பிஎஸ்ஆர்எம் முன்னாள் தலைமைச் செயலாளர் காமினி காலமானார்

 

gamanyபார்டி சோசலிஸ் ரக்யாட் மலேயாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் எஸ். தேவசிகாமணி கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் அவரது அம்பாங் இல்லத்தில் தமது 84 ஆவது வயதில் காலமானார்.

வழக்குரைஞருமான தேவசிகாமணி இடதுசாரி அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் லண்டனில் சட்டக் கல்வி பயின்ற காலத்திலிருந்தே அரசியலில் ஈடுபட்டிருந்தார். லண்டனில் தொழிற்கட்சி கூட்டங்களில் அவர் பங்கேற்பது வழக்கமாக இருந்தது.

அவர் 1963 ஆம் ஆண்டில் லண்டன் மிடல் டெம்பலில் (Middle Temple) சட்டப் படிப்பை முடித்துக் கொண்ட பின்னர் 1964 ஆம் ஆண்டில் மலேசியாவில் வழக்குரைஞராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

முன்னாள் நிதி அமைச்சர் டைம் ஸைனுடின், முன்னாள் பிரதமர் ஹுசேன் ஓன் மற்றும் துங்கு ரஸாலி ஆகியோர் லண்டனில் சம காலத்திய சட்டக் கல்வி மாணவர்களாக இருந்தனர்.

“காமினி” என்ற பெயரில் அழைக்கப்பட்ட அவர் தடுப்புக் காவல் கைதிகள் மற்றும் தொழிற்சங்கவாதிகள் சார்பில் வழக்காடியுள்ளார்.

அவசர காலத்தில் கைது செய்யப்பட்டு மரனை தண்டனை விதிக்கப்பட்டவர் கமருல் ஸாமான் தே. அவரது தண்டனை பின்னர் ஆயுள்கால தண்டனையாகக் குறைக்கப்பட்டது. காமினி, ஸாமானை புடு சிறையில் சந்தித்துள்ளார். அதே காலகட்டத்தில் கணபதி மற்றும் சாம்பசிவம் ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கணபதி தூக்கிலிடப்பட்டார். சாம்பசிவம் லண்டன் பிரிவி கவுன்சிலுக்கு மேல்முறையீடு செய்திருந்தர். அக்கவுன்சில் அவரை விடுவித்தது. இம்மூவரின் வழக்குகளின் சட்ட நுணுக்கம் குறித்து கடந்த ஆண்டு வரையில் காமினி ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்.

மனித உரிமை விவாகாரங்களோடு மலேசிய தொழிற்சங்க இயக்கத்துடன் காமினி நெருங்கிய உறவு கொண்டிருந்தார்.1970, 80 களில் அகில மலாயா தோட்டச் சிப்பந்திகள் சங்கத் தலைவர்களுக்கும் தோட்ட முதலாளிகளுக்குமிடையில் நடைபெற்ற ஏகப்பட்ட மோதல்களில் அச்சங்கத்திற்கு சட்ட ஆலோசனை வழங்கிய மூன்று முக்கிய வழக்குரைஞர்களில் காமினியும் ஒருவர்.

இன்று காலை மணி 10.00 லிருந்து நண்பகல் மணி 12.00 வரையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற சடங்கில் முன்னாள் நிதி அமைச்சர் டைம் ஸுனுடின், ஸைட் ஹுசேன் அலி, பிஎஸ்எம் தலைவர் நாசீர் ஹசிம், நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டோமினிக் புதுச்சேரி, எம்டியுசி தலைமைச் செயலாளர் கோபால் கிருஷ்ணன், முன்னாள் தலைவர் செனட்டர் சைட் ஷரீர், வழக்குரைஞர் கே. ஆறுமுகம், தமிழ் அறவாரியத் தலைவர் சி. பசுபதி ஆகியவர்களுடன் இன்னும் பல வழக்குரைஞர்களும், நண்பர்களும், உற்றார் உறவரினர்களும் கலந்து கொண்டனர். அவர்களில் காமினியின் தைப்பிங் பள்ளி சகமாணவரான ஸ்பெஷல் பிராஞ்ச் முன்னாள் துணைத் தலைவரும், பேராக் மாநில போலீஸ் தலைமை அதிகாரியுமான யுயன் யுயட்லெங்கும் அவரது துணவியாரும் அடங்குவர்.

சடங்கு முடிவுற்ற பின்னர் அவரது சடலம் செராஸ் மின்சுடலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது.