நடந்தது இனஅழிப்பே! விடாப்பிடியாக மாகாணசபையில் சிவாஜிலிங்கம்!!

sivajilingam-001இன அழிப்பு தொடர்பான தனது பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாவிட்டால் வடமாகாணசபையில் தொடர்ந்தும் கதிரையினில் ஓட்டிக்கொண்டிருப்பது பற்றி சிந்திக்க வேண்டியிருப்பதாக தெரிவித்துள்ளார் கே.சிவாஜிலிங்கம்.

இலங்கை அரசினாலும் அதன் ஆயுதப்படைகளாலும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டதும் மேற்கொள்ளப்பட்டு வருவதும் இனப்படுகொலை என வடமாகாணசபை ஆழமாக நம்புகின்றதென்பதை சர்வதேச சமூகத்திற்கு கூறி வைக்க விரும்புகின்றதெனும் பிரேரணையினை வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் மீண்டும் பேரவையில் முன்வைத்துள்ளார்.

எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவுள்ள வடமாகாணசபை அமர்வினில் தனது தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென அவர் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திற்கு உத்தியோகபூர்வமாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை அவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டினில்; இது பற்றி மேலும் தெரிவிக்கையினில் ஏற்கனவே என்னால் முன்மொழியப்பட்ட பிரேரணையினை எனது உரிமைகளை மீறி இன்று வரை வடமாகாணசபையின் அமர்வுகளினில் முன்வைக்க அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் பின்னடித்து வருகின்றார்.

இந்நிலையில் எனது பிரேரணை தொடர்பினில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைமை தமக்கு தெரியப்படுத்திய முடிவின் பிரகாரம் பேரவையினில் சமர்ப்பிக்க முடியாதிருப்பதற்கான காரணங்களென அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்தில் சர்வதேச விசாரணையின் சுயாதீன செயற்பாட்டையும் அதற்கான மதிப்பினையும் இப்படியான தீர்மானங்கள் பாதிக்குமெனவும் தெரிவித்துள்ளதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அக்குற்றச்சாட்டை நிரகாரித்துள்ள சிவாஜிலிங்கம் இன அழிப்பு தொடர்பாக மாகாணசபையினில் நிறைவேற்றப்படப்போகும் தீர்மானம் எந்தவகையிலும் சர்வதேச விசாரணையின் சுயாதீன செயற்பாட்டையும் அதற்கான மதிப்பினையும் பாதிக்காதெனவும் அதனை வலுப்படுத்தவே உதவுமெனவும் தெரிவித்தார்.

தனது பிரேரணை தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டால் அதற்கு எதிராக பேரவையினில் ஜனநாயக ரீதியினில் தான் போராட முடிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

TAGS: