மின் ஆலைத் திட்டங்கள் 1எம்டிபி-க்கு வழங்கப்பட்டிருப்பதால் மின்கட்டணம் உயரலாம்

puaஅரசாங்கம்,  மின்  ஆலைத்  திட்டங்களை  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனத்துக்குக்  கொடுத்திருப்பதால்  எதிர்காலத்தில்  மின்கட்டணம்  உயரப் போகிறது  என  பெட்டாலிங்  ஜெயா  டிஏபி  எம்பி  டோனி  புவா  எச்சரிக்கிறார்.

நெகிரி  செம்பிலான், கெடா,  மலாக்கா  ஆகிய  மாநிலங்களில்  மூன்று  மின் ஆலைகள்  அமைக்கும்  குத்தகை  1எம்டிபி-க்குக்  கொடுக்கப்பட்டுள்ளது.

சாபாவில்  மேலும்  இரண்டு  ஆலைகளைக்  கட்டும்  குத்தகையும்  அதற்குக்  கொடுக்கப்படலாம்  என  அறிவிக்கப்பட்டிருக்கிறது.

1எம்டிபி  இந்த  ஆலைகளில்  மின்சாரம்  தயாரித்து  அதை  டிஎன்பி-இடம்  கூடுதல் விலையில்  விற்க  முனையும்போது  உதவித்தொகை   குறைப்பு  என்ற  பெயரில்  அரசாங்கம் மின்கட்டணத்தை  உயர்த்தும்.

“ஒன்றை  நிச்சயமாக  சொல்வேன்: எதிர்காலத்தில் மின்கட்டணம்  உயரப் போகிறது. கேட்டால், ‘உதவித்தொகை  கொடுக்க  பணம்  இல்லை’  என்பார்கள். ஆனால், 1எம்டிபி-இடம்  கூடுதல்  விலைக்கு  மின்சாரம்  வாங்குவதுதான் உண்மைக்  காரணமாகும்.”

புவா,  நேற்றிரவு 1எம்டிபி  மீதான  கருத்தரங்கொன்றில்  பேசினார்.