வரண்ட சமூகத்தின் பிரதிநிதிகள் நாம்!

Library1நூலைப் படி – சங்கத்தமிழ்

நூலைப்படி – முறைப்படி

நூலைப்படி   

 காலையில் படி – கடும்பகல் படி

மாலை இரவு பொருள்படும்படி

பாவேந்தர் பாரதிதாசனின் பொருள் பொதிந்த கவிதை வரிகள். இன்றைய நிலையில் எப்போதாவது கவிதை போட்டிகளில் மட்டுமே கேட்க முடிகிறது.

வாசிப்பு மட்டுமே நம்மைச் சுற்றி இருக்கும் உலகினை நேசிப்புக்கு உள்ளாக்கும். வாசிப்பு மட்டுமே உலகின் பிரமாண்டங்களையும் அழகினையும், அழகியலையும், வாழ்வையும், வலிகளையும் நமக்கு விரிவாக எடுத்துரைக்கும் என வாசித்திருக்கிறேன்.

இன்றைய நிலையில் வாசிப்பதற்கு நேரமே இல்லை என வாய்க்கூசாமல் எல்லாராலும் சொல்ல முடிகிறது. நாம் நமது நண்பர்களுடன் வீண் பேச்சுகளிலும், அரட்டைகளிலும், ஊர் சுற்றித் திரிவதிலும் நமது நேரத்தை வீணடிப்பது குறித்து நமக்கு சிறிதும் கவலை இல்லை. ஆனால், நம்மை, நம் சிந்தனையை உயர்வடையச் செய்யும் புத்தகங்களைப் படிப்பதற்கு மட்டும் நேரம் இல்லை என்று புலம்புகிறோம்.

சிலவேளைகளில் நமது பெற்றோர்களைப் பார்த்தால் உங்கள் பிள்ளைகள் வாசிக்கிறார்களா என்று கேட்பேன். ஆமாம். எப்போதும் பாடப்புத்தங்களை வைத்து படித்துக் கொண்டே இருக்கிறார்கள் – வீட்டுப் பாடங்கள் செய்கிறார்கள் என்பார்கள். பாடப்புத்தங்கள் படிப்பதும் வீட்டுப் பாடங்கள் செய்வதும் வாசிப்பாகாது என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பதற்குள் நமக்கு விழிபிதுங்கி விடும். வாசிப்பு என்பது கதைப்புத்தகங்கள், நூல்கள், பத்திகள் என இன்னபிறவற்றை வாசிப்பது. வீட்டுப் பாடங்கள் செய்வது வாசிப்பாகாது.

பிறகுப் பெற்றோர்களைப் பார்த்து நீங்கள் என்ன வாசிப்பீர்கள் என்று கேட்பேன். சிலர் முறைப்பார்கள். சிலர் நாளிதழ் வாசிப்பதாக சொல்வார்கள். இன்றைய முதல்பக்க செய்தி என்னவென்று கேட்டால் ஏதாவது சொல்லி மழுப்புவார்கள். இன்னும் சிலர் வேலைக்கே நேரம் சரியாய் இருக்கிறது பிறகு எங்கே வாசிப்பது என்பார்கள். ஆனால், வேலை முடிந்து வீட்டிற்கு வந்து மணிக்கணக்கில் சீரியல் பார்க்க மட்டும் நேரம் இருக்கும். பிள்ளைகள் படிப்பதில்லை வாசிப்பதில்லை என்ன பக்கம் பக்கமாக குற்றப்பத்திரிகை மட்டும் வாசிப்பார்கள்.

புத்தகங்களை விரும்பிப் படிக்கும் தம்பதியரை அரிதாகவே பார்க்க முடிகிறது. இவர்கள் குழந்தைகளும் பெரும்பாலும் வாசிக்கும் பழக்கம் உடையவர்களா  இருக்கிறார்கள். பெற்றோர் புத்தகங்களை வாசிக்கும்போது, குழந்தைகளின் ஆரோக்கியமான மனவளர்ச்சிக்கான சாத்தியங்கள் கூடுகின்றன.

http://www.dreamstime.com/stock-photos-kids-reading-image27387783புத்தகங்களை விரும்பிப் படிக்கும் தம்பதியரை அரிதாகவே பார்க்க முடிகிறது. வாசிக்கும் பழக்கமுடைய பெற்றோர்களையுடைய பிள்ளைகள் வாசிப்பு பழக்கமுடையவர்களாக வளர்வதற்கான சாத்தியங்கள் உள்ளன.

எப்போதும் பெற்றோர்கள்தான் தங்கள் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஒரு நாளுக்கு ஒரு பக்கத்தைக்கூட புரட்டிப் பார்க்காத பெற்றோர்கள் வாசிப்பதில்லை என தங்கள் பிள்ளைகளைப் புரட்டி அடிப்பது எப்போதும் பயனளிக்கப் போவதில்லை.

இன்று வரை ஒவ்வொரு நாளும் ஒரு சில பக்கங்களையாவது வாசிக்காமல் நான் உறங்கப்போவதில்லை. இந்த பழக்கம் என் பெற்றோர்களிடமிருந்து எனக்கு வந்தது. அவர்கள் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட ஒரு நேரத்திற்கு வாசித்தார்கள். அதனால், நானும் வாசிக்கப் பழகினேன். இன்றுவரை தொடர்ந்து வாசிக்கிறேன்.

இப்படியாக என்வரை என்னோடு தொடர்ந்து வரும் வாசிப்பு பழக்கம் என்பது நான்கு வயதில் என் வீட்டில்தான் தொடங்கியது. வாசிப்பு சிறுவயதிலிருந்தே பழக்கப்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் எதையுமே வாசிக்க விரும்பாத கணினி விளையாட்டுகளுக்கும் கைப்பேசிகளுக்கும் அடிமையாகிப் போன ஒரு சமுதாயத்தை மட்டுமே நம்மால் வளர்த்தெடுக்க முடியும். இது ஒரு பகிர்தல் மட்டுமே. வாசிக்கும் சமூகமே ஆக்கரமான சிந்தனையுடைய சமூகமாக மாறும்…

 இலக்கியா