கடந்த ஆண்டு சீனாவில் 2,400 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

china_flag_001கடந்த ஆண்டு சீனாவில் 2,400 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகில் மிக அதிக அளவு மரண தண்டனை நிறைவேற்றப்படும் சீனாவில், அது குறித்த தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்படுகின்றன.

எனினும், “துய் ஹுவா அறக்கட்டளை’ என்ற அந்த அமைப்பு இது தொடர்பாக புள்ளிவிவரங்களைக் கண்டறிந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சீனாவில் கடந்த 2013-ஆம் ஆண்டில் 2,400 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் இது முந்தைய ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளைவிட 20 சதவீதம் குறைவுதான்.

2002-ஆம் ஆண்டில்தான் சீனாவில் மிக அதிக அளவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அந்த ஆண்டு 12,000 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மரண தண்டனை குறித்த விமர்சனங்களை சீனா மறுத்து வந்தாலும், பிற நாடுகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக நிறைவேற்றும் மரண தண்டனைகளைவிட அதிகமாக சீனா மரண தண்டனைகளை நிறைவேற்றி வருகிறது.

2013-ஆம் ஆண்டின் உலகின் பிற நாடுகள் அனைத்தும் நிறைவேற்றிய மரண தண்டனைகளின் மொத்த எண்ணிக்கை 778 என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.