ஹிண்ட்ராப் 2.0 இனி வேண்டாம்! தீபாவளி தீர்மானமாகட்டும்!

K. Arumugam_suaramகா. ஆறுமுகம். தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி; யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றார் புறனாற்றுக்கவி கணியன் பூங்குன்றனார். இவர்களோடு அறம் செய்யக் கோரிய ஔவையார், அரசியலுக்கும் நெறி வகுத்த வள்ளுவர், இப்படியான இத்யாதிகளோடு உழன்று உருவானதுதான் தமிழர் வாழ்வு.

மேடைக்கு மெருகூட்ட தமிழர்கள் உலகெங்கும் உள்ளனர், ஆனால் இங்குதான் (மலேசியாவில்) வாழ்கிறார்கள் என்று அறிஞர் அண்ணா ஒருமுறை சொன்னதை பலமுறை பேசிப்பெருமை கொண்டிருந்தோம்.

ஏழு வருடங்களுக்கு முன்பு, உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம், உணர்வை இழக்கலாமா? உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த, கனவை மறக்கலாமா? என்ற ஆபாவாணனின் பாடல் வரிகளை இயக்கப் பாடலாகக் கொண்டு தெருவில் போரட ஹிண்ட்ராப் களமிறங்கிய போது ஆயிரக்கணக்கான வெகுசன மக்கள் பயமின்றி பங்கெடுத்தனர்.

கோயில் உடைப்பு, போலீஸ் காவலில் இருக்கும் இந்திய கைதிகளின் மரணம், தோட்டப்புற வீடுடைப்பு, புறநகரில் தஞ்சம் புகுந்த இந்தியர்களின் தொடர்ந்த வெளியேற்றம் போன்றவற்றால் இந்தியர்கள் ஒடுக்கப்பட்டனர், ஒதுக்கப்பட்டிருந்தனர்.

தோட்டப் புறங்களில் நாட்சம்பள முறையில் உயிர்வாழ மட்டுமே வருமானம் பெற்று நாட்டின் அன்னிய செலவாணிக்குப் பரம்பரை பரம்பரையாக உழைப்பைக் கொடுத்து வித்திட்ட  பெரும்பாண்மை இந்தியர்களுக்கு நாட்டின் பெல்டா போன்ற அரசாங்கத்தின் சமூக மறுசீரமைப்பு திட்டங்கள் எட்டவில்லை.

hindrafவாணிபம், கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, நிதியுதவி போன்றவை வழி 1970 முதல் இனப்பாகுபாடு அற்ற வகையில் வறுமையை ஒழிக்கச் சமூக மறுசீரமைப்புக்கு அரசாங்கம் வித்திட்டது. புதிய பொருளாதார கொள்கை அமுலாக்கம் கண்டது. ஆனால், அதில் ஏழை இந்தியர்களை மட்டும்  காணவில்லை. ஒரு கண்துடைப்புக்காகக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் அனைத்தும் சில வசதியுள்ளவர்களுக்கும் நடுத்தர வர்க்கத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே பயன் அளித்தது.

ஏழ்மை மலாய்க்காரர்களின் மறுசீரமைப்பை மையமாகக் கொண்டு கொள்கை வடிவத்தில் உருவாக்கப்பட்ட அது இன்று ஏழை என்று இல்லாமல் அனைத்து மலாய் இனத்தவரின் உரிமை என்றாகி விட்டது.

நமது நாடு விடுதலை பெற்றது முதல் இந்தியர்களின் ஒரே அரசியல் பிரதிநிதியாக ஆளும் கட்சியில் மஇகா மட்டும்தான் இருந்தது.  இந்தியர்களை முழுமையாக ஒருங்கிணைத்த அரசியல் கட்சியும் அதுதான். மாற்று அரசியல் வழிமுறை அற்ற சூழல், மஇகா-வின் போராட்ட உணர்வை மழுங்கடித்தது. உரிமையாகப் பெற வேண்டியவற்றை,  மஇகா-வின் விசுவாசத்திற்கு ஏற்றவாறு சன்மானமாகப் பிச்சி பிச்சி போடப்பட்டது அல்லது பிச்சையாகப் போடப்பட்டது.

இப்படி பல கோணங்களில் சோரம் போனதிற்கான காரணம், உரிமை விழிப்புணர்ச்சி அற்ற நிலைதான். அந்தச் சூழல்தான் அடிமைத்தன அரசியலுக்கு உகந்தது. அதை அரசாங்கம் நடைமுறையில் வைத்திருக்கச் சட்டங்களைப் போட்டு பேச்சுரிமைகளையும் எழுத்துரிமைகளையும் கட்டுப்படுத்தியது. உரிமை  சார்பான பொது கூட்டங்களுக்கும் தடை விதித்தது.

hindrafஇருந்தும், மக்கள் அப்படியே இருந்து விடவில்லை. 2007-இன் தொடக்கம் உருவான எழுச்சி போராட்டங்கள் இப்போது ஒரு புதிய உரிமை சார்ந்த விழிப்புணர்ச்சியை எல்லா இனத்தவரிடமும் உருவாக்கியுள்ளதை உணரலாம்.

ஆனால், அரசியல் அடிமையாக இருந்தபோது ஒன்றாக இருந்த இந்தியர்களாகிய நாம் இன்று உரிமை உணர்வு பெற்ற நிலையில் பிளவுண்டு கிடப்பது நமது பெரிய பலவீனமாகும்.

பல அரசியல் கட்சிகள், பல  அமைப்புகள், பல தலைவர்கள் உள்ளனர். ஆனால், இவர்களுக்கிடையே உள்ள அறிவும் ஆற்றலும் ஒருங்கிணைக்கப்படாத நிலையில், சமூகம் ஒரு சிந்தனை முச்சந்தியில் நிற்கிறது. உரிமையைக் கோருகிறது, ஆனால் உதிரிக் கிடக்கிறது.

deepavali semஇன்று ஆளும் கட்சியிலும் எதிர்க் கட்சியிலும் நமக்கான பிரதிநிதித்துவம் இருந்தாலும் அதன் வழி நமது வலுவைக் காட்ட இயலாது. ஒரு சிறுபான்மை இனம், பல பிரிவுகளைத் தன்னுள்ளே உண்டாக்கி கொள்ளும் போது அது பலவீனமாகிறது. அந்தப் பிரதிநிகள் பெரும்பான்மை இனத்தின் கூஜாவாகத்தான் செயலாற்ற இயலும்.

இதைத்தான், “தீதும், நன்றும், பிறர் தர வாரா” என்கிறார் பூங்குன்றனார்.

இன்னொரு ஹிண்ட்ராப் 2.0 நமக்குத்  தேவையா? என்ற வினாவுக்கு விடைதேட வேண்டுமா? “நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன” என்று பதில் தருகிறார் அந்தக் கவிஞர்.

அதாவது, தீயது, நல்லது என்பவைப் பிறர் தந்து வருபவை இல்லை, அதற்கேற்ப துன்பமும்  அதற்கான தீர்வும் கூட அதுபோல்தான்” என்கிறார்.

இந்தத் தீபத்திருநாளில், “காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்”  [இந்தப் பேருண்மையைக் கண்டு அனுபவத்தால் தெளிவு பெற்றோம்]  என்ற கணியனின் கவிதையின்படி நமக்கான ஒரு தெளிவு இந்தத் தீப ஒளியில் கிடைக்கட்டும்.