தாய்மொழிக் கல்வியும் கண்ணாமூச்சி ஆட்டமும் – கா. ஆறுமுகம்.

K. Arumugam Suaramகுழந்தைகள் கண்களைக் கட்டிக்கொண்டு கண்ணாமூச்சி விளையாடும்போது ஏதாவது கையில் பட்டவுடன், தேடுபவர்களைப் பிடித்து விட்டதாகக் கூச்சலிடுவார்கள். அதில் ஓர் ஆனந்தம் பரவியிருக்கும். இப்போதெல்லாம் அதிக அறிவும் ஆற்றலும் வலிமையும் பெற்ற நினைப்பில் உள்ளச் சில அரசியல்வாதிகளுக்கு அரசியல் கண்ணாமூச்சி ஒரு வேடிக்கையாகிவிட்டது.

அடிக்கடி எதையாவது பேசி அதில் குளிர் காய வேணும்.

அண்மையில் உத்துசான் மலேசியா  நாளிதழில்  உள்துறை அமைச்சர்  சாஹிட் ஹமிடி நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளையும்  ஒரே மொழிப் பள்ளிகளாக  மாற்ற வேண்டும் என்ற தமது தனிப்பட்ட கருத்தைத் தெரிவித்ததாக  ஒரு செய்தியை வெளியிட்டது. இது ஒரு புதிய கருத்தல்ல. பலமுறை பேசப்பட்ட ஒரு பிற்போக்கான கருத்து.

1971-இல் பதிவான ‘மேலான் பின் அப்துல்லா’ (Melan bin Abdullah) என்ற வழக்கில் சீன-தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று  தலையங்கம் எழுதிய உத்துசான் மலேசியா நாளிதழின் ஆசிரியர் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் தண்டனைப் பெற்றார்.

அதன் பிறகு நாடாளுமன்றத்தில் சீன-தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று பேசிய சபா கின்னபாலு தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ‘மார்க் கோடிங்’ (Mark Koding), 1983-இல் அதே சட்டத்தின் கீழ் தண்டனைப் பெற்றார்.

இந்த இரண்டு வழக்குகளும் மிகவும் முக்கியமானவையாகும். காரணம் இவைமேல் முறையீடுவரை சென்று முடிவுக்கு வந்தவை. இவற்றின் படி பேச்சுரிமை என்பது இன ஒற்றுமையைக் குலைக்கும் அளவிற்குச் சென்றால் அதைச் சட்டம் கட்டுப்படுத்த வேண்டும் என்பதாகும்.

இதையெல்லாம் அறிந்தவர்தான் நமது உள்துறை அமைச்சர்  சாஹிட் ஹமிடி. அவர் இப்படிப் பட்ட ஒரு கருத்தை முன் வைப்பதற்கான காரணங்களையும் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது, நாம் அனைவரும் இன்று மலேசியர்கள் என்ற நிலைக்கு வந்து விட்டதாகவும், தாய்மொழிப் பள்ளிகள் இன ஒற்றுமை வளர்வதற்குத் தடையாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

najib_tamil_schoolஇதில் முற்றாக உண்மையில்லை எனவும் கூற இயலாது. தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மாணவர்களும், தேசியப் பள்ளிகளில் மலாய் மாணவர்களும், சீனப்பள்ளிகளில் சீன மாணவர்களும் பெரும்பான்மையாகக் கற்கிறார்கள். இப்போது தேசியப் பள்ளிகளில் இஸ்லாமிய வகுப்புகளும் பிரார்த்தனைகளும்  நடைமுறையில் உள்ளன. இவை அனைத்தும் இளம் மாணவர்களிடையே இன ஒற்றுமையை வளர்க்க வழி வகுக்காது என்பதை மறுக்க இயலாது.

அதேவேளையில் இன ஒற்றுமை என்பது தாய்மொழிக் கல்வியைப் பணயம் வைத்துத்தான் பெற இயலும் என வாதிடுவதும் தவறாகும். ஒரே மொழி கொள்கைகள் கொண்ட பாகிஸ்தான், சிரியா, எகிப்து, ஈராக், பர்மா, வியட்நாம், தாய்லாந்து, அதோடு ஏகப்பட்ட மத்தியக் கிழக்கு, கிழக்கு ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் முரண்பாடுகள் கொண்ட அரசியல் சமூகப் பொருளாதாரச் சூழலில் உள்ளன. அங்கு அமைதிக்குப் பதில் ஆர்ப்பாட்டங்கள்தான் அதிகம்.

இந்தச் சிக்கலானது வெறும் கல்வி சார்ந்த சிக்கல் கிடையாது. இது ஓர் அரசியல் சார்ந்த சிக்கல். அம்னோவும் அப்படி உண்மையான நோக்கத்தைக் கொண்டிருந்தால் அது இன ஒற்றுமையை வளர்க்கத் தீவிரமான கொள்கை மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். ஆனால் அப்படியொரு நோக்கம்  அம்னோவுக்கு கிடையாது என்பதையும் நாம் அறிவோம்.

புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் இனம் வழியான தீர்வுகள்தான் அமுலாக்கத்தில் உள்ளன.  மாரா கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில்இட ஒதுக்கீடு, வாணிபம், அரசாங்கக் குத்தகைகள், அரசாங்க அதிகாரப் பொறுப்புகள், அரசாங்க வேலை வாய்ப்புகள் இப்படி எதை எடுத்தாலும் ஓர் இனதிற்கு மட்டும்தான் முன்னிடம் வழங்கப்படுகிறது. இதற்கு அரசியல் அமைப்புச் சட்டம் வழிவகுத்துள்ளது.

இந்த அரசியல் சூழல் நாம் முழு உரிமை பெற்ற வகையில் வாழவில்லை என்ற ahmad zahidஉணர்வைத்தான் கொடுக்கிறது. இரண்டாம் வகை குடிமக்களாகத்தான் வாழ்கிறோம் என்பதுதான் நமது புலம்பல். இதைத்தான் மஇகா உட்பட எல்லா அரசியல் தலைவர்களும் அறிக்கை அறிக்கையாக அரசாங்கத்திடம் கொடுத்து வந்துள்ளனர்.

மேலும், இனங்கள்-மதம் அடிப்படையில் இயங்கும் அரசியல் கட்சிகள்தான்  நாட்டையும் மாநிலங்களையும் ஆட்சி செய்து வருகின்றன. அதோடு மாமன்னரின் கீழ் உள்ள நமது கூட்டரசு அரசாங்கம் மலாய் மேலாண்மையின் கீழ்தான் செயல்பட இயலும்.

இது போன்ற அரசியலமைப்புச் சூழல் பன்மொழி கொள்கை வழிக்கு வித்திட்டது. அவ்வழியில்தான் நமக்கே தகுந்த ஒரு தேசிய உணர்வை உண்டாக்கி வருகிறோம். பன்மொழிகளுக்கும் பல்லினப் பண்பாடுகளுக்கும் இன்று உலகில் ஓர் உதாரண நாடாகத் திகழ்கிறது.

இந்நிலையில் உள்துறை அமைச்சரின் புதிய வியாக்கியானம் ஒரு வகையில் வியப்பை உண்டாக்குகிறது.

ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக இந்தியா இருந்த போது அதன் கல்விக் கொள்கையை மாற்றக் கவர்னர் ஜெனரல் அமைச்சரவை சட்டக்குழுவை 1835-இல் அமைத்தது. அதில் உறுப்பினராக இருந்த தாமஸ் பேபிங்டன் மெக்காலே பிரபு ஆங்கிலேய அரசின் கல்விக் கொள்கையை வகுத்தார்.

இக்கொள்கை இரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியராகவும், அறிவில், பண்பாட்டில், கருத்தில், சுவையில் ஆங்கிலேயராகவும் உள்ள ஒரு வர்க்கம் உருவாகுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.  இவரது குறிப்புகளில், “நமது கல்வித் திட்டம் கடைப்பிடிக்கப்படுமானால் இன்னும் 30 ஆண்டுகளில் வங்காளத்தில் சிலை வழிபாடு ஒழிந்து விடும் என்றும், மதத்தைப் பரப்பாமல் மத உரிமைகளில் தலையிடாமல் இயல்பான அறிவு வளர்ச்சியால் இது நடக்கும்” என்று எழுதினார்.

மெக்காலே பிரபுவின் நோக்கம் ஓர் அடிமை சமூகத்தை உருவாக்க அதன் பண்பாட்டையும் மொழியையும் அழிக்க வேண்டும் என்ற வழியில்தான் இருந்தது. அது இந்தியர்களின் சிந்தனைக்கும் வாழ்வாதாரத்திற்கும்  வழிவகுக்கும் என்பதில் உண்மையில்லை.

நமக்குக் கிடைத்துள்ள இந்தத் தாய்மொழி கல்விக் கொள்கை நமது பண்பாட்டுக்கும் வாழ்வுக்கும் மிகவும் அத்தியாவசியமானது. அரசமைப்பு சட்டவிதி 152 இதை நமக்கு ஓர் அடிப்படை உரிமையாகக் கொடுத்துள்ளது. அதைத் தற்காப்பது நமது கடமை.

உள்துறை அமைச்சர் அவர்கள், தமது இன ஒற்றுமை நோக்கத்தைத் தேசிய உணர்வுடன் பார்க்க வேண்டுமானால், அவர் புதிய சிந்தனைக்குச் செல்ல வேண்டும். பல வளர்ந்த நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட அரசு மொழிகள் இருக்கின்றன. அவைபோல், நாமும் உருவானால், நமது தேசிய உருவாக்கத்துள் உண்மையான பல்லினப் பண்பாடும், பல்லின ஒற்றுமையும் உண்டாகும்.