சுமுகமான உறவு நிலை ஏற்பட வேண்டுமானால், அராசங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்

Lanka_1610364f_16

அரசுக்கும் வடமாகாண சபைக்கும் இடையிலான முறுகல் நிலையும் அதிகரித்துள்ள இடைவெளியும் குறைந்து இருதரப்பினருக்கும் இடையில் சுமுக உறவு நிலை ஏற்பட வேண்டுமானால் அரசாங்கம் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வவுனியா புளியங்குளத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்வவுனியா வடக்கு பிரதேச செயலகமாகிய நெடுங்கேணி செயலகப் பிரிவுக்கு உட்பட்ட புளியங்களத்தில் வடமாகாண சபை வவுனியா செயலகத்துடன் இணைந்து நேற்றைய தினம் ஒழுங்கு செய்திருந்த இரண்டு நாள் நடமாடும் சேவையில் கலந்து கொண்டிருந்த போது அவர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டார்.

வவுனியா புளியங்குளத்தில் ஏற்பாடு செய்திருந்த, இந்த மக்களின் குறைநிவர்த்திக்கான நடமாடும் சேவையில் வவுனியா அரசாங்க அதிபர் உள்ளி;ட்ட அரச செயலக அதிகாரிகளோ, நெடுங்கேணி பிரதேச செயாளர் உள்ளிட்ட பிரதேச செயலக அதிகாரிகளோ நேற்றைய முதல் நாள் அமர்வில் கலந்து கொள்ளவில்லை. நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்கள் இந்த நடமாடும் சேவைக்கு வருகை தரவில்லை.புளியங்குளம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையின் ஆரம்ப வைபவத்தில் உரையாற்றிய வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம், இந்த நிகழ்வுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவதாக வவுனியா அரசாங்க அதிபர் முதலில் உறுதியளித்திருந்த போதிலும், இந்த நிகழ்வு ஆரம்பமாகிய நேற்றைய தினம் காலை வரையில், இந்த நிகழ்வில் எவரும் கலந்து கொள்ளக் கூடாது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் கண்டிப்பாக உத்தரவிட்டிருந்ததாகக் கூறினார்.

இந்த நடமாடும் சேவையில் மத்திய அரசாங்க நிர்வாகத்தின் கீழ் பணிபுரிகின்ற அதிகாரிகளுக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள மரம்நடும் வைபவம் சம்பந்தமாக வேளைப்பளு இருப்பதனால்தான் அந்த அதிகாரிகள் எவரும் வடமாகாண சபையின் இந்த நடமாடும் சேவைக்கு சமூகமளிக்க முடியாமல் போனது என்று தெரிவித்திருக்கின்றார்கள். ஆனால் உண்மையில் இந்த நிகழ்வு அவர்களால் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது.

 

இருப்பினும் திட்டமிட்டபடி, இந்த இரண்டுநாள் நடமாடும் சேவையின் நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்றும் வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.வவுனியா மாவட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வடமாகாண சபையின் இந்த நடமாடும் சேவையை மத்திய அரச நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் புறக்கணித்திருக்கின்றார்களே, இதற்கு நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கேட்டதற்கு, இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன என்று தெரிவித்தார்.இதகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:யுத்த மோதல்கள் நடைபெற்ற கடந்த 30 காலத்தில் எங்களுடைய மக்கள் மட்டுமல்ல அரசாங்கமும் கூட ஒருவிதமான வாழ்க்கை முறையை தங்களுக்கென்று ஏற்படுத்தியிருக்கினற்றார்கள். அந்த அடிப்படையில் அவர்கள் வளர்ந்து வந்திருக்கின்றார்கள்.

வடமாகாண சபையென்பது ஒரு புதுமையான புதுவிதமான நிறுவனம், இருந்தாற்போல் திடீரென நடைமுறைக்கு வந்திருக்கின்றது. அதனுடைய செயற்பாடும், உள்ளீடும், இதுவரை காலமும் நடந்து கொண்டிருந்த நடைமுறைகளுக்குச் சற்று தடங்கல் விதிப்பதாக அமைந்திருக்;கின்றது.

இதனால் தான் இந்தப் பிரச்சினை ஏற்படுகின்றது. அhசாங்கத்தைப் பொறுத்தவரையில் இதுவரை காலமும் தங்களுக்கிருந்த அதிகாரங்களைக் கைவிடுவதற்கு அவர்களுக்கு விருப்பமில்லை.ஒரு தேர்தலிலே அரசாங்கக் கட்சிகள் தோற்றதன் பிற்பாடு, நாங்கள் தோற்றுவிட்டோம் என்ற எண்ணம் வரவேண்டும்.

 

ஆனால் மத்தியில் அவர்கள் நல்ல பலமாக இருப்பதனால், இந்தத் தோல்வியை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலையில், தொடர்ந்து வடமாகாணத்தைத் தங்களுடைய கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கவே விரும்புகின்றார்கள்.இரண்டாவதாக வேறு அரசியல் காரணங்களுக்காகவும் வடமாகாணத்தைத் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இராணுவத்தை இங்கு குவித்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே, இத்தகைய ஒரு பின்னணியில் சில அதிகாரிகளுக்கு என்ன செய்வதென்று சரியாகப் புரியவில்லை. அடுத்தது அவர்களுக்கு சில நன்மைகள், அரசாங்கத்திடமிருந்தோ அமைச்சர்களிடமிருந்தோ பெற்றுக்கொண்டிருப்பதனால், அவர்களுக்கு எதிராக எதனையும் செய்ய முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்றது.

 

ஆகவே எவர் மீதும் எங்களுக்குக் கோபமில்லை. அவர்களுடைய உண்மையான நிலையை, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே புரிந்து, எங்களோடு சேர்ந்து, மக்களுடைய சேவைக்காக அவர்கள் வரும் வரையில் நாங்கள் காத்திருப்போம்.

ஆனால், சட்ட ரீதியாக ஒரு நிர்வாக ரீதியாக என்னென்ன கடப்பாடுகள் எனக்கு இருக்கி;ன்றதோ, ஒரு முதலமைச்சர் என்ற முறையிலே சில சில நடவடிக்கைகளை அந்தந்த அலுவலகர்களுக்கு எதிராக எடுக்க வேண்டியிருக்கும். அதனை நான் எடுப்பேன். அதற்கு நான் தயங்கமாட்டேன்.

ஆனால் அவர்களுடைய மனோ நிலை எனக்கு நன்றாகப் புரிகின்றது. அவர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து வந்த காரணத்தி;னாலே, அவர்களுடைய நடவடிக்கைகளிலே, மாற்றங்கள் ஏற்படாமல் இருக்கின்றது. அது ஒரு காரணம்.இரண்டாவது அரசாங்கம் தங்கள்மீது கோபம் கொண்டுவிடுமோ என்றதொரு பயம் அவர்களுக்கு இருக்கின்றது.

மூன்றாவது, எங்களுடன் சேர்ந்து நடவடி;கைகளில் இறங்காமல் இருப்பதற்காக அவர்களுக்கு அரசியல் ரீதியாக சில காரணங்கள் இருக்கின்றன. இதைத்தான் என்னால் கூறமுடியும்அதேநேரம் வடபகுதிக்கு விஜயம் செய்த ஜனாதிபதியின் வருகையை வடமாகாண சபையும் கூட்டமைப்பினரும் புறக்கணித்திருந்தார்கள். அதேவேளை, மாகாண சபையும் கூட்டமைப்பினரும் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கின்றார்களில்லை என குறிப்பிட்டு ஜனாதிபதி அவர்களைச் சாடியிருந்தார்.

நீங்களும் அதற்குக் காட்டமாகப் பதிலளித்திருந்தீர்கள். இதனால், அரசாங்கத்திற்கும், வடமாகாண சபைக்கும் இடையிலான அரசியல் முரண்பாடுகள் அதிகரித்திருக்கின்றது. இரு தரப்பினருக்கும் இடையில் இடைவெளி அதிகமாகியிருக்கின்றது.

இந்த நிலையில் வடமாகாண சபையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என கேட்டபோது, இந்த நிலைமையை வருத்தத்துடன்தான் தான் பார்ப்பதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன், அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டால்தான் இரு தரப்புக்குமிடையில் ஒரு சுமுகமான நிலைமை ஏற்படும் என தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:வடமாகாணத்தைத் தவிர ஏனைய எட்டு மாகாணங்களும் அரசாங்கத் தரப்பினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றன. அவர்களுடைய கட்சிதான் அவற்றில் முழுமையான அதிகாரத்தில் இருக்கின்றது. எங்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு ஒரு வித்தியாசமான கட்சி, வித்தியாசமான மக்கள், வித்தியாசமான ஒரு நோக்கு, போரின் பின்னணியில் இருந்து வந்த மக்களின் தேவைகள் என்று பலவிதமான சிக்கல்களுடன் இருக்கின்ற ஒரு மாகாணம்தான் வடமாகாணம்.

ஆகவே, வடமாகாணத்துடைய நடவடிக்கைகள் வித்தியாசமாக நடைபெறுவதை அரசாங்கம் முதலிலே ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த ஏற்பு இருந்தால்தான் பல விஷயங்களையும் கொண்டு நடத்த முடியும். இதற்காகத்தான் என்னுடைய மக்கள் எனக்கெதிராகப் பலவிதமான விமர்சனங்களையும் செய்மபோது, நான் ஜனாதிபதி முன்னிலையிலே சென்று, என்னுடைய பதவிப் பிரமாணத்தைச் செய்துகொண்டேன்.

இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்கனவே உள்ள இடைவெளி பெருத்துக் கொண்டு போகக்கூடாது என்பதற்காகவும், மக்களின் நன்மையைக் கருத்திற் கொண்டு, நாங்கள் ஓர் எதிர்ப்பு அரசியலில் ஈடுபடாமல் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் அதனைச் செய்தேன்.அவ்வாறு செய்வதன் மூலம் பல முன்னேற்றங்கள் ஏற்படும் பல நன்மைகள் கிட்டும் என்று நான் உண்மையிலேயே அப்போது எதிர்பார்த்திருந்தேன். ஜனவரி மாதம் 2 ஆம் திகதி நான் ஜனாதிபதியடன் பேசியபோது, முழுமையான ஒத்துழைப்பைத் தருவதாக அவர் சொன்னதால் நான் மகிழ்ச்சியுடன் இருந்தேன்.

ஆனால், அரசியல் ரீதியாக, அரசியல் காரணங்களுக்காக அவர்கள் எங்களைப் புறக்கணிக்கத் தலைப்பட்டுள்ளார்கள் என்பதை நான் பின்னர்தான் தெரிந்து கொண்டேன். ஆகவே அரசாங்கம் தன்னை மாற்றி;க்கொள்ள வேண்டுமேயொழிய எங்களை நாங்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் எமக்கு இல்லை.

நாங்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைத்தோம். அரசாங்கத்தை முழுமையாக நம்பித்தான் நாங்கள் எங்களுடைய நடவடிக்கைகளை எடுத்தோம். எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலே நாட்டைப் பிரிக்க வேண்டிய அவசியமில்லை.

பிரிபடாத ஒரு நாட்டின் உள்ளே அதிகபட்ச அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலே சில விடயங்களை நாங்கள் முன்வைத்தோம். ஆனால் எங்களுடைய தனித்துவத்தை மதிக்க வேண்டும் என்று நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். இவ்வளவையும் நாங்கள் செய்து ஜனநாயக முறையான ஒரு நாட்டிலே, ஜனநாயக முறையில் எப்பேர்ப்பட்ட சட்டரீதியான விடயங்களை முன்வைக்க முடியுமோ அவற்றையெல்லாம் முன்வைத்தோம்.

அரசாங்கத்துடனான எங்களுடைய நடவடிக்கைகள் எல்லாம் பண்பாகவே இதுவiயில் நடைபெற்று வந்திரக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் புறக்கணித்து, அரசியல் காரணங்களுக்காக வேறு விதமாக நடந்து கொள்வதை மிகவும் வருத்தமாகத்தான் நான் பார்க்கிறேன். அரசாங்கம் தன்னை மாற்றிக் கொண்டால்தான் எங்களுக்குள் ஒரு சுமுகமான உறவுநிலை ஏற்படும். இல்லையென்றால் நாங்கள் எங்களுடைய கருத்துக்களை எடுத்தியம்ப வேண்டிய அவசியம் ஏற்படும். இதைத்தான் என்னால் கூறமுடியும்.

TAGS: