பெரிய மீன்கள் எம்ஏசிசி-இடம் சிக்குவதில்லை

sprmமலேசிய  ஊழல் தடுப்பு  ஆணையம்  எவ்வளவுதான்  வரிந்து கட்டிக்கொண்டு   உழலுக்கு  எதிராக வேலை  செய்து  பலர்  கைது  செய்யப்பட்டதாக  செய்தித்தாள்களில்  கொட்டை  எழுத்துக்களில்  விளம்பரப்படுத்திக்  கொண்டாலும்  இந்தோனேசியாவுடன்  ஒப்பிடும்போது  இது சப்பென்று  இருக்கிறது.

இரண்டு  நாடுகளின்  ஊழல்-எதிர்ப்புப்  போராட்டத்தையும்  ஒப்பிட்ட  டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங் “மலைக்கும்  மடுவுக்குமிடையிலான”  வேறுபாடு  நிலவுவதாகக் குறிப்பிட்டார்.

இதற்கு  எடுத்துக்காட்டாக,  கடந்த  மாதம்  வெளிவந்த  செய்தித்  தலைப்புகளைச்  சுட்டிக்காட்டினார். மலேசியாவில்  ஒரு  செய்தித்  தலைப்பு: ‘சுங்கத்  துறை  அதிகாரிகள்   எண்மர்மீது  28 புதிய  குற்றச்சாட்டுகள்’.

அதற்கு  ஒரு  வாரத்துக்குமுன்னர்  இந்தோனேசியாவில்  வெளிவந்த  செய்தி:‘இந்தோனேசியாவின்  முன்னாள் ஆளும்கட்சித்  தலைவருக்கு  ஊழல், பணத்தைச்  சலவை  செய்யும்  முயற்சி  ஆகியவற்றுக்காக எட்டாண்டுச்  சிறை’.

இவை  தவிர,  இந்தோனேசியாவில்  புதிதாக  பதவியேற்றுள்ள  அதிபர்  ஜோகோ ‘ஜோகோவி’ வீடோடோ,  அமைச்சர்களாக  நியமனம் செய்யப்படவிருந்த  எண்மருக்கு  ஊழல்  குற்றங்களில்  தொடர்பிருக்கலாம்  எனச்  சந்தேகம்  இருப்பதாக  ஊழல்  ஒழிப்பு  ஆணையம்(கேபிகே)  தெரிவித்த  கணமே  அவர்களை  அமைச்சர்களாக்கும்  எண்ணத்தைக் கைவிட்டார்.

“மலேசியா  உழல்  எதிர்ப்பில்  இந்தோனேசியாவைவிட  பின்தங்கி  இருப்பது  ஏன்  என்பதைப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கோ  எம்ஏசிசி-யோ விளக்குவார்களா. இதுவரை  மலேசியாவில்  ஒரு  ‘பெரிய மீன்’கூட  பிடிபடாதது  ஏன்?”, என்று  லிம்  வினவினார்.

கடந்த  33  ஆண்டுகளில்  மலேசியாவில்  ‘பெரிய  மீன்’  எதுவும்  குற்றம்  சாட்டப்பட்டதாக  செய்தி  வந்ததில்லை.  ஆனால், இந்தோனேசியாவில்  இது  சர்வ  சாதாரணம்  என்றாரவர்.