பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது சுவீடன்: இஸ்ரேல் கடும் எதிர்ப்பு

palestine-flag-decal_3பாலஸ்தீனத்தை, தனி நாடாக சுவீடன் அங்கீகரித்துள்ளது.

இதற்கான அதிகாரபூர்வ அறிவைப்பை வெளியிட்டு, சுவீடன் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கட் வால்ஸ்டிரம் வியாழக்கிழமை கூறியதாவது:

பாலஸ்தீன நாட்டுக்கு இன்று (அக். 30) அங்கீகாரம் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது.

பாலஸ்தீனர்கள், தங்களது சுய நிர்ணய உரிமையைப் பெறுவதற்கு இந்த நடவடிக்கை உதவும்.

எங்களைப் பின்பற்றி, பிற நாடுகளும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் என நம்புகிறோம் என்றார் அவர்.

அண்மையில் சுவீடனின் பிரதமராகப் பதவியேற்ற ஸ்டெஃபான் லோஃப்வென், நாடாளுமன்றத்தில் துவக்க உரையாற்றுகையில், பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் விஷயத்தில், மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த முதல் ஐரோப்பிய யூனியன் நாடாக சுவீடன் இருக்கும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கு ஐரோப்பா, மத்தியத் தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த 7 ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் ஏற்கெனவே பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.

பல்கேரியா, சைப்ரஸ், செக் குடியரசு, ஹங்கேரி, மால்டா, போலந்து, ரொமேனியா ஆகிய அந்த நாடுகள் மட்டுமின்றி, ஐரோப்பிய யூனியன் உறுப்பினர் அல்லாத ஐஸ்லாந்தும் பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 தூதருக்கு சம்மன்

பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக சுவீடன் அறிவித்துள்ளதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கான சுவீடன் தூதரை நேரில் அழைத்து, அவரிடம் தனது எதிர்ப்பையும், அதிருப்தியையும் இஸ்ரேல் தெரிவித்தது.

இஸ்ரேலுடனான நேரடிப் பேச்சுவார்த்தை மூலமே பாலஸ்தீனம் தனி நாடு பெற முடியும் எனவும், பிற நாடுகளின் வாயிலாக பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து வழங்கப்படக் கூடாது என இஸ்ரேல் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.

 வரலாற்று முடிவு: பாலஸ்தீனம்

சுவீடனின் இந்த முடிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என பாலஸ்தீனம் கூறியுள்ளது.

இதுகுறித்து பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸின் செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை கூறுகையில், “”பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கும் சுவீடனின் முடிவை வரவேற்கிறோம்.

இது வரலாற்று சிறப்பு மிக்க, துணிச்சலான முடிவு” என்றார்.

 அவசரகதி: அமெரிக்கா விமர்சனம்

பாலஸ்தீனத்தை தனி நாடாக சுவீடன் அங்கீகரித்துள்ளது, அவசரகதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் மூலம்தான் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து கிடைப்பது சாத்தியமாகும் என அமெரிக்கா கூறியுள்ளது.