“ஆம், மலாய்க்காரர்கள் வந்தேறிகள்தான், ஆனால் முதலில் வந்தோம்”

 

Malays pendatangமலாய்க்காரர்களும் வந்தேறிகள்தான். ஆனால் அவர்கள் முதலில் வந்தவர்கள் என்று முன்னாள் அமைச்சர் ஸைனுடின் மைதின் ஒப்புக் கொண்டார்.

நேற்று கெராக்கான் மாநாட்டில் அதன் ஜொகூர் பேராளர் டான் லாய் சூன் சீனர்களையும் இந்தியர்களையும் வந்தேறிகள் என்று கூறி வரும் அம்னோ தலைவர்களை சாடியதோடு மலாய்க்காரர்களும் வந்தேறிகள்தான் என்று கூறினார்.

லாய் சூனின் கருத்துக்கு எதிர்வினையாற்றிய முன்னாள் தகவல்துறை அமைச்சர் ஸைனுடின் மைதின் மலாய்க்காரர்கள் வந்தேறிகள் என்று ஒப்புக்கொண்டார். ஆனால், அவர்கள் முதலில் வந்தவர்கள் என்றார்.

மலாய்க்காரர்கள் மிக வலிமைவாய்ந்தவர்கள், தைரியசாலிகள், விவேகமானவர்கள். அதனால்தான் நாட்டின் தொடக்க வரலாற்றிலிருந்து அவர்கள் போற்றப்பட்ட மன்னர்களானார்கள் என்றாரவர்.

“நானும் ஒரு வந்தேறிதான். எனது தகப்பனாரிடம் இந்திய இரத்தம் ஓடுகிறது. தாயாரிடம் அரேபிய இரத்தம். ஆனால், நான் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் மலாய்க்கார் ஆனேன், ஏனென்றால் முஸ்லிமாக இருப்பதுடன் நான் மலாய் கலாச்சாரத்தையும் பின்பற்றுகிறேன். பகசா மலேசியாவை பயன்படுத்துவத்தில் எனக்கு தர்மசங்கடம் அல்லது அந்நியமான உணர்வு ஏதும் இல்லை”, என்று ஸைனுடின் கூறினார்.

கேள்வி யார் முதலில் வந்த வந்தேறி என்பதல்ல. ஒரு வந்தேறிக்கு இன்னொரு வந்தேறியை திரும்பிப் போ என்ற கூற என்ன உரிமை இருக்கிறது என்பதுதான்.