ஐஜிபி-க்கு உயர் நீதிமன்றம் இட்ட உத்தரவு முறையீட்டு நீதிமன்றத்தில் தள்ளுபடி

appealஎம். இந்திரா காந்தியின் பிள்ளையைக் கண்டுபிடித்து அவரிடமே  ஒப்படைக்க  வேண்டும்  அத்துடன்  பிள்ளையைத்  தூக்கிச்  சென்ற அவரின் மதம்  மாறிய  முன்னாள்  கணவரைக் கைது  செய்ய  வேண்டும்  என்ற  ஈப்போ  உயர்  நீதிமன்றத்தின்  உத்தரவுக்கு  எதிராக  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்(ஐஜிபி) காலிட்  அபு  பக்கார்  செய்திருந்த  முறையீட்டை  ஏற்றுக்கொண்ட  மேல்முறையீட்டு  நீதிமன்றம்  உயர்நீதிமன்ற  உத்தரவைத்  தள்ளுபடி  செய்தது.

மேல்முறையீட்டை  விசாரித்த  மூவரடங்கிய  நீதிபதிகள்  குழு  2க்கு 1 என்ற  பெரும்பான்மை  முடிவில்  காலிட்டுக்குச்  சாதகமாக  தீர்ப்பளித்தது.

நீதிபதிகள்  அப்துல்  அசீஸ் அப்ட்  ரஹ்மானும்  அஹ்மடி அஸ்நாவியும்  காலிட்டின்  முறையீட்டை  ஏற்றுக்கொண்டனர். நீதிபதி  தெங்கு  மைமுன்  துவான்  மாட்  மட்டும் அதை  ஏற்கவில்லை.

இதனிடையே, இதே  முறையீட்டு  நீதிமன்றம்  இன்னொரு  வழக்கில் மதம்  மாறிய  இஸ்வான்  அப்துல்லா, குழந்தைகளை  தன்   முன்னாள்  இந்து மனைவி  எஸ்.தீபாவிடம்  ஒப்படைக்க  வேண்டும்  என  சிரம்பான்  உயர்  நீதிமன்றம்  அளித்திருந்த  தீர்ப்புக்கு  எதிராக செய்திருந்த  மேல்முறையீட்டைத்  தள்ளுபடி  செய்தது.

வழக்குச்  செலவாக ரிம10,000  கொடுக்குமாறும்  அது  உத்தரவிட்டது.

சிவில்  நீதிமன்றத்தில்  முறைப்படி  செய்துவைக்கபட்ட ஒரு திருமணத்தைக்  கலைக்கும்  அதிகாரம்  ஷியாரியா  நீதிமன்றத்துக்கு  இல்லை  என  மேல்முறையீட்டு  நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.

“முறையீட்டை  இரத்துச்  செய்கிறோம். குழந்தைகளை  யார்  பொறுப்பில்  ஒப்படைப்பது  என்பதை   முடிவு செய்யும்  அதிகாரம்  சிவில்  உயர்  நீதிமன்றத்துக்கு  உண்டு”, என  மூவரடங்கிய  நீதிபதிகள்  குழுவுக்குத்  தலைமை தாங்கிய  அப்துல் அசீஸ்  தீர்ப்பில்  கூறினார்.