காதல்–கலப்பு திருமணங்கள் பதிவு விவகாரம்

tamilmarriage2மதுரை, நவ. 22– மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் கே.கே.ரமேஷ். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

சமீப காலமாக கவுரவ கொலைகள், காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் தற்கொலை செய்து கொள்வது, காதல் திருமணம் செய்து கொள்வோரின் பெற்றோர் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்வது, காதல் என்ற பெயரில் இளம்பெண்களை கடத்திச் செல்வது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசு தவறி விட்டது. காதல் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்படுகின்றனர்.

காதல் திருமணம் செய்து கொள்ளும் பெண்களை பெற்றோர் ஏற்றுக் கொள்ளாத நிலையில் வரதட்சணை கொடுமையால் எந்த ஆதரவும் இல்லாமல் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கலப்புத்திருமணம், காதல் திருமணத்தால் சில கிராமங்களில் வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன.

காதல் என்ற பெயரில் திடீரென்று வீட்டை விட்டு வெளியேறும் பெண்கள் எதிர்காலத்தை தொலைத்து விடுகின்றனர். காதல் விவகாரத்தில் சிக்கிய ஏராளமான பெண்கள் கவுரவ கொலை செய்யப்பட்டுள்ளனர். கவுரவ கொலைகளை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்து திருமணச்சட்டத்தில், பெண்ணின் திருமண வயது 18 என்றும், ஆணின் திருமண வயது 21 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்ளது. திருமணம் செய்வதற்கு இது ஏற்ற வயது இல்லை. இந்த வயதில் திருமணம் செய்து கொள்பவர்கள் பக்குவப்படாததால் திருமணமாகி 2 அல்லது 3 மாதங்களிலேயே விவாகரத்து செய்து கொள்கின்றனர்.

கவுரவ கொலை, தற்கொலை, விவாகரத்து போன்றவற்றை தடுக்க இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், போலீஸ் நிலையங்களில் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்வதையும், பதிவாளர் அலுவலகங்களில் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணங்களை பதிவு செய்வதையும் தடுக்க வேண்டும்.

எனவே, கோவில்கள், போலீஸ் நிலையங்களில் திருமணம் செய்வதற்காக வருபவர்கள் மற்றும் பதிவாளர் அலுவலகங்களில் திருமணத்தை பதிவு செய்ய வருபவர்கள் தங்கள் பெற்றோருடன் வர வேண்டும். திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும், திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என்றும் அனைத்து பதிவாளர் அலுவலகங்கள், கோவில் நிர்வாக அதிகாரிகள், போலீஸ் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம். வேலுமணி ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக உள்துறை செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், பதிவுத்துறை ஐ.ஜி., போலீஸ் டி.ஜி.பி., ஆகியோர் 2 வாரத்தில் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். -http://www.maalaimalar.com

TAGS: