யூபிஎஸ்ஆர் அறிவியல் பாட மறு தேர்வு: இது குறித்து கல்வி அமைச்சு துல்லியமாக ஆராய வேண்டும், சேவியர்

 

xavier3இவ்வாண்டு தமிழ்ப்பள்ளிகளின் யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள்  மிகுந்த ஐயத்துடன்  எதிர்பார்த்த ஒன்று. குறிப்பாக, சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து கிடைத்துள்ள தகவல்படி, இவ்வாண்டு தேர்ச்சி முடிவுகள் அறிவியல் பாடத்தில் ”ஏ ”  பெறாத மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது.

 

அதே வேளையில், கடந்த ஆண்டுகளைப் போன்று மாணவர்களின் உயர்வுக்குக் கைகொடுத்த ஆசிரியர்கள், சிறந்த தேர்ச்சியடைந்த மாணவர்கள், அதற்காக இரவு பகலாக உழைத்த பெற்றோர்கள் ஆகியோருக்கும், சிலாங்கூரை அடுத்து சாதனை புரிந்துள்ள ஜோகூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள் என்றார் அவர்.

 

இந்திய சமுதாயம், அதன் எதிர்காலச் சந்ததியினரின் வாழ்வும், வளர்ச்சியும்  கல்வியையே அதிகம் சார்ந்துள்ளதாக  நம்புகிறது. பல வீடுகளில் உண்ண உணவு இல்லாவிட்டாலும், பிள்ளைகளின்  கல்விக்குச் செலவிட, கல்விக்காக பல தியாகம் செய்யத் தயங்குவதில்லை. அதனால் கல்வியில் ஏற்படும் தடங்களை இந்திய சமுதாயம் ஒரு போதும் சகித்துக் கொள்ளாது.

 

அதிகமான இந்திய மாணவர்களின் தேர்வு தமிழ் தொடக்கப்பள்ளிகளாக இருப்பதால், தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேம்பாடு மீது இந்திய சமுதாயம் அதிகக் கவனம் செலுத்துகிறது. கடந்த ஆண்டுகளைப் போன்று தொடர்ந்து வளர்ச்சியடைந்து வர வேண்டும் நமது பள்ளிகள். குறிப்பாக, நாட்டில் அதிக ”ஏ’ க்களை பெறும் பள்ளிகளாக சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் விளங்கி வருவதுடன், தேர்வு விகிதாச்சாரமும், சீனப்பள்ளிகளுக்கு ஈடாக உயர வேண்டும் என்றார் அவர்.

 

ஆனால், இவ்வாண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவு, திருப்திகரமானதாக அமையவில்லை.  அதற்கு முற்றாகப் பள்ளிகளை மட்டும் குறைப்பட்டுக் கொள்ளமுடியாது. தேர்வுத் தாள்கள்  முன்கூட்டியே வெளியானதும், மாணவர்கள் மீண்டும் தேர்வுக்கு  அமர நேர்ந்ததும் எந்த வகையில் மாணவர்களைப் பாதித்தது, அதற்காகத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்  தண்டிக்கப் படுகிறார்களா என்ற கேள்வியையும், அறிவியல் பாட தேர்வில் ஏற்பட்ட சரிவுடன்  ஒப்பிட பெற்றோர்கள் தயங்கவில்லை. ஆகையால் இது குறித்துக் கல்வி  அமைச்சு துல்லியமாக ஆராய வேண்டும்.

 

மலாய் கல்விமான்களும், சில மொழி வெறியர்களும் தமிழ், சீன தொடக்கப்    பள்ளிகளை மூட வேண்டும் என்று கூப்பாடு போட்டுவரும் இவ்வேளையில், இது போன்ற முடிவுகள் நிச்சயமாக இந்தியர்களின் மனதில் சந்தேகத்தைக் கிளப்பிவிடும் என்பதால். சுயேட்சையான ஒரு குழுவின் வழி விசாரணை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

முன்பு சிலாங்கூரில் பல தமிழ்ப்பள்ளிகள் யூ.பி.எஸ்.ஆர் சிறப்பு வகுப்புகளுக்காக மாநில அரசின் நிதி உதவியைப் பெற்று வந்தன. அப்படிப்பட்ட நிதி உதவிகள் அக்கறையற்ற சிலரின் செயலால் முடங்கி விட்டதாக இப்பொழுது சில பள்ளிகள் குறைபட்டுக் கொள்கின்றன. சமுதாய விரோதச் சக்திகள் எல்லாக் காலங்களிலும் நம்முடன்  இருந்து கொண்டுதான்  இருக்கும், ஆனால் பிள்ளைகளின்  மேம்பாடுகளை மட்டும் கவனத்தில் கொண்டு பெற்றோர்கள்தான் முழு கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றார்.

 

நம் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நாம் தொடர்ந்து போராட்டம் நடத்தியே ஆகவேண்டும். யூ.பி.எஸ்.ஆர் தேர்வுக்குத் தயார் படுத்தும் சிறப்பு வகுப்புகளை வருட ஆரம்பத்திலேயே தொடங்கி விடுங்கள். அதற்கான உதவித் தொகை கோரிக்கையையும்  ஆண்டு தொடக்கதிலேயே கல்விக்குப்  பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினர் நிக் நஸ்மிநிக்அஜிஸ் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அதில் அவரது உதவி தேவைப்பட்டால் அவர் உதவத் தயாராக இருப்பதாகவும், அது குறித்து அவர் கல்விக்குப் பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினரைச்  சந்திக்கவுள்ளதாகவும் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார்.