கல்வி உருமாற்றம் : தமிழ்ப்பள்ளியே என் தேர்வு

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்ட வரைவு, பிரதமர் துறை

Tamil 2ndary school - MPSஇந்நாட்டின் தமிழ்ப்பள்ளிகள் 150 ஆண்டுகளுக்கும் குறையாத வரலாற்றினைக் கொண்டவை  என்றால் அது மிகையாகாது. மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளில்தான் நம் இனத்தின் சரணாலயங்களாக விளங்கி வருகின்றன. 

இதை அடிப்படையாகக் கொண்டு. மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தின் 2013-2025 குறியிலக்குகளுக்கு ஏற்பவும், தமிழ்ப்பள்ளிகளை நாட்டில் வலுப்படுத்தி நிலை நிறுத்தவும்,  பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான மேம்பாட்டுத்திட்ட வரைவு ஒன்றினை உருவாக்குவதற்கான கட்டளையைக் கடந்த ஜனவரி 22, 2012 ஆம் திகதியன்று அறிவித்தார். இப்பணி அதிகாரப்பூர்வமாக மே 2, 2012-இல் தொடங்கப்பட்டது. ஒட்டுமொத்தத் தமிழ்ப்பள்ளிகளின் தொடர் வளர்ச்சிக்கான திட்டத்தை வடிவமைத்ததோடு அதன் அமலாக்கத்தையும் தமிழ்ப்பள்ளிகளில் மேம்பாட்டுத் திட்ட வரைவு கண்காணித்து வருகின்றது.

அந்தவகையில், தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்துவதற்கும் அங்கு வழங்கப்படும் கல்வியின் தரத்தை வளப்படுத்துவதற்கும் “கல்வி உருமாற்றம்- தமிழ்ப்பள்ளியே என் தேர்வு” என்னும் திட்டம் நேற்று  முன்தினம் தலைநகர் சோமா அரங்கில்  அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில் 523 தமிழ்ப்பள்ளிகள் இருந்தாலும் 300-க்கும் மேற்பட்ட பள்ளிகள் குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகளாகவே இருந்து வருகின்றன. இந்நாட்டு இந்தியர்களுக்குத் தமிழ்க்கல்வியின் அவசியத்தையும் இன்றைய தமிழ்ப்பள்ளிகளின் சிறந்த வளர்ச்சியையும் எடுத்துரைத்து, அவர்களின் குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்ப ஊக்குவிப்பதே “தமிழ்ப்பள்ளியே என் தேர்வு” திட்டத்தின் குறிக்கோளாகும்.

தமிழ்ப்பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, தமிழ்ப்பள்ளிகளின் மேன்மைகளையும் மக்களுக்குப் பறைச்சாற்றும் கடப்பாடு பிரதமர் துறை கீழ் இயங்கும் தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டுத் திட்ட வரைவுக்கு உண்டு. ஆகையால், தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புகளையும் வெற்றிக்கதைகளையும் மலேசிய மக்களுக்கு எடுத்தியம்புவதோடு முதலாமாண்டு மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கு இந்நிகழ்வு நடைப்பெறுகின்றது.

வெற்றிக் கதைகள்

அண்மைய காலங்களில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக ரீதியில் கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்குகின்றனர். அவற்றிற்கான காரணங்களுல் சில கற்றலுக்கு உகந்த பள்ளிச் சூழல்; திறன் பெற்ற ஆசிரியர்கள்; நவீன வசதிகள்; ஆசிரியர்களின் அக்கறை மற்றும் அரவணைப்பு; பெற்றோர் ஆசிரியர் சங்கம்; பள்ளி மேலாளர் வாரியம் போன்றோரின் ஆதரவு போன்றவையாகும்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனைச் சான்றுகளை மக்களுக்கு உணர்த்துவதற்கும் நம்பிக்கையோடு குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிகளிக்கு அனுப்ப ஊக்கமளிக்கவும் ஒரு சில சாதனை மொட்டுக்களின் விவரங்களைக் கீழே பட்டியலிடுகின்றோம்.

  • கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 2013ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.ஆர் (UPSR) தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி 62 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
  • தமிழ்ப்பள்ளிகள் அண்மைய காலத்தில் கட்டட மற்றும் இட வசதி மேம்பாட்டில் பெரிய வளர்ச்சியினைக் கண்டு வருகிறது.
  • தமிழ்ப்பள்ளியில் இன்று 100% பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் குறைந்தது 50 விழுக்காட்டினர் பட்டதாரி ஆசிரியர்கள்.
  • அனைத்துலக நிலையில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பல போட்டிகளில் பங்கெடுத்துள்ளனர். அவர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கு மட்டுமல்லாது மலேசியத் தமிழர்களுக்கே பெரும் புகழையும் பெருமையையும் சேர்ந்துள்ளனர்.
  • கூலிம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த செல்வி சுஷ்மிதா த/பெ விஜியன், செல்வி பிரவினா த/பெ இராமகிருஷ்ணன், ரஷிகேஷ் த/பெ இராமகிருஷ்ணன் ஆகிய மூவரும் லண்டனில் நடைபெற்ற அனைத்துலக பிரிட்டிஷ் அறிவியல் புத்தாக்க கண்காட்சியில் மின்சார சேமிப்பு இயந்திரம் என்ற புது அறிவியல் கண்டுபிடிப்பில் வெற்றிப் பெற்று இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
  • கூலிம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த செல்வன் ரஷிகாஷ் த/பெ இராமகிருஷ்ணன் 2013-ஆம் ஆண்டு வடிவமைப்புக் கண்டுப்பிடிப்புகள் (REKACIPTA) போட்டியில் கலந்து வெற்றிப் பெற்று அனைத்துலக போட்டிக்காக ஹாங்கோங் (Hong Kong)(2013) மற்றும் லண்டன் (LONDON) (2014) சென்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • மேலும், கூலிம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த செல்வன் ஶ்ரீஅர்வேஷ் த/பெ இராமகிருஷ்ணன் அவர்கள், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக வடிவமைப்புக் கண்டுப்பிடிப்புகள் (REKACIPTA) போட்டியில் சிறந்து விளங்கி அனைத்துலக ரீதியில் அமெரிக்கா(2012), புருனாய்(2014) மற்றும் இந்தியா(2014) போன்ற நாடுகளுக்கு மலேசியாவைப் பிரதிநிதித்துச் சென்றுள்ளார்.
  • கூலிம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த செல்வன் பூபதி த/பெ வேலாயுதம் பூப்பந்து போட்டியில் சிறந்து விளங்கி அனைத்துலக ரீதியில் வருகின்ற நவம்பர் 2014-இல் சீனாவிற்குச் செல்லவிருகின்றார்.
  • வலம்புரோசா தமிழ்ப்பள்ளியின் மாணவி வைஸ்ணவி த/பெ அருள்நாதன் உலகமே வியக்கும் வண்ணம் “GOOGLE DOODLE” போட்டியில் பங்கெடுத்து வெற்றிப் பெற்றார். இவ்வெற்றி மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • பினாங்கு ராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியின் மாணவர்கள் நாடளாவிய நிலையில் நடத்தப்பட்ட இளம் ஆய்வாளர்கள் விழாவில் வெற்றிப் பெற்று அனைத்துலக ரீதியில் நடைபெற்ற சென்றுள்ளனர் என்பது பெருமைப்படக்கூடிய சாதனையாகும்.
  • 2014-இல் புதுடில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டியில்  சிரம்பான், கான்வெண்ட் தமிழ்ப்பள்ளி மாணவி செல்வி நித்தியலெட்சுமி சிவநேசன் இரண்டாவது நிலையில் வெற்றிப் பெற்றுள்ளார்.
  • கடந்த ஆகஸ்டு மாதம் ரவூப் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் களிமண்ணால் மிகப்பெரியச் தேசியக் கொடி செய்து மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.
  • மலாக்கா, புக்கிட் லிந்தாங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த செல்வி அஞ்சலி சிவராமன், செல்வி ஷோபனா சிவராமன், செல்வன் நிரோஷன் கெலேமன் இவ்வருடம் (2014) சென்னையில் நடைபெற்ற அனைத்துலக சிலம்பப் போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்கு மட்டுமல்லாது தமிழ்ப்பள்ளிகளுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
  • 2014-இல் உயர்தரப் பள்ளிகள் எனும் சிறப்புப் பெற்று ஜோகூர் ரேம் தமிழ்ப்பள்ளி, பாகங் ரிங்லெட் தமிழ்ப்பள்ளியும் மற்றும் குழுவகைப் பள்ளியாக பேராக் கிரிக் தமிழ்ப்பள்ளி சாதனை படைத்துள்ளனர்.

தமிழ்ப்பள்ளிகளில் பயில்கின்ற மாணவர்களின் சாதனை சரித்திரங்கள், இன்றையக் காலக்கட்டத்தில் அதிகரித்த வண்ணமே உள்ளது. தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் அயரா உழைப்பும், கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகளும், அரவணைப்புகள், தூண்டுதல்கள் அனைத்தும் நமது மாணவர்களின் சாதனைகளுக்கு அடித்தளமாக விளங்குகின்றன. இளம் வயதிலேயே மாணவர்களுக்கு உரிய மதிப்பளித்தும் அவர்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கியும் அவர்களை நாட்டில் சாதனை மொட்டுக்களாக மிளிரச் செய்வதில் நமது தமிழ்ப்பள்ளிகள் பெரும் பங்காற்றுகின்றன என்பது திண்ணம்.