பதவிக் காலத்தில் சிலாங்கூரில் 12 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம், 97தமிழ்ப்பள்ளிகளுக்கும் 2 கோடி வெள்ளி ஒதுக்கீட்டுக்கும் வழி வகுத்தவர்.
  3. தமிழ்ப்பள்ளிகளை  நவீன படுத்த, அறிவியல் கூடம், கைவினை தொழிற்பயிற்சி கூடம், 40 தமிழ்ப்பள்ளிகளில்  கணினிமையங்கள், பாலர் பள்ளிகளும் உருவாக்கினார்.
  4. இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு நிதி வழங்கிக் கல்வி பணியை ஊக்குவித்ததிலும் முன்னோடியாக விளங்கினார். மக்களுக்குக் கல்வி சேவையாற்றத் தமிழ் அறவாரியம், சைல்டு, ஈ.டபல்யூ.ஆர்.எப் போன்ற இந்திய அமைப்புகளுக்கும் நிதி வழங்கிக் கல்வி பணியை ஊக்குவித்தார். அதன் பயன் ஸ்ரீ முருகன் கல்வி மையம் போன்ற இந்திய இயக்கங்களுக்குப் பிரதமர் நஜிப்பின் மத்திய அரசும் நிதி வழங்கி அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கியது.
  5. மிட்லெண்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளியை முழுக்க இந்தியக் குத்தகையாளர்களைக் கொண்டு, குறிப்பிட்ட காலத்தில், தரமான கட்டடத்தை. நியாயமான விலையில் கட்டி முடித்ததால் இன்று நாடு முழுவதிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானத்தை மத்திய அரசு இந்தியக் குத்தகையாளர்களுக்கே கொடுக்க வழி வகுத்தவர்.
  6. தமிழ்ப்பள்ளி மேம்பாடு மற்றும் கட்டுமானப் பணிகளில் பொதுப்பணி இலாக்காவின் முழு ஆதிக்கத்திலிருந்து விடுவித்த பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் ஈடுபாட்டுக்கும் ஊக்கப்படுத்தியவர்.
  7. அதேபோன்று 9 தமிழ்ப் பள்ளிகளில் 15 பாலர் வகுப்புகளை 2009ம் ஆண்டிலேயே தொடங்கினார். அதனால், பாலர்பள்ளிகள்  இன்று தமிழ்ப்பள்ளிகளுக்கு மத்திய அரசாங்கச் செலவில் கிடைத்து வருகின்றன.
  8. இந்தியர்கள் அதிகம் வாழும் கிள்ளான் செந்தோசா, சுங்கைவே டேசா மெந்தாரி போன்ற இடங்களில் வாழும் ஏழை மாணவர்களுக்கும் பாலர் பள்ளி கல்வி கிட்ட மக்கள் பாலர்ப் பள்ளிகளை அமைத்தார்.
  9. மாநிலத்தின் உட்புறங்களிலுள்ள தமிழ்ப்பள்ளிகளைக் காப்பாற்றவும், அங்குள்ள ஏழை மாணவர்கள் கல்வியைக் கைவிடாமலிருக்க பஸ் கட்டணம் வழங்குவதைத் தொடங்கியவர்.
  10. கிள்ளானில் சுமார் பதினாறு ஏக்கரில் நிலத்தில் இந்தியக் கலாச்சார மையம் என்ற போர்வையில் இந்தியர்களுக்குத் தனி வர்த்தக நகருக்கே அடித்தளமிட்டார். அதில் இந்தியர்களை சொத்து உரிமையாளர்களாகவும் வியாபாரிகளாகவும் உருவாக்கத் திட்டமிட்டார்.
  11. பட்டணங்களில் மட்டுமல்ல தோட்டப்புறத் தமிழ்ப்பள்ளிகளும் பொது மண்டபம் போன்ற வசதிகளுடன் நிர்மாணிக்கப்படவேண்டும் என்பதனை மத்திய  அரசுக்கு  உணர்த்தும் வண்ணம் கோலசிலாங்கூர் ஈஜோக் தோட்டத்தில் மண்டபத்துடன் தமிழ்ப்பள்ளியை நிர்மாணிக்கும் வேலையைத் தொடங்கினார், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப் புதிய ஆட்சிக்குழு உறுப்பினருக்கு அக்கறை இல்லாததால் கட்டுமானம் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.
  12.  பின் தங்கிய நிலையிலுள்ள 500 தோட்டப்புற மாணவர்கள் தங்கிப் படிக்க எட்டு ஏக்கர் நிலத்தைத் தோட்ட மேம்பாட்டாளரிடமிருந்து பெற்று, 50 இலட்சம் வெள்ளியில் தங்கும் விடுதி நிர்மாணிப்புக்கு மாநில அரசின் அங்கீகாரத்தையும் வாங்கி விட்டார் ஆனால் அதுவும், அக்கறையின்றி ஒதுக்கித் தள்ளப்பட்டுள்ளது.
  13. கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக ஆட்சிக்குழுவில்  இடம் பெறா விட்டாலும், அமைதியாக ஆனால் ஆக்ககரமான சேவைகளை மேற்கொள்வதில் டாக்டர் சேவியருக்கு நிகர் அவரேயாகும்.
  14. கடந்த ஓர் ஆண்டில்  அவர் மேற்கொண்டுள்ள  சேவைகள், மக்கள் சேவையில் அவருக்கு உள்ள ஈடுபாட்டின் சிறப்பையே வெளிப்படுத்துகிறது.
  15.  ஏழை மகளிருக்கான உபரி வருமானத் திட்டமாக, அவர்களுக்குச் சமையல் முதல், தையல், மணி கோத்தல் போன்ற பல கைவினை தொழில் பயிற்சிகளைச் சளைக்காமல் வழங்கி வருவதுடன்,  அவர்கள் சிறு தொழில்களைத் தொடங்கக் கடன் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார்.
  16. அவர் தொகுதி மக்கள் மீது கொண்டுள்ள அக்கறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்த்து, சமீபத்தில் அவரின் நேரடி பார்வையில் 19 ஏக்கர் நிலத்தில் பூர்த்தியான வெள்ள நீர்த்தேக்கமும், அதன் ஒட்டிய பகுதிகளை உடல் பயிற்ச்சி, மற்றும் பொழுது போக்கு பூங்காவாக்க அவர் மேற்கொண்டு வரும்  பணிகள்.
  17. இப்பகுதியில்  கடந்த 20 ஆண்டுகளாக நிலவி வந்த வெள்ளப் பிரச்சனைக்கு இயற்கையையும். தாழ்ந்த நில அமைப்பையும் காரணங்களாக மட்டுமே  கூறி வந்த முன்னைய சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அங்குள்ள மக்களின் வேதனைக் கண்டு வெகுண்டு எழுந்து பிரச்சனைக்குத் தீர்வு கண்டுள்ளார்.

 

ஒரு ஏக்கர் நிலத்தைக்கூடப் பொதுக்காரியங்களுக்கு விட்டுக்கொடுக்காத மேம்பாட்டாளர்களிடமிருந்து 19 ஏக்கர் நிலத்தைப் பெற்று அதனை மழை நீர் தேக்கமாகவும், பூங்காவாகவும் தனியார் துறையின் பொருளாதார உதவியுடன் மேற்கொள்வது அசாதாரண விசயமாகும்.

 

இத்திட்டத்தால், வெள்ள அபாயத்தை நீக்கி, இப்பகுதியில் ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதுடன், அங்கு வீடு போன்ற சொத்துகளின்  மதிப்பை  உயர்த்தவும் வழி வகுத்துள்ளார். அங்கு இந்தியர்கள் அதிகமான நடுத்தர விலை வீடுகளை வைத்துள்ளளர். அச்சொத்துகளும் சிறந்த  விலை ஏற்றம் காணும்.

 

மக்களுக்கு டாக்டர் சேவியர் ஜெயக்குமாரின் சேவை மேலும்  தொடர அவரை மீண்டும் ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும்.