ஆசிரம குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட 3 பேர் தற்கொலை

aurobindo
ஆசிரம நிர்வாகத்தின் மீது இந்தச் சகோதரிகள் பல புகார்களைக் கூறிவந்தனர்.

 

புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரம குடியிருப்பில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்ட 5 சகோதரிகளும் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் 3 பேர் பலியாகினர். 4 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரவிந்தர் ஆசிரமத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு புதுச்சேரியில் உள்ள வாழைக்குளம் பகுதியில் உள்ளது. இதில், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஹேமலதா பிரசாத், அவரது சகோதரிகள் ஜெயஸ்ரீ, அருணாஸ்ரீ, ராஜ்யஸ்ரீ, நிவேதிதா ஆகியோர் சிறு வயதில் இருந்தே தங்கி இருந்து வந்தனர்.

இவர்களில் ஹேமலதா பிரசாத் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே ஆசிரம நிர்வாகத்தின் மீது பல புகார்களைத் தெரிவித்து வந்தார். இதையடுத்து, இவர்கள் ஐந்து பேரையும் வெளியேற ஆசிரம நிர்வாகம் உத்தரவிட்டது.

இவர்கள் வெளியேற மறுத்ததையடுத்து, ஆசிரம நிர்வாகம் நீதிமன்றத்தை நாடியது. இறுதியாக இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 8ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சகோதரிகள் உடனடியாக ஆசிரம குடியிருப்பை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், ஹேமலதா நேற்று ஆசிரம குடியித்தின் மாடியில் ஏறி நின்று, தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். பின்னர் காவல்துறையினர் அவரை மீட்டனர். அதற்குப் பிறகு ஆசிரமத்திலிருந்து வெளியேறிய 5 சகோதரிகளும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று காலை 5 சகோதரிகளும் அவர்களது பெற்றோரும் காலாபேட்டில் தந்திராயன் குப்பத்தில் உள்ள கடலில் விழுந்து தற்கொலைக்கு முயன்றனர். அங்கே இருந்த மீனவர்கள் இவர்களில் 4 பேரை மீட்டனர்.

சாந்தி ஸ்ரீ, அருணாஸ்ரீ, ஜெயஸ்ரீ ஆகிய மூன்று பேரது உடல் விழுப்புரம் மாவட்டத்தில் கரை ஒதுங்கியது. மீட்கப்பட்டவர்கள் அனைவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசும் நீதிமன்றங்களும் இந்தச் சகோதரிகள் கூறிய புகார்கள் பற்றி நடவடிக்கை எடுக்காததுதான் இவர்களது உயிர் பறிபோகக் காரணம் என புதுச்சேரியிலிருக்கும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் கோ. சுகுமாரன் பிபிசியிடம் கூறினார்.

20ஆம் தேதி முழு அடைப்பு

இந்த தற்கொலைச் சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதுச்சேரியில் இயங்கிவரும் சில சமூக நல இயக்கங்கள், அரசியல் கட்சிகள் இணைந்து இந்த விவகாரம் குறித்து இன்று ஆலோசனை நடத்தினர்.

பல புகார்களை சந்தித்துவரும் அரவிந்தர் ஆசிரமம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, வரும் 20ஆம் தேதி முழு அடைப்பு நடத்துவதற்கு முடிவுசெய்யப்பட்டிருப்பதாக சுகுமாரன் கூறினார்.

அரவிந்தர் ஆசிரமத்திற்கு சீல் வைக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று காலையில், நாம் தமிழர், தந்தை பெரியார் இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரவிந்தர் ஆசிரமத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில், அசிரமத்தின் கண்ணாடிகளும் சில பொருட்களும் சேதமடைந்தன. ஆசிரமத்திற்கு காவல்துறையினர் பாதுகாப்பளித்து வருகின்றனர். -BBC

TAGS: