பிஎன் பிரதிநிதிகள் டத்தோ பட்டம் பெற பணம் கொடுத்த சீன நிறுவனம்

Datukship - payments made

திரங்கானு, புக்கிட் பிசியில் இயங்கும் ஒரு சீன சுரங்க நிறுவனம் அச்சுரங்க வேலைகளைச் சுலபமாக்குவதற்காக பிஎன் அரசியல்வாதிகள் டத்தோ பட்டங்கள் பெறுவதற்கு பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளது.

சிஎஎ ரிசோர்ஸ்சஸ் என்ற நிறுவனத்தில் தலைமை செயல்முறை அதிகாரி லி யாங் அந்நிறுவனத்துடன் மறைமுகமான தொடர்புடைய அரசியல்வாதிகள் ஒவ்வொருவருக்கும் சுமார் யுஸ்$100,000 (ரிம336,501.90) கொடுத்துள்ளதாக நியுயோர்க் டைம்ஸ்சிடம் கூறினார்.

அச்செய்தி அறிக்கையின்படி, சீனாவிலுள்ள செல்வச் செழிப்புமிக்க இரும்புத் தொழிலதிபரின் 27 வயது மகனான லி, அரசியல்வாதிகள் மற்றும் அரச குடும்பத்தினர் ஆகியோருடன் உறவுகளை வளர்த்துக்கொள்ளும் அவரது திட்டப்படி இதனைச் செய்தாக கூறினார்.

“இவ்விரு தரப்பினரின் ஆதரவு இருந்தால், நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம், ஏனென்றால் இயற்கைவளங்கள் அனைத்தும் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது”, என்று லி கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

அந்த யுஎஸ் நாளிதழின் கூற்றுப்படி, மலேசியாவில் பின்பற்றப்படும் சர்வசாதாரணமான வழக்கத்தையே தாம் பின்பற்றியதாக லி மேலும் கூறினார்.

மோசமான தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் தரம்

சிஎஎ மலேசியாவில் இருக்கிறது ஏனென்றால் கடந்த மாதம் பெய்ஜிங் (சீனா) தொழில்துறையில் தொழிலாளர் உரிமைகளின் தரம், சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நல்லுறவு போன்றவற்றை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்திருந்தது என்று அச்செய்தி கூறுகிறது.

புக்கிட் பிசியில், தொழிலாளர்கள் சம்பந்தமாக எழக்கூடிய பிரச்சனைகளைத் தவிர்க்கும் பொருட்டு தொழிற்சங்க உறுப்பினர்கள் அல்லாத கம்போடியா, மியன்மார் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் தொழிலாளர்களை சிஎஎ வேலைக்கு அமர்த்துகிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

தொழிலாளர்கள் 12 மணி நேர பணிமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஏழு நாட்கள் வேலை செய்ய வேண்டும். அச்சுரங்க நிறுவனம் பெறும் வருமாணத்தின் அடிப்படையில் தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது என்று லீ தெரிவித்ததாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

அலுவலகப் பணியாளர்கள், கணக்கியலர்கள் மற்றும் பொறியிலாளர்கள் உட்பட, சீனாவிலிருந்து கொண்டுவரப்படுகின்றனர்.

சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்ய வேண்டியதைத் தவிர்ப்பதற்காக சிஎஎ சுரங்கத்தை இரண்டாகப் பிரித்துள்ளது, ஒவ்வொன்றும் 500 ஏக்கருக்கும் குறைவானது.

ஒரு காலத்தில் புக்கிட் பிசி சுரங்கம் உலகின் மிகப் பெரிய சுரங்கமாக விளங்கியது. இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பானிய எஃகுத் தொழிற்துறைக்கு தேவையான மூலப்பொருளை அளித்தது. அது 1971 ஆம் ஆண்டில் மூடப்பட்டது.