அன்வாருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை போதாது, அரசு தரப்பு கூறுகிறது

anwar -5 years1அன்வார் குதப்புனர்ச்சி வழக்கு II இல் மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்த ஐந்து ஆண்டு சிறை தண்டனை போதாது என்று அரசு தரப்பு வழக்குரைஞர் குழு கூறுகிறது.

விதிக்கப்பட்ட ஐந்து ஆண்டு சிறை தண்டனை பொதுநல நீதியின் நோக்கத்தை எட்டவில்லை என்று அரசு தரப்பு வழக்குரை குழு முன்வைத்துள்ள வாதத்தை மலேசியாகினி கண்டுள்ளது.

மேல்முறையீட்டு நீதிபதிகள் தவறு செய்து விட்டனர். அத்தண்டனை குற்றத்தின் கடுமையைப் பிரதிபலிக்கவில்லை என்பதோடு அது சமூகத்திற்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கவில்லை என்று அரசு தரப்பு கூறுகிறது.

“ஐந்தாண்டு சிறை தண்டனை ஐயத்திற்கிடமின்றி போதுமானதல்ல. குற்றச்செயல் சட்டத் தொகுப்பு விதி 377B இன் படி 20 ஆண்டு சிறை தண்டனையும் ரோத்தான் அடியும் கொடுக்கப்பட வேண்டும்”, என்றும் அரசு தரப்பு வாதிடுகிறது.

காலஞ்சென்ற கர்பாலுக்கு பதிலாக அன்வார் வழக்குரைஞர் குழுவுக்கு தலைமை ஏற்றுள்ள வழக்குரைஞர் சுலைமான் அப்துல்லா மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக 35 காரணங்களை முன்வைத்துள்ளார்.

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தாக்கல் செய்துள்ள இறுதி மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் செய்வாய்க்கிழமையிலிருந்து இரு நாட்களுக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.