அன்வார் மேல்முறையீடு வழக்கு: விசாரணையில் ஐயத்திற்கிடமற்ற சந்தேகம் இருப்பதால், அன்வார் விடுவிக்கப்பட வேண்டும்

 

Anwar 2nd day2அன்வார் மேல்முறையீடு வழக்கு விசாரணையின் இரண்டாவது நாளான இன்று அன்வார் தற்காப்புக் குழுவின் வழக்குரைஞர்களான என். சுரேந்திரன், சங்கீதா கௌவுர் டியோ மற்றும் ராம் கர்ப்பால் ஆகியோர் பெடரல் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன் தங்களுடை வாதங்களை சமர்ப்பித்தனர்.

மாலை மணி 5.10 வரையில் அன்வாரின் மரபணு (DNA) சோதணை சம்பந்தப்பட்ட விவகாரங்கள் பற்றி தமது வாதத்தை முன்வைத்த ராம் கர்ப்பால் இச்சோதணை மேற்கொள்ளப்பட்ட முறை, Anwar 2nd day3சோதனையின் தரம் மற்றும் அவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஆகியவற்றின் மீது வலுவான சந்தேகத்தை எழுப்பினார்.

பிற்பகல் மணி 12. 20 லிருந்து மாலை மணி 5.10 வரையில் தமது வாதத்தைத் தொடர்ந்த ராம் கர்பால், இந்த மரபணு சோதணையிலிருந்து “ஐயத்திற்கிடமற்ற சந்தேகம் எழுந்துள்ளது. அது (சந்தேகம்) எழும்போது, குற்றம் சாட்டப்பட்டிருப்பவருக்கு பயன் தரும் தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும்”, என்று வலியுறுத்தினார்.

ராம் கர்பால் அவருடைய வாதத்தை நாளை தொடர்கிறார்.

 

உச்சநீதிமன்றத்தின் தலையீடு அவசியமாகிறது

 

இன்று காலையில், என். சுரேந்திரன் இந்த வழக்கில் அன்வார் மட்டுமே குற்றவாளிக் கூண்டிலிருந்து அறிக்கை அளித்தார். அவரை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது என்பதைச் சுட்டிக் காட்டினார்.

(மேல்முறையீட்டு) நீதிமன்றம் டாக்டர் முகமட் ஓஸ்மானின் அறிக்கையை கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். அது சைபுல்லின் அறிக்கைக்கு முரணானதாக இருந்தது. மேல்முறையீட்டு நீதிமன்றம் குற்றவாளி கூண்டிலிருந்து அன்வார் அளித்த சாட்சியத்திற்கு மதிப்பளித்திருக்க வேண்டும் என்று சுரேந்திரன் கூறினார்.

“அது (அன்வாரின் சாட்சியத்திற்கு மதிப்பளிக்காதது) தவறானதாகும். அது உச்சநீதிமன்றத்தின் தலையீட்டை அவசியமாக்குகிறது”, என்று சுரேந்திரன் கூறினார்.

 

சட்ட விரோதமாக பெறப்பட்ட சாட்சியப் பொருள்கள்

 

அன்வாரின் மரபணுவைப் பெறுவதற்காக போலீசார் மேற்கொண்ட சட்ட விரோதமான, நியாயமற்ற நடைமுறைகள் பற்றி சங்கீதா தமது வாதத்தை முன்வைத்தார்.

முன்னதாக, கோலாலம்பூர் மருத்துவமனையில் அன்வார் அவரது மரபணுவைத் தர மறுத்து விட்டார். அது அவரது சட்டப்பூர்வமான உரிமையாகும் என்றார் சங்கீதா.

பின்னர், அன்வாரின் மரபணுவைப் பெறும் நோக்கத்தோடு போலீசார் அவரின் சிறையில் குட் மோனிங் துண்டு, பல்துலக்க தூரிகை மற்றும் கனிமநீர் போத்தல் ஆகியவற்றை வைத்திருந்தனர். அவற்றின் மூலம் அன்வாரின் மரபணுவை அவருக்குத் தெரியாமலே பெற்று விடலாம் என்பது அவர்களது திட்டம் என்றார் சங்கீதா.

தொடக்க விசாரணையில், கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி இம்மூன்று பொருள்களும் நியாயமற்ற வழியில் பெறப்பட்டது என்றும் அவற்றை சாட்சிப் பொருள்களாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தீர்ப்பளித்தார் என்பதை சங்கீத சுட்டிக் காட்டினார்.

ஆனால், பின்னர் அந்நீதிபதி தமது முடிவை மாற்றிக் கொண்டார் என்றும் சங்கீதா கூறினார்.

இக்கட்டத்தில் தலைமை நீதிபதி அரிப்பின் ஸக்காரியா குறுக்கிட்டு, “சட்ட விரோதமாக பெறப்பட்ட சாட்சியம் கூட மலேசியாவில் அனுமதிக்கத்தக்கது”, என்றார்.

இந்த வழக்கு விசாரணையில் முழுமையாக ஒன்றாக்கப்பட்ட பல சம்பவங்கள் அத்துமீறல்களையும் அன்வாருக்கு எதிரான சதியையும் காட்டுகின்றன என்று சங்கீதா கூறினார்.

நாளை தொடரும் இவ்வழக்கு விசாரணையில் ராம் கர்ப்பால் அவரது விவாத்தை முடித்துக் கொண்ட பின்னர், அரசு தரப்பின் தலைமை வழக்குரைஞர் ஷாபி அப்துல்லா பதில் அளிப்பார்.

வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை வரையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.