தமிழ்த் திரையுலகினர் மௌன உண்ணாவிரதம்

  • தமிழ்த் திரையுலகினர் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மெüன உண்ணாவிரதத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் சரத்குமார், ஆனந்தராஜ், சூர்யா, சிவகார்த்திகேயன், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், நடிகர் மன்சூர் அலிகான், நடிகர் விஜயன் உள்ளிட்டோர்.
  • தமிழ்த் திரையுலகினர் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மெüன உண்ணாவிரதத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் சரத்குமார், ஆனந்தராஜ், சூர்யா, சிவகார்த்திகேயன், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், நடிகர் மன்சூர் அலிகான், நடிகர் விஜயன் உள்ளிட்டோர்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதில், தங்களது மன வேதனையை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்த் திரையுலகம் சார்பில் செவ்வாய்க்கிழமை மௌன உண்ணாவிரதம் நடைபெற்றது.

சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வளாகம் முன் காலை 9 மணிக்குத் தொடங்கிய இந்த மௌன உண்ணாவிரதப் போராட்டத்தில் தென்னிந்தியத் திரைப்பட வர்த்த சபை, தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்த் திரைப்படப் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு திரை அமைப்புகள் கலந்து கொண்டன.

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார், தயாரிப்பாளர்கள் சங்கச் செயலளார் டி.சிவா, தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஜி.சிவா, சென்னை மாநகர திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர்கள் பிரபு, சத்யராஜ், ராஜ்கிரண், செந்தில், விக்ரம், சூர்யா, கார்த்தி, ஸ்ரீகாந்த், சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, விமல், விவேக், சூரி, நடிகைகள் வெண்ணிற ஆடை நிர்மலா, நளினி, குயிலி, சி.ஆர்.சரஸ்வதி தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, இப்ராஹிம் ராவுத்தர், சட்டப்பேரவை உறுப்பினர் கலைராஜன், இயக்குநர்கள் பி.வாசு, எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் இந்த மௌன உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டம் காரணமாக, சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த படப்பிடிப்பு உள்ளிட்ட திரைப்படப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

தமிழகம் முழுவதும் மாலை 6 மணி வரை திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. மாலை 5 மணிக்கு

நடிகர் சரத்குமார் உள்ளிட்டோருக்கு பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் விசாரணை

தமிழ்த் திரையுலகினரின் போராட்டத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே தமிழ்த் திரையுலகினர் சார்பில் மௌன உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், திரைப்பட மக்கள் தொடர்பு அலுவலராக இருக்கும் ராதா கண்ணன் என்பவரின் செல்போனுக்கு திங்கள்கிழமை நள்ளிரவு ஓர் அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர், திரைப்படத்துறையினர் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் வெடிகுண்டு வெடிக்கும் எனக் கூறி இணைப்பைத் தூண்டித்துள்ளார்.

இது குறித்து சென்னைப் பெருநகர காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீஸார், ராதா கண்ணனின் செல்போனுக்கு எங்கிருந்து அழைப்பு வந்தது என விசாரணை செய்து வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டலால், உண்ணாவிரதம் நடைபெற்ற பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.