சட்டத்தில் இல்லாத சட்டத்தின் கீழ் பாதிரியாரிடம் விசாரணை நடத்திய ஜொகூர் போலீஸ்

 

struckout law1“அல்லா” என்ற சொல் அடங்கிய துதிப் பாடல் புத்தகங்களை வைத்திருந்த ஒரு பாதிரியாரை சட்டத்திலிருந்து அகற்றப்பட்ட ஒரு சட்டத்தின் கீழ் விசாரித்த போலீசார் ஒரு பெரும் தவறை புரிந்துள்ளனர்.

பாதிரியார் சிரில் மன்னயாகம் தண்டனைச் சட்டத் தொகுப்பு செக்சன் 298A கீழ் விசாரிக்கப்பட்டார் என்று ஜொகூர் மாநில போலீஸ் கூறியது.

ஆனால், அந்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று 1988 இல் அறிவிக்கப்பட்டு அகற்றப்பட்டது என்று வழக்குரைஞர் என்ரூ கூ மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

மாமாட் பின் டாவுட்டுக்கும் மலேசிய அரசாங்கத்திற்கும் இடையிலான (1988)  வழக்கில் அன்றைய உச்சநீதிமன்றம் (Supreme Court) தண்டனைச் சட்டத் தொகுப்பு செக்சன் 298A அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று தீர்ப்பளித்தது.

செக்சன் 298A இன் கீழ் தடுத்து வைப்பது அல்லது பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகள போலீசார் எடுக்க முடியாது ஏனென்றால் அதுstruckout law2 சட்டவிரோதமானதாகும் என்று கூ கூறினார்.

அந்த செக்சன் தண்டனைச் சட்டத் தொகுப்பிலிருந்து அகற்றப்பட்டு விட்டதால் சட்ட நுணுக்கப்படி அது நடப்பில் இல்லை என்று கூ மேலும் கூறினார்.

பாதிரியார் சிரிலின் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக அவர் டிசம்பர் 5 இல் தடுத்து வைக்கப்பட்டார், “Mari Kita Memuji Allah Kita” என்ற தலைப்பைக் கொண்ட அவருக்கு சொந்தமான 31 துதிப் பாடல் புத்தகங்களையும் அவரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் தவறு செய்து விட்டனர். அதன் பின்னர் அவர்கள் இந்த விவகாரத்தில் முனைப்பு காட்டக்கூடாது என்று கூ கூறினார்.