சியாச்சினில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி: காஷ்மீர் புறப்பட்டார் பிரதமர் மோடி

தீபாவளியை காஷ்மீரில் கொண்டாடுவதாக அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை காஷ்மீர் கிளம்பிச் சென்றார். காலை 7.30 மணி அளவில் தில்லியிலிருந்து தனது சியாச்சின் பயணத்தை தொடங்கினார் மோடி. காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடனும், சியாச்சினில் பனிமலையில் வாடும் ராணுவ வீரர்களுடனும் இன்று தனது தீபாவளியைக் கொண்டாடுவதாகக் கூறியிருந்தார் பிரதமர் மோடி.

“நமது தாய்நாட்டைக் காப்பதற்காக, பல்வேறு சவால்களை எதிர்த்துப் போராடுகிறார்கள் நமது வீரர்கள். சியாச்சினில் நிலவும் சூழல் குறித்து நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும். கடுமையான குளிரா, அதிக உயரமா? இவை குறித்து அவர்கள் அஞ்சுவதில்லை. அவர்கள் இங்கே நம் நாட்டுக்காக நிற்கிறார்கள். உண்மையிலேயே நமக்குப் பெருமிதத்தை சேர்க்கிறார்கள்…” என்று மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், நமது ராணுவ வீரர்களுக்கு நாட்டின் ஒவ்வொருவர் சார்பாகவும் ஒரு செய்தியைக் கொண்டு செல்கிறேன். அவர்களுடன் தோளுக்குத் தோள் கொடுத்து உடன் நிற்கிறோம் என்பதைக் கூற! – என்று தெரிவித்துள்ளார் மோடி.

சியாச்சின் பயணத்துக்குப்  பின்னர் ஸ்ரீநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தீபாவளியைக் கொண்டாடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

TAGS: