நைஜீரியா: பயங்கரவாதிகளால் 45 பேர் சுட்டுக் கொலை

Boko-Haram-leaderநைஜீரியாவின் கிராமம் ஒன்றில் போகோ ஹராம் என சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கித் தாக்குதலில் 45 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

அந்த நாட்டின் போர்னோ மாகாணத்திலுள்ள அஸாயா குரா என்னும் கிராமத்தில் இந்தத் தாக்குதல் புதன்கிழமை நிகழ்த்தப்பட்டதாக அந்தப் பகுதியின் ஊராட்சித் தலைவர் ஷெட்டிமா லாவான் தெரிவித்தார்.

இதுகுறித்து சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியதாவது:

பயங்கர ஆயுதங்களுடன் மதியம் 12 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) பயங்கரவாதிகள் மோட்டார் சைக்கிள்களில் கிராமத்துக்குள் வந்தனர்.

கிராமத்தினர் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டதுடன், வீடுகள், வாகனங்களுக்கும் அவர்கள் தீ வைத்தனர்.

இதில், 45 பேர் உயிரிழந்தனர்.

குண்டுக்காயங்களுடன் அருகிலுள்ள புதர்ப் பகுதிக்கு தப்பிச் சென்ற மேலும் சிலர், அதிக ரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்திருக்கலாம்.

பயங்கரவாதிகள் தீ வைத்ததில் கிராமத்திலிருந்த பாதிக்கும் மேற்பட்ட வீடுகள், 50 மோட்டார் சைக்கிள்கள், 4 கார்கள் சேதமடைந்தன.

தாக்குதலுக்குப் பின் எங்களிடமிருந்த உணவுப் பொருள்கள், கால்நடைகள் ஆகியவற்றை பயங்கரவாதிகள் எடுத்துச் சென்றனர் என்று கிராமவாசிகள் தெரிவித்தனர்.

நைஜீரியாவில் மத அடிப்படைவாத ஆட்சியை வலியுறுத்தி வன்முறையில் ஈடுபட்டுவரும் பயங்கரவாதிகள், போர்னோ மாகாணத் தலைநகர் மைடுகுரியிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பொதுமக்கள் மீது இதுபோன்ற தாக்குதல்களில் அடிக்கடி ஈடுபட்டு வருகின்றனர். -http://www.dinamani.com/