ஜனாதிபதி தேர்தலால் தமிழருக்கு பயனில்லை!

இலங்கையின் கடந்த கால வரலாறுகளின் படி ஜனாதிபதி தேர்தல்களில் அரசியல் தலைவர்களை மாற்றுவதும் அரசுகளை மாற்றுவதும் மட்டுமே தமிழ் மக்களிற்கு எஞ்சியிருந்ததேயன்றி வேறு எதுவுமே கிட்டியிருக்கவில்லையென தெரிவித்துள்ளார் தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகப்பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன்.

தமிழ் சிவில் சமூக அமையம் அமைப்பு வடிவம் பெற்றுள்ளமை தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றிருந்தது.

அங்கு ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகப்பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன் ஆனால் அதற்காக அரசாங்க மாற்றத்திற்கு தமிழ் சிவில் சமூக அமையம் எதிரானதென்று அர்த்தப்படமுடியாதென மேலும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் இது பற்றி தெரிவிக்கையில் ஆட்சி மாற்றத்தினாலோ அரசியல் தலைவர்களை மாற்றுவதினாலோ எமக்கு என்ன பலன் கிடைத்துவிடப்போகின்றதெனவும் அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.

எம்மை பொறுத்தவரை முதன்மையானது பொறுப்புக்கூறலே. கடந்த காலங்களினில் இத்தகைய நேரங்களில் தான் எம்மீது மோசமான ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது. இதனை மனதிலிருத்தி முதலில் எமது பிரச்சினைகளை நாம் முன்னிறுத்தி குரல்கொடுக்க வேண்டும். மன்னாரில் கூட்டுக்கொலை செய்யப்பட்ட முன்னாள் போராளி நகுலேஸ்வரனிற்கு நீதி கேட்பதனைவிட அடுத்த எதிர்கட்சி பொது வேட்பாளர் யாரென்பதிலேயே நாமும் எமது ஊடகங்களும் முனைப்பு காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை தமிழ் தரப்பு எவரிற்கு ஆதரவளிக்கின்றதோ அவர்கள் பெரும்பான்மை மக்களிடையே தோல்வி பெறுகின்ற அரசியல் போக்கே 2005ம் ஆண்டின் பின்னரான சூழலில் இருப்பதனையும் அவர் நினைவு கூர்ந்தார்.

இவ்வூடக மாநாட்டில் மற்றொரு ஊடக பேச்சாளரான எழில் ராஜனும் பிரசன்னமாகியிருந்தார்.

தமிழ் சிவில் சமூக அமையத்தின் அழைப்பாளராக மன்னார் ஆயர் அதிவண கலாநிதி இராயப்பு ஜோசப் மற்றும் இணை செயலாளர்களாக பொ.ந.சிங்கம் மற்றும் தியாகராஜன் ராஜன் மற்றும் பொருளாளராக பேராசிரியர் வி.பி.சிவநாதனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜந்து வருடங்களாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு வழிகளில் குரல்கொடுத்து வந்த தமிழ் சிவில் சமூக வலையமைப்பு தமிழ் சிவில் சமூக அமையம் எனும் பெயரில் அமைப்பு வடிவம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிற்குமான அமையத்தின் இணைப்பாளர்களும் வடக்கு கிழக்கிற்கு வெளியேயான மாவட்டங்களிற்கு ஒரு இணைப்பாளரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

TAGS: