“பாவையின் செருப்பை எடுத்த பாரதப் பிரதமர்”

 

nehru1இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான காஷ்மீர் சம்பந்தப்பட்ட தகராற்றில் இந்தியாவுக்கும் அதன் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும் எதிராக பாக்கிஸ்தான் காராச்சியில் ஒரு பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அந்த ஆர்பாட்டத்தின் போது அதில் பங்குபெற்றவர்களில் பலர் நேருவுக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பியதோடு அவரது கொடும்பாவியை எரித்து தக்களுடைய ஆத்திரத்தைக் காட்டினர்.

இச்சம்பவம் குறித்து புதுடில்லியில் செய்தியாளர்கள் நேருவிடம் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு அவர் தாம் நலமாக இருப்பதாகவும், இதெல்லாம் வழக்கமானவைதான் என்று சிரித்த முகத்துடன் கூறினார்.

nehru3பின்னர், நேரு தமிழ் நாட்டில் பயணம் மேற்கொண்டிருந்த போது சென்னையில் திமுகவினர் அவருக்கு எதிராக பெரும் போராட்டத்தில் இறங்கினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் நேருவின் மீது செருப்புகளை வீசி எறிந்தனர். அவரது கட்சிக்காரர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தாலும், நேரு இதைப் பொருட்படுத்தவே இல்லை.

பாக்கிஸ்தானின் பிரதமர்களில் ஒருவரான சௌத்திரி முகமட் அலியும் அவரது துணவியாரும் இந்திய வருகை மேற்கொண்டு புதுடில்லி பாலம் விமானநிலையத்தில் வந்திறங்கினர்.

அவர்களை வரவேற்க பிரதமர் நேருவும் இதர அதிகாரிகளும் விமான நிலையத்தில் இருந்தனர்.

விமானத்திலிருந்து இறங்கி வருகையில் விமானப் படிக்கட்டில் கால் இடரியதால் முகமட் அலியின் துணைவியாரின் காலணியில் ஒன்று படிக்கட்டின் பின்புறத்தில் விழுந்து விட்டது. அதனை அவரது கணவர்nehru2 உட்பட அங்கிருந்த அனைவரும் கண்டனர். ஆனால், எவரும் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. பாவையின் செருப்பை எடுப்பது …?

அங்கு மற்றவர்களுடன் நின்றுகொண்டிருந்த நேரு, நேரடியாக விமானப் படிக்கட்டின் பின்புறத்திற்குச் சென்று கீழே விழுந்து கிடந்த செருப்பை எடுத்துக் கொண்டு வந்து பாக்கிஸ்தான் பிரதமர் முகமட் அலியின் துணைவியாரிடம் கொடுத்தார்.

இதனால் அதிர்ந்து போன அவர், நேருவின் இரு கரங்களையும் பற்றிக்கொண்டு கண்களில் நீர் பொங்கி வழிய “அண்ணா” என்று கதறி அழுதார்.

அடுத்த நாள், நேரு “பாவையின் செருப்பை எடுத்த பாரதப் பிரதமர்” என்று வர்ணிக்கப்பட்டார்.

nehru7சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும் நேருவின் நெருங்கிய நண்பருமான இராஜாஜி காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி சுதந்திரா கட்சியை உருவாக்கினார். அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெயப்பூர் மகாராணி ஒரு நாள் இந்திய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் நேருவை கடுமையாகச் சாடினார்.

அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் அந்த உரையுடன் ஜெயப்பூர் மகாராணியின் அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டது என்று கருதினர்.

மகாராணியின் சாடலுக்கு பதில் அளிக்க எழுந்த நேரு, “Mr. Speaker, Sir, I shall not bandy words with the Honourable Lady Member. Thank you, Sir”, என்று கூறி தமது இருக்கையில் அமர்ந்தார்.

நாடாளுமன்றத்தில் ஒரே மகிழ்ச்சி ஆரவாரம்.

சில நிமிடங்களுக்குப் பின்னர், ஜெயப்பூர் மகாரணி நேருக்கு பக்கத்தில் குனிந்த தலையுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

இன்னொரு சம்பவத்தில், நேரு நாடாளுமன்றத்தில் இயற்றிய சட்டம் ஒன்றை அலஹாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி அரசமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது என்று தீர்ப்பளித்தார்.

தீர்ப்பைக் கேட்ட நேரு, அவசரப்பட்டு நீதிபதியை குறைகூறினார். ஆனால், கணநேரத்தில் தமது தவறை உணர்ந்த அவர் அதிகாரப் பகிர்வு கோட்பாட்டிற்கு முரணாக நடந்து கொண்டதற்காக அவர் நீதிபதியிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

சில ஆண்டுகளுக்குப் பின்னர், அதே நீதிபதி இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெறுவதற்கான தகுதியைப் பெற்றிந்தார். ஆனால், அவரது நண்பர்கள் இது நடக்கப்போவதில்லை என்று கூறினர். தம்மை பகைத்துக் கொண்டவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அதிபரிடம் பிரதமர் ஆலோசனை கூறுவாரா என்று கேட்டனர்.

நேரு ஆலோசனை கூறினார். அதிபர் அதே நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அந்த நீதிபதி பல ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதிய ஒரு கட்டுரையில் நேருவை “Pillar of Justice” என்று குறிப்பிட்டார்.

nehru10தனித் திராவிட நாடு கோரி போராட்டம் நடத்திய அறிஞர் அண்ணா சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது நேரு அவருடன் தொலைபேசி வழி தமிழ் நாடு சம்பந்தப்பட்ட விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார். ஒரு குற்றவாளியுடன் ஆலோசனை நடத்தியதற்காக நேருவை பலர் கண்டித்தனர்.

அதற்கு பதில் அளித்த நேரு, ஒரு குறிப்பிட்ட சட்டத்தை மீறியதற்காக அவருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவர் தமிழ் நாட்டு தலைவர்களில் ஒருவர். அவருடன் கலந்தாலோசிப்பது தமது கடமையாகும் என்றார்.

இப்படி, நேருவின் காழ்ப்புணர்வு அற்ற பெருந்தன்மைக்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.

அப்பெருந்தன்மை மற்றவர்களிடமிருந்தும் பெருந்தன்மையை ஈர்த்திருக்கிறது.

nehru4ஜவஹர்லால் நேரு காலமானதைக் கேட்ட சுதந்திரா கட்சியின் தலைவரான இராஜாஜி, “நண்பா, நாளை நான் யாருடன் nehru8போரிடுவேன்” என்று கலங்கினார்.

இப்பேற்பட்ட பெருந்தன்மைகளைக் கொண்டிருந்ததால் ஜவஹர்லால் நேருவை கவிஞர் கண்ணதாசன் இப்படி ஒப்பீடு செய்கிறார்:

“போதி மரத்து புத்தன் போய் விட்டான் என்றிருந்தோம். போனவன் பாதி வழியில் பண்டிதனாக திரும்பி வந்தான்.”

இப்படிப்பட்ட ஒரு தலைவரை நமது நாட்டில் காண நமக்கு பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும். அந்த நம்பிக்கை உண்டு. இங்கும், நமது இருவர் ஓரளவுக்கு புன்னகையுடன் மோதியுள்ளனர்.

nehru9நீர் சிலோனுக்கு திரும்பிப் போக வேண்டும் என்றார் துங்கு அப்துல் ரஹ்மான். அப்படியா, முதலில் நீர் தாய்லாந்துக்கு திரும்பிப் போக வேண்டும் என்றார் டி.ஆர். சீனிவாசகம்.

இது போன்ற பல மோதல்களுக்கிடையில் துங்குவும் சீனியும் தங்களுடைய கைகளில் கிளாஸை வைத்துக் கொண்டு nehru6தம் அடித்து விடுகின்ற புகையின் அழகே அழகு!

இப்படி ஒருவரை ஒருவர் திரும்பிப் போ என்று கூறி, அது நடந்தால் இந்த நாட்டில் மனிதர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

மரினா மகாதீரை போல் இந்நாட்டில் யார் உண்மையான மலாய்க்காரர் என்று கேட்டு அதற்கு அவரே “நான் இல்லை” என்று கூறியதைப் போன்ற பதில் இந்நாட்டின் ஒவ்வொரு மலாய், சீன, இந்திய மற்றும் இதர இன மக்களிடமிருந்து வரும் போது இங்கும் ஒரு பண்டிதன் தோன்றுவான்.