மசீச: பாஸ் ஹுடுட் கொண்டுவந்தால் டிஏபிக்கு சங்குதான்

schoolஎதிர்வரும்  அம்னோ  ஆண்டுக்  கூட்டத்தில்  சீனப்  பள்ளிகள்  பற்றிப்  பேசப்பட்டு  அதன் விளைவாக  அவை  மூடப்பட்டால்  மசீச-வின்   “கதையும்  முடிந்துபோகும்”  என்று  டிஏபி  எம்பி  இங் வெய்  ஏய்க்  கூறியதால் ஆத்திரமடைந்த  மசீச, கிளந்தானில்  பாஸ்  ஹுடுட்டைக்  கொண்டு  வந்தால்  சீனச் சமூகத்தினர்  டிஏபி-க்கு  “சங்கு ஊதி விடுவார்கள்”  எனப்  பதிலடி கொடுத்துள்ளது.

“சீனர்களை  பாஸுக்கு  வாக்களிக்கச்  சொன்னதே  டிஏபி-தானே. ‘பாஸுக்குப்  போடப்படும் ஒவ்வொரு  வாக்கும்  டிஏபி-க்குப்  போடப்படுவதற்கு  இணையாகும்’  என்று  கூறியது.

“இப்போது  பாஸ்  ஹுடுட்டை  வலுக்கட்டாயமாகக்  கொண்டுவர  விரும்புகிறது. டிஏபி-யை  நோக்கி  பக்கத்தானை விட்டு வெளியேறு  என்கிறது. ஆனால், டிஏபி, எல்லாவற்றையும்  வாயை  மூடிக்கொண்டுப்  பார்த்துக்  கொண்டுதான்  இருக்கிறது”, என  மசீச  விளம்பரப்  பிரிவுத்  தலைவரும்  செனட்டருமான சாய்  கிம்  சான்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

இங்,  மசீச-வைக்  குறை  சொல்லிக்  கொண்டிருக்காமல் தன் பக்கத்தான்  பங்காளிக் கட்சியான  பாஸ்  ஹுடுட்டைக்  கொண்டுவராமல் இருப்பதை உறுதி  செய்வதில்  முனைப்பு  காட்டுவது   நல்லது  என்றாரவர்.